கோவிட்-19 அவசரச் சிகிச்சையில் முதல் ‘மேட் இன் இந்தியா’ மருந்து- கிரண் மசூம்தார் ஷா
தீவிர பிளேக், சோரியாசிஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பயோகான் நிறுவனத்தின் ALZUMAb மருந்தினை கோவிட்-19 சிகிச்சைக்கு வழங்க DGCI அனுமதி அளிக்கப்பட்டுள்ளது!
2013ம் ஆண்டு 'பயோகான்' நிறுவனம் தீவிர பிளேக், சோரியாசிஸ் சிகிச்சைக்காக Andi-CD6 IgG1 மோனோக்ளோனல் ஆண்டிபாடியான ALZUMAb அறிமுக்கப்படுத்தியது. இதை கோவிட்-19 நோயாளிகளுக்கான அவசரச் சிகிச்சைத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (DGCI) கடந்த வாரம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனமான ‘Biocon Ltd' நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கிரண் மசூம்தார் ஷா இதுகுறித்து மகிழ்ச்சியடைந்துள்ளார்.
“இந்தியர்களுக்கு புதுமை படைக்கும் திறன் இல்லை என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் இந்தியர்களின் சாதனை படைக்கும் திறனுக்கு இந்த மருந்து ஒரு உதாரணமாக உள்ளது,” என்று கிரண் மசூம்தார் ஷா யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சிஇஓ ஷ்ரத்தா ஷர்மாவிடம் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு சைடோகின்ஸ் உருவாவது முக்கியக் காரணம். இந்த வைரஸ் ஆண்டிபாடி (Anti-body) உற்பத்தியைத் தூண்டி கட்டுப்பாடின்றி பெருமளவில் சைடோகின்ஸை உருவாக்க டி-செல்களைத் தூண்டுகிறது. இதனால் ஆட்டோ இம்யூன் பிரச்சனைகள் ஏற்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழப்பு ஏற்படுகிறது.
கோவிட்-19 பாதிக்கப்பட்ட நோயாளிகளில் மிதமான முதல் தீவிர சுவாசப் பிரச்சனை இருப்பவர்களுக்கு CRS (Cytokine release syndrome) சிகிச்சைக்கு ALZUMAb பயன்படுத்த DCGI அனுமதியளித்துள்ளது.
இந்த மருந்து ஆட்டோ இம்யூனோ நோய்களுக்கான சிகிச்சைக்கு சிறப்பான பலனளிக்கும் என்கிறார் கிரண். சோரியாசிஸ், ருமடாய்டு ஆர்தரைடிஸ், GvHD, தீவிர ஆஸ்துமா, லூபஸ் நெஃப்ரிடிஸ் ஆகிய நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு இந்த மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
“பல ஆண்டுகளாக சோரியாசிஸ் பாதிக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி ஒருவரை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்திற்காக என்னிடம் நன்றி தெரிவித்தார்,” என்று கிரண் நினைவுகூர்ந்தார்.
இதற்கு முன்பு இந்தியாவில் பல மருத்துவர்கள் இந்த மருந்தைப் பயன்படுத்தவில்லை. சோரியாசிஸ் சிகிச்சைக்கு மேற்கத்திய மருந்துகளையே சார்ந்திருந்தனர். எனினும் கோவிட்-19 சிகிச்சையின்போது இந்த மருந்து நோயாளிகளுக்கு சிறந்த பலனளிப்பது தெரியவந்துள்ளது. இதனால் சிகிச்சைக்கான செலவும் குறைகிறது.
“இந்த மருந்து இம்யூனோமாடுலேட்டர் என்பதால் கோவிட்-19 சிகிச்சைக்குப் பலனளிக்கும் என்று எண்ணினோம்,” என்று கிரண் விவரித்தார்.
கிரண் 1978ம் ஆண்டு பயோடெக்னாலஜி நிறுவனத்தை தனது கேரேஜில் 10,000 ரூபாய் விதை நிதியுடன் தொடங்கினார். அந்த சமயத்தில் பெண்கள் இந்தப் பிரிவில் அதிகம் செயல்படவில்லை.
அப்போதிருந்து மருத்துவத் துறையில் இவரது பங்களிப்பு சிறப்பாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. ஒரு தொழில்முனைவராகவும் புதுமையான வணிகத் தலைவராகவும் திறம்பட செயல்பட்டு ‘தி மெடிசன் மேக்கர் பவர் லிஸ்ட் 20’ பட்டியலில் 2015-ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக இடம்பெற்று வருகிறார்.
ALZUMAb மருந்து நாயர் மருத்துவமனை, KEM மருத்துவமனை, LNJP, எய்ம்ஸ் என மும்பை மற்றும் டெல்லியில் நான்கு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்யப்பட்டது. 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் இந்த மருந்து மூலம் பலனடைந்துள்ளனர் என்றார் கிரண்.
கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் நுரையீரல் வீக்கத்தை குறைக்க ALZUMAb உதவும் என்கிறார் கிரண். நோயாளிகள் செயற்கை சுவாசக் கருவிகள் ஏதுமின்றி சுவாசிக்க இது உதவுகிறது. நோயாளிகளுக்குச் சிகிச்சைக்காக இந்த மருந்தைப் பயன்படுத்திய பல மருத்துவர்கள் இதை உறுதிபடுத்தியுள்ளனர்.
சிப்ளா, க்ளென்மார்க் போன்ற பல்வேறு மருந்து நிறுவனங்கள் கோவிட்-19 சிகிச்சைக்காக ஃபேபிஃப்ளூ (Fabiflu), ரெம்டெசிவிர் (Remdesivir) போன்ற மருந்துகளைத் தயாரித்துள்ளன. எனினும் உள்நாட்டு தயாரிப்பான ALZUMAb கொரோனா வைரஸ் நோயாளிகளின் உயிரைக் காக்கும் விதத்தில் மாற்றத்தைக் கொண்டு சேர்த்துள்ளது என்கிறார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு, GvHD சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் இந்த மருந்தைப் பயன்படுத்த மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
“முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்தினை உலகெங்கும் கொண்டு சேர்க்க உள்ளோம் என்பதில் பெருமை கொள்கிறேன். இது உயிர்காக்கும் மருந்து. அதிலும் குறிப்பாக உலக நாடுகள் முழுவதும் செய்வதறியாது திகைத்துள்ள நிலையில் இந்த மருந்து உயிர் காக்க உதவுகிறது. இந்த மருந்து பலனளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.
துரதிர்ஷ்ட்டவசமாக பாரபட்சமான கருத்துக்களால் நமது புதுமைப் படைக்கும் திறன் வெளிப்படுவதில்லை என்றார்.
“நாட்டில் திறமையானவர்கள் பலர் உள்ளனர். விஞ்ஞானிகளையும் ஆராய்ச்சியாளர்களையும் நாம் கொண்டாடுவதில்லை. அவர்கள் திறம்பட புதுமை படைப்பதற்கான வாய்ப்புகளை நாம் வழங்குவதில்லை. அத்தகைய எதிர்மறையான போக்கு காணப்படுகிறது,” என்றார் கிரண்.
ஆங்கில கட்டுரையாளர்: சுமன் சிங் | தமிழில்: ஸ்ரீவித்யா