சிற்றூரில் பிறந்து, கல்லூரியை பாதியில் விட்டு, 22 வயதில் கோடீஸ்வரர் ஆன ‘ஓயோ ரூம்ஸ்’ ரித்தேஷ்!
நக்சல் நடமாட்டம் அதிகமுள்ள ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரித்தேஷ் அகர்வால் இளமைக் காலத்தில் சிம்கார்டு விற்று வந்துள்ளார். கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தொழில்முனைவை கையில் எடுத்தவர் 19 வயதிலேயே ஓயோ ரூம்ஸ் நிறுவி 22 வயதில் மில்லியனராகி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
ஹாஸ்பிடாலிட்டியில் நம்பர் ஒன் நிறுவனங்களுக்குப் போட்டியாக வளர்ந்து நிற்கும் ’ஓயோ ரூம்ஸ்’ 'OYO Rooms' ஒடிசாவைச் சேர்ந்த 25 வயது இளைஞரின் முயற்சிக்கான பரிசு. 19 வயதில் தொழில்முனைவில் தடம் பதித்த ரித்தேஷ், 22 வயதில் உலகின் இளம் தொழில்முனைவர், இளம் கோடீஸ்வரர் என்று அனைவராலும் கொண்டாடப்படுகிறார்.
இந்தியாவில் பட்ஜெட்டிற்கு ஏற்ற தரமான தங்குமிட வசதிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைப்பதில் சிரமம் இருப்பதை உணர்ந்து இதற்கான தீர்வாக 2013ல் ஓயோ ரூம்ஸ் (oyo rooms) என்ற ஸ்டார்ட் அப்பை தொடங்கினார் ரித்தேஷ் அகர்வால். ஒடிசாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செல்போன் சிம்கார்டுகள் விற்றவர் இன்று உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான மசயோஷி சாப்ட் பேங்க் ஓயோ ரூம்ஸ் உடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்து சீனாவில் இதன் சேவையை விரிவாக்கம் செய்துள்ளது.
22 வயதில் மில்லியனராகியுள்ள இந்த ரியல் ஹீரோவின் வாழ்க்கை மிகவும் எளிமையானது. ஒடிசாவின் பிஸ்ஸம் கட்டாக்கில் நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர் ரித்தேஷ். ராயகடாவில் பள்ளிப்படிப்பை படித்த இவர், இளமைக்காலத்தில் படு சுட்டி. ஆனால் கற்றல் திறன் மட்டும் மற்ற குழந்தைகளைவிட ரித்தேஷை தனித்து காட்டியது.
இவருக்கு பிடித்ததெல்லாம் கம்ப்யூட்டரை பிரித்து மேய்வது, தவறு செய்ய வாய்ப்புகளை தேடுவது என்பது தான். ஏனெனில் தவறு செய்ய வாய்ப்பு கிடைத்தால் தான் புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும் என்று நினைத்தார். இவரின் இந்த புரிதலே சிறு வயதிலேயே மென்பொருள் (software) கற்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
கல்விக்கும் அறிவுக்கும் தொடர்பில்லை ஆர்வமிருந்தால் போதும் எந்த வயதிலும் எதையும் செய்ய முடியும் என்பதற்கான உதாரணம் ரித்தேஷ், தனது சகோதரனின் கம்ப்யூட்டர் புரோகிராமிங் தொடர்பான புத்தகங்களை படிக்கத் தொடங்கி தனது மென்பொருள் தேடலுக்கான தாகத்தை தீர்த்துக் கொள்ள முயன்றதன் விளைவு 8 வயதிலேயே கோடிங் செய்வதை தொடங்கியுள்ளார். பத்தாம் வகுப்பு முடித்த பிறகு கம்ப்யூட்டர் கோடிங் தான் தனது எதிர்காலம் என்பதை உணர்ந்தார் ரித்தேஷ்.
