இன்று முதல் மீண்டும் ‘ப்ளூ டிக்’ - ஐபோன் பயனர்களுக்கு எலான் மஸ்க் கொடுத்த ஷாக்!
இன்று முதல் ப்ளூ டிக் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சந்தா விவரங்கள் முதல் சிறப்பம்சங்கள் வரை அறியலாம்...
உலகிலேயே மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், பிரபலமான ட்விட்டர் தளத்தை வாங்கிய பிறகு, பல சர்ச்சைக்குரிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ட்விட்டர் நிர்வாகத்தில் இருந்த உயர் அதிகாரிகளைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
பின்னர், ட்விட்டர் நிறுவனத்தின் கடும் கட்டுப்பாடுகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பணியை விட்டு வெளியேறினர்.
அதுவரை செய்தது போதாது என்று எலான் மஸ்க், 'யார் வேண்டுமானாலும் ட்விட்டர் ப்ளூவை விலை கொடுத்து வாங்கலாம்' என்ற முறையை அறிமுகப்படுத்தினார். இதற்கு உலகம் முழுவதும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ட்விட்டர் கணக்குகளைச் சரியாகச் சரிபார்க்கத் தவறுவது, பல பிரச்சனைகளுக்குக் காரணமாக அமையும் என்பதால் மாதச் சந்தா முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்தார்.
ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், ட்விட்டரின் புளூ டிக் கணக்குச் சேவைகளுக்கு பயனர்கள் மாதத்திற்கு $8 செலுத்த வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் அறிவித்தார். இந்த அறிவிப்பு ட்விட்டர் பயனர்கள் இடையே பெரும் சர்ச்சையை கிளப்பியதை அடுத்து அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டது.
அப்போது ட்வீட் செய்திருந்த எலான் மஸ்க், "ப்ளூ டிக் மறுவெளியீட்டை தற்காலிகமாக நிறுத்திவைக்கிறோம். ஒரு போலி நபர் கூட இல்லை, ஆள்மாற்றாட்ட பிரச்சினையை இல்லை என்ற நம்பிக்கை வந்தபின்னர் இதுபற்றி பரிசீலிப்போம்," எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று முதல் ப்ளூ டிக் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ஐபோன் யூஸர்களுக்கு அதிர்ச்சி:
டிவிட்டரில் ப்ளூ டிக் அம்சத்தை பெற சந்தா கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு முதல் முறையிலேயே தோல்வி அடைந்த நிலையில், மீண்டும் எலான் மஸ்க் அதனை இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் அறிவிப்பின்படி, சாதாரண பயனர்கள் மாதம் 8 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 656 ரூபாயும், ஐபோன் பயனர்கள் மாதம் 11 டாலர்களும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“நாங்கள் ட்விட்டர் ப்ளூ டிக்கை திங்கட்கிழமை முதல் மறுதொடக்கம் செய்கிறோம் - $8/மாதம் அல்லது iOS இல் $11/மாதம் என்ற விலையில் இணையத்தில் சந்தா செலுத்துங்கள்,” என நிறுவனம் அறிவித்துள்ளது.
சந்தா கட்டினால் என்ன கிடைக்கும்?
- பிரீமியம் சேவையைத் தேர்ந்தெடுக்கும் சந்தாதாரர்களுக்கு எடிட் பட்டன், 108P வீடியோவை பதிவேற்றும் வசதி, ரீடர் மோட், ப்ளூ டிக் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் கிடைக்கும்.
- சந்தாதாரர்கள் தங்கள் ஹேண்டில், அக்கவுண்டின் பெயர் அல்லது சுயவிவரப் புகைப்படத்தை மாற்ற முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும்,
"அவர்கள் அவ்வாறு செய்தால், அவர்களின் கணக்கு மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும் வரை அவர்கள் ப்ளூ டிக் அடையாளம் தற்காலிகமாக நிறுத்தப்படும்..." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிப்படியாக அதிகாரப்பூர் டிக் மார்க்கின் நிறம் மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிற பொது நபர்களின் சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு ப்ளூ டிக் வழங்கப்பட உள்ளது. நிறுவனங்களுக்கு ’கோல்ட் டிக்’ மார்க்கும், அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ’கிரே டிக்’ மார்க்கும் வழங்கப்படும் அறிவிக்கப்படுள்ளது.
இதனிடையே, சமீபத்தில் ட்விட்டர் யூஸர் ஒருவர் "எலான் ட்விட்டர் எழுத்துக்களை 280ல் இருந்து 4000 ஆக அதிகரிக்க உள்ளது என்பது உண்மையா?" எனக் கேட்டதற்கு, மஸ்க், "ஆம்" என்று பதிலளித்தார். இதன் மூலம் விரைவில் சந்தாதாரர்கள் ட்விட்டர் எழுத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க உள்ளது தெரியவந்துள்ளது.
‘ப்ளூ டிக்’ தொடர ரெடியா இருங்க - மூன்று கலர் டிக் அடுத்த வாரம் அறிமுகம்!