தன் உயிரை பணயம் வைத்து ஆம்புலன்ஸ் செல்ல வழிகாட்டிய சிறுவனுக்கு வீரதீர விருது!
வீரதீர விருதுகள் 2019-க்கு இந்திய குழந்தைகள் நல வாரியத்தால் வெங்கடேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கர்நாடகாவின் ராய்சூர் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்தது. இங்கு சிறுவன் ஒருவன் ஆம்புலன்ஸ் செல்வதற்கு தன் உயிரைப் பணயம் வைத்து வழிகாட்டியுள்ளார். ஆறு குழந்தைகளையும் இறந்த பெண் ஒருவரின் உடலையும் ஏற்றிச் சென்ற அந்த ஆம்புலன்ஸ் யாத்கீர் மாவட்டத்தில் உள்ள மச்சனூர் கிராமத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது.
12 வயதான வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். வெள்ள நீர் அதிகரித்து வந்ததால் ஆம்புலன்ஸ் ஒன்று பாலத்தில் சிக்கிக்கொண்டதைக் கண்டார். உடனடியாக அவர் முன்வந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாலத்தைக் கடந்து செல்ல வழிகாட்டியுள்ளார்.
வெங்கடேஷின் துணிகர செயலை அங்கீகரித்து இந்திய குழந்தைகள் நல வாரியம் வீரதீர விருது 2019-க்கு அவரைத் தேர்வு செய்துள்ளது. வெங்கடேஷ் உட்பட இந்தியா முழுவதும் உள்ள 22 குழந்தைகளுக்கு வீரதீர விருது, குடியரசு தினத்தன்று வழங்கபடும். வெங்கடேஷ் ’நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ உடனான நேர்காணலில் கூறும்போது,
“நான் ஈடுபட்டது வீரதீர செயலா என்பது எனக்குத் தெரியாது. நான் ஓட்டுநனருக்கு உதவவேண்டும் என்று மட்டுமே எண்ணினேன்,” என்றார்.
அவர் மேலும் கூறும்போது,
“வெள்ளம் சூழந்திருந்த பகுதியைக் கடந்து செல்வதற்கான வழி தெரியுமா என்றும் பாலத்தின் மீது வாகனத்தை ஓட்டிச்செல்ல முடியுமா என்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என்னிடம் கேட்டார். நான் வழிகாட்டினேன். உதவி, வீரதீர செயல் இதைப்பற்றி எல்லாம் எனக்குத் தெரியாது,” என்றார்.
வெங்கடேஷ் வடக்கு கர்நாடகாவில் உள்ள ஹிரேராயானகும்பே அரசு ஆரம்பப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்சுக்கு இவர் முன்வந்து உதவிய வீடியோயை ’நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டது. விரைவில் பல்வேறு தளங்களில் இந்த வீடியோ பகிரப்பட்டு வைரலானது. வெங்கடேஷ் ஒரு ஹீரோவாகவே பார்க்கப்பட்டார்.
வெங்கடேஷிற்கு வீரதீர விருது வழங்கவேண்டும் என்று கர்நாடக அரசின் தொழிலாளர் துறையைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான பி மணிவண்ணன் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு பரிந்துரை செய்தார். அவர் கூறும்போது,
”அந்த இளம் மாணவரை ஊக்குவிக்கவேண்டும். அவரது வீரதீர செயலை கௌரவிக்கவேண்டும். இந்த ஆண்டு வீரதீர விருதுகளுக்கான பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவேண்டும் என்று பரிந்துரை செய்தேன். என்னுடைய பரிந்துரைக்கு பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்,” என்று தெரிவித்திருக்கிறார்.
கட்டுரை: THINK CHANGE INDIA