2009ம் ஆண்டு கோடாவில் இருந்த ஐஐடியில் கல்லூரிப் படிப்பில் சேர்ந்தவர் இடையிடையே பன்சால் டுடோரியலிலும் படித்து வந்தார். கல்லூரி நாட்களில் ஓய்வு கிடைக்கும் போது பயணிப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார் ரித்தேஷ்.கோடாவில் படித்து தெரிந்து கொள்ள ஒன்றும் புதிதாக இல்லை என்று நினைத்தவர் கல்லூரிப்படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு 2011ம் ஆண்டில் தொழில்முனைவு பாதையை டெல்லியில் இருந்து தொடங்கி இருக்கிறார்.
நான் 8வது படிக்கும் போது ஆசிரியர் நாங்கள் என்னவாக வர வேண்டும் என்று கேட்டார். ஒவ்வொருவரும் டாக்டர், என்ஜினியர் என்று சொல்ல நான் மட்டும் entrepreneur என்று சொன்னேன். அந்த வார்த்தைக்கான அர்த்தம் அப்போது தெரியவில்லை என்றாலும் அதன் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது என்கிறார் ரித்தேஷ்.
18 வயதில் ஆரவெல் ஸ்டேஸ் என்ற இணையதளத்தை நடத்தி வந்தவர் AirBnB என்ற ஹோம் ஷேரிங் இணையபக்கத்திற்கு இந்திய பிரிவின் சார்பில் பணியாற்றி வந்தார். இதன் மூலம் வென்ச்சர் நர்சரி என்ற நிறுவனத்துடன் கிடைத்த தொடர்பு மூலம் மும்பைக்கு பறந்து சென்று நிறுவனத்திற்கான தொடக்க நிதியான ரூ. 30 லட்சத்தை பெற்றுள்ளார்.
ஆரவெல் நடத்தி வந்த போது ரித்தேஷ் ஏறத்தாழ 100 விடுதிகளில் தங்கி இருந்துள்ளார். இந்த அனுபவம் ஆரவெல் இணையதளம் ஏன் பிரபலமடையவில்லை என்ற காரணத்தை புரிந்து கொள்ள அவருக்கு உதவியாக இருந்துள்ளது.
“இந்தியாவில் ரூம் புக்கிங் வசதி தரும் இணைய பக்கங்கள் தரத்திற்கான உத்திரவாதம் அளிக்காததே வெற்றி பெறாததற்கான காரணம் என்பதை முதலில் நான் கண்டறிந்தேன் என்கிறார் ரித்தேஷ்.
இதே காலகட்டத்தில் தான் ரித்தேஷ் அகர்வாலுக்கு தியல் ஃபெல்லோஷிப் கிடைத்துள்ளது. 20 வயதிற்கு கீழ் இருக்கும் கல்லூரி இடைநிற்றல் மாணவர்களை தொழில்முனைவர்கள் ஆக்குவதற்காக இந்த நிதியுதவியானது அளிக்கப்படுகிறது. முகநூலின் முதன்மை முதலீட்டாளர் மற்றும் பே பால் இணை நிறுவனர் பீட்டர் தியல் இணைந்துஅளிக்கும் நிதியுதவி ரித்தேஷிற்கு கிடைத்தது. 2 ஆண்டுகள் மாதத்திற்கு ரூ. 2.7 லட்சம் நிதி மற்றும் தொழில்முனைவுக்கான பயிற்சிகள் இதில் அடங்கும்.
“தியல் நிதியுதவியின் மூலம் நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய விஷயம் யாருமே யோசிக்காத ஒன்றை பெரிதாக யோசிக்க வேண்டும், அதன் மூலம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே.”
ஆரவெல் மூலம் கிடைத்த இந்த நிதியுதவியை சரியாக பயன்படுத்த நினைத்தவர் அதன் தோல்விகளுக்கான தீர்வுகளைத் தருபவையாக ’ஓயோ ரூம்ஸ்’க்கான வடிவத்தை திட்டமிடத் தொடங்கியதாகக் கூறுகிறார் ரித்தேஷ்.
