தமிழகத்தில் கால் பதிக்கும் அடிடாஸ்; சென்னையில் அமைகிறது பிசினஸ் சென்டர்!
அடிடாஸ் அதன் குளோபல் பிசினஸ் சர்வீசஸ் (ஜிபிஎஸ்) சென்டரை சென்னையில் அமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Adidas அதன் குளோபல் பிசினஸ் சர்வீசஸ் (ஜிபிஎஸ்) சென்டரை சென்னையில் அமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற அடிடாஸ் நிறுவனம் தனது உலகளாவிய திறன் மேம்பாட்டு மையத்தை தமிழ்நாட்டில் அமைக்கவுள்ளது. சீனாவிற்குப் பிறகு முதன் முறையாக தமிழகத்தில் அடிடாஸ் அதன் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையத்தை அமைப்பது குறிப்பிட்டத்தக்கது.
உலகளாவிய பெருநிறுவனங்கள் இந்தியாவில் ஏராளமான மென்பொருள் மற்றும் தொழில்நுட்பத் திறன்களைப் பயன்படுத்த முயற்சித்து வருகின்றன. அதேபோல், தமிழ்நாட்டில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக மையங்களை அமைத்து வருகிறது. அந்த வரிசையில் ஜெர்மனியைச் சேர்ந்த தடகள ஆடைகள் மற்றும் காலணி தயாரிப்பு நிறுவனமாக அடிடாஸ், முதன் முறையாக சீனாவிற்கு வெளியே தனது முதல் மற்றும் ஒரே உலகளாவிய திறன் மையத்தை (ஜிசிசி) சென்னையில் அமைக்கத் தயாராகி வருகிறது.
அடுத்த சில மாதங்களில் இந்த தொழிற்சாலை இயங்க தொடங்கும். அதோடு 3 வருடங்களில் முழுமையாக செயல்பட்டு பல ஆயிரம் காலணிகளை உருவாக்கும். உலகம் முழுக்க சென்னையில் இருந்து அடிடாஸ் காலணிகள் ஏற்றுமதி செய்யப்படும்.
சென்னையில் அமைக்கப்படவுள்ள அடிடாஸ் ஹப் ஆனது, தற்போதுள்ள போர்ச்சுகல், சீனா, கொலம்பியா, வட அமெரிக்கா ஆகிய இடங்களிலுள்ள அடிடாஸ் மையங்களுடன் இணைந்து செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்படவுள்ளது. இது நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளுக்கு உதவும்.
அடிடாஸ் அதன் குளோபல் பிசினஸ் சர்வீசஸ் (ஜிபிஎஸ்) மையத்தின் செயல்பாடுகளுக்கு அகில் கபூர் தலைமை தாங்கவுள்ளார். கபூர் ஜிபிஎஸ் உலகளாவிய கொள்முதலின் துணைத் தலைவராகவும், ஜிபிஎஸ் இந்தியாவின் தலைவராகவும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு உலக முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோரின் கவனத்தை ஈர்க்க பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது.
இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளனர். ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் அடிடாஸ் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.