இந்தியாவில் சுற்றுலா செல்பவர்கள் சந்திக்கும் பிரச்சனை தங்குமிடம். நானே பல முறை அதிக பணம் கொடுத்து மோசமான விடுதியிலும் குறைவான விலையில் தரமான விடுதியிலும் தங்கி இருக்கிறேன். இணையபக்கத்தில் காட்டும் விடுதியே நிஜத்திலும் இருக்கும் என 100 சதவிகிதம் உறுதியாக சொல்ல முடியாது. அதற்கான உத்திரவாதத்தை சுற்றுலா செல்பவர்களுக்குத் தருவது எப்படி என யோசித்துள்ளார் ரித்தேஷ்.
தங்குமிடம் புக் செய்பவர்களுக்கு இருக்கும் இடர்பாடுகளை களைந்து வரைமுறைபடுத்தி வலைதளம் மூலம் மக்களை சென்றடைந்தால் வெற்றி பெறலாம் என்று சிந்தித்து 2013ம் ஆண்டில் தனது ஆரவெல் பக்கத்தை ’ஓயோ ரூம்ஸ்’ என்று பெயர்மாற்றம் செய்து புது வடிவம் தந்துள்ளார். தங்கும் விடுதிகளுடன் கைகோர்த்து இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் ஓயோ ரூம்ஸ்ல் விடுதி புக் செய்பவர்களுக்கு பட்ஜெட் விலையில் ஒரே மாதிரியான வசதிகளை அளிப்பதே இதன் நோக்கம்.
குர்கானில் ஒரே ஒரு ஹோட்டலுடன் கைகோர்த்து செயல்படத் தொடங்கிய ஓயோ ரூம்ஸ் தற்போது இந்தியாவில் 260 நகரங்களில் 8,500 ஹோட்டல்களுடன் கைக்கோர்த்து சுற்றுலாவாசிகளுக்கு தங்குமிட வசதியை ஏற்படுத்தித் தருகிறது.
ஓயோ என்பதன் விளக்கம் on your own என்று குறிப்பிடுகிறார் ரித்தேஷ். நமது விருப்பத்திற்கு ஏற்ற ஒன்று என்ற சிந்தனை உதித்தது டிவி ரிமோட் மூலம் என்று அவர் கூறுவது சிறுபிள்ளைத் தனமாகக் கூட சிலருக்குத் தோன்றலாம்.
“ஒரு சமயம் உறவினர்கள் வீட்டில் இருந்த போது அவர்கள் வீட்டில் டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு கார்ட்டூன் பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் எனது விருப்பத்திற்கு ஏற்ற சேனலை பார்க்க ரிமோட் என்னிடம் இல்லையே என நினைத்தேன், இதே பார்முலாவைத் தான் சுற்றுலாவிற்கு செல்லும் போது பயணிகள் தங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற தங்குமிடம் என்ற புள்ளியை நோக்கி ஓயோ ரூம்ஸை வடிவமைத்தாக கூறுகிறார்”.
ஹோட்டல் பிசினஸில் இறங்கிய பின்னர் எடுத்த எடுப்பில் முதலாளி என்ற கர்வம் காட்டாமல் களத்தில் இறங்கி வேலை செய்துள்ளார் ரித்தேஷ். குர்கானில ஒரே ஒரு ஹோட்டலுடன் இணைந்து முதலில் என்னுடைய தொழில்முனைவுப் பயணம் தொடங்கியது. ரூம் புக் செய்து வரும் வாடிக்கையாளர்களுக்கு அறையை சுத்தம் செய்து கொடுப்பதில் இருந்து வரவேற்பாளர், நிறுவனத்தின் சிஇஓ என அனைத்தையும் தானே முன்நின்று செய்திருக்கிறார்.
“ஓயோ ரூம்ஸ் சீருடையை அணிந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு ரூம் சர்வீஸ் பணிகளை செய்வேன் சில சமயங்களில் தங்கும் விடுதிக்கு வரும் இளம் ஜோடிகள் திட்டாத குறையாக வெளியே போகச் சொல்வார்கள் அவர்களிடம் இன்முகத்துடன் பேசிவிட்டு வெளியே செல்வேன். ஒரு முறை சுற்றுலா வந்த ஒரு குடும்பத்தினர் ஒரு குழந்தையை என்னிடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர். என்னுடைய அதிர்ஷ்டம் அந்தக் குழந்தை என்னிடம் அழாமல் அமைதியாக இருந்ததில் மகிழ்ச்சியடைந்த அவர்கள் ரூ-50ஐ டிப்ஸாக கொடுத்து விட்டுச் சென்றனர்.”
வாடிக்கையாளர்களிடம் நெருங்கிப் பழகியதால் அவர்களின் விருப்பு, வெறுப்புகள் என்ன என்பதை தெரிந்து கொண்டு ஓயோ ரூம்ஸ் வளர்ச்சியை மேலும் மெருகேற்றச் செய்ய முடிந்தது. இதுவே 5 ஆண்டு காலத்தில் ஓயோ ரூம்ஸ் பிரபலமடைந்து இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விரிவாக்கம் அடைந்ததற்கு காரணம் என்கிறார் ரித்தேஷ்.
இது மிகப்பெரிய நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது, ஐஐஎம்மில் படித்து முடித்த 10–20 பேர், ஐஐடி, எச்பிஎஸ் உள்ளிட்ட உயர் நிறுவனங்களில் படித்து முடித்த 200 பேர் கொண்ட குழுவிற்கு தலைமை தாங்கும் ரித்தேஷ் அகர்வால் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே விட்டவர்.
“இந்தியாவில் மட்டும் தான் படிப்பை பாதியிலேயே விட்டுவிடுபவர்கள் திறமைசாலிகள் என்ற அங்கீகாரம் கிடைக்காமல், உயர் தரத்திற்கு வராமல் இருக்கின்றனர். நிச்சயமாக இனி வரும் காலங்களில் இந்த நிலை மாறும் என நினைக்கிறேன். அதற்கு நானே ஒரு சாட்சி.”
கல்லூரிகளுக்கு நான் உரையாற்றச் செல்லும் போது மாணவர்களுக்கு ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதைத் தான் சொல்வேன் என்கிறார். படிப்பை பாதியிலேயே விடுபவர்கள் வாழ்க்கையில் தோற்று விடுவார்கள் என்ற நம்பிக்கையை உடைக்கவே ரித்தேஷ் இவ்வாறு கூறுகிறார். ரித்தேஷின் இந்த கருத்தியலுக்கு முக்கியக் காரணம் அவர் முன்மாதிரியாக கொண்ட சாதனை மனிதர்கள். மைச்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டவர் தான், இதே போன்று ஓலா கேப்ஸ் இணை நிறுவனர் பவிஷ் அகர்வாலும் கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டவர் தான். இவர்கள் சாதிக்கவில்லையா என்பதே ரித்தேஷின் கேள்வி.
இந்தியாவின் மிகப்பெரிய விருந்தோம்பல் செய்யும் நிறுவனமான ஒயோ ரூம்ஸ் நேபாளம் மலேசியா, சீனா, லண்டன், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ஹோட்டல்களுடன் கைகோர்த்து சேவை செய்து வருகிறது. 18 வயதில் தொழில்முனைவுக் கனவோடு ஆன்லைன் யுகத்தில் நுழைந்த ரித்தேஷ் அகர்வாலின் ஓயோ ரூம்ஸ் தொடங்கப்பட்ட 6 ஆண்டுகளில் ரூ. 2,600 கோடி ஆண்டு வருமானம் ஈட்டி வருகிறது.
படிப்பு என்பது பல்கலைக்கழகத்தோடு முடங்கி விடும் ஒரு விஷயமல்ல பட்டம் பெறாமலே சாதிக்கலாம். வெற்றியை இலக்காக நிர்ணயிப்பவர்கள் அதற்காக முழு மனதோடு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நினைத்ததை ஜெயித்து காட்ட முடியும். இன்றைய இளம் தலைமுறை தொழில்முனைவோர்களுக்கான உத்வேக நாயகன் ரித்தேஷ் அகர்வால்.
கூடுதல் தகவல் உதவி : எக்கனாமிக் டைம்ஸ்