பட்ஜெட்டில் LIC பங்கு வெளியீடு திட்டம் அறிவிப்பு- சாதகமா? பாதகமா?
பொது பங்கு வெளியீடு மூலம் பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி நிறுவன பங்குகளை விற்க அரசு திட்டமிட்டிருப்பதன் பின்னணி பற்றி ஒரு பார்வை.
கொரோனா சூழலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2021ம் ஆண்டு பட்ஜெட்டின் மிகப்பெரிய செய்தி, எல்.ஐ.சி நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு (IPO) அறிவிப்பு தான். பொதுத்துறை வங்கி பங்கு வெளியீடு பற்றியும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டாலும், அனைவரது கவனத்தையும் ஈர்த்திருப்பது எல்.ஐ.சி பங்கு வெளியீடு திட்டம் தான்.
எல்.ஐ.சி-யின் பொது பங்கு வெளியீடு செயல்முறை 2022ம் ஆண்டு முதல் தொடங்கும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை பங்குச்சந்தை ஆர்வலர்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். ஆனால், இன்னொரு பக்கம், தொழிற்சங்கள் உள்ளிட்ட தரப்பினர் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
பின்னணி
எல்.ஐ.சி பங்கு வெளியீடு திட்டம் வரவேற்புக்கும், எதிர்ப்புக்கும் உள்ளாகியிருந்தாலும் இது முற்றிலும் எதிர்பாராதது இல்லை. ஏற்கனவே, இதற்கான குறிப்பு கடந்த பட்ஜெட்டில் அளிக்கப்பட்டிருந்தது. எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பது சரியான முடிவாக இருக்குமா எனும் விவாதத்தின் நடுவே, மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கையான இது சாத்தியம் தானா எனும் கேள்வியும் இருந்தது.
இந்நிலையில், இந்த பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொதுத்துறை நிறுவனப் பங்கு விலக்கல் மூலம் நிதி திரட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இது அமைகிறது.
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலமாக 2.1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்போவதாக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
"பங்குச் சந்தையில் இடம் பெறும் நிறுவனங்கள் கட்டுபாடுகளுடன் செயல்படுகிறது மற்றும் நிதி சந்தைக்கான வாய்ப்பையும் அளிக்கிறது. மேலும் நிறுவனத்திற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் சில்லறை முதலீட்டாளர்களுக்கு வருவாயில் பங்கு கொள்ளும் வாய்ப்பை அளிக்கிறது,” என்று நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
வரவேற்பு
எல்.ஐ.சி பங்குகளை விற்கும் முடிவு பங்குச்சந்தையினர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
”இந்த பட்ஜெட்டின் மிக முக்கிய அம்சம் எல்.ஐ.சி-யின் பங்குகளை விற்பதே ஆகும்,” என தேசிய பங்குச் சந்தை அமைப்பின் தலைவரான விஜய் பூஷன் கூறியுள்ளார்.
பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவதன் மூலம், எல்.ஐ.சி, நிறுவன செயல்பாடுகள் மேலும் வெளிப்படைத்தன்மை மிக்கதாக மாறும் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது. இதன் காரணமாக செயல்திறன் மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எல்.ஐ.சி பங்கு வெளியீடு வரவேற்பிற்குக் காரணம் அந்நிறுவனத்தின் நிதி பலம் தான். 1956ம் ஆண்டு தனிச்சட்டம் மூலம் உருவாக்கப்பட்ட எல்.ஐ.சி. ஆயுள் காப்பீடுத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இத்துறையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு போட்டி உண்டாகியிருந்தாலும், எல்.ஐ.சி. பாலிசிகளின் பிரிமியம் தொகை மற்றும் பாலிசி எண்ணிக்கையில் முன்னணியில் திகழ்கிறது. சந்தையின் 70 சதவீதத்திற்கு மேல் தன் கையில் வைத்துள்ளது.
2019 நிதியாண்டில் எல்.ஐ.சி 3.37 ட்ரில்லியன் ரூபாய் வாடிக்கையாளர்களின் பீரிமியத்திலிருந்தும் 2.2 ட்ரில்லியன் ரூபாய் முதலீட்டிலிருந்து கிடைக்கும் ஆதாயத்திலும் வருமானம் ஈட்டியுள்ளது.
முதலீடு பலம்
2009ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு காலத்தில் எல்.ஐ.சி வருவாய் 291 சதவீதம் உயர்ந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் வெளியிடப்பட்ட எல்.ஐ.சி ஆண்டறிக்கை, 2019 நிதியாண்டில், நிறுவனம் ரூ.2,21,573.72 கோடி அளவு முதலீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கிறது.
அரசுக்கு நெருக்கடி வரும் போதெல்லாம் உதவிக்கு வந்து முதலீடு செய்யும் நிறுவனமாக எல்.ஐ.சி திகழ்கிறது. நலிந்த நிறுவனங்களை மீட்கவும் எல்.ஐ.சி கைகொடுக்கிறது. பங்குச்சந்தையிலும் எல்.ஐ.சி பெருமளவில் முதலீடு செய்துள்ளது.
மேலும், பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் உண்டாகும் போது, நிலைமையை சீராக்க எல்.ஐ.சி பெருமளவில் முதலீடு செய்கிறது. அரசின் பங்கு விலக்கலின் போதும் முதலில் முதலீடு செய்வது இந்நிறுவனமாகவே இருக்கிறது.
சமபங்கு லாபம்
கடந்த நிதியாண்டில் எல்.ஐ.சி பங்குச்சந்தையில் ரூ.68,620 கோடி முதலீடு செய்துள்ளது. இந்த நிதியாண்டில், இது ரூ.72,000 கோடியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பங்குச்சந்தை முதலீடு மூலம், நிறுவனம் ஆண்டுதோறும் ரூ.18,000 கோடி முதல் ரூ.25,000 கோடி லாபம் ஈட்டி வருவதாகக் கூறப்படுகிறது. 2019 நிதியாண்டில் இந்த லாபம் ரூ.23,600 கோடியாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் இது ரூ.25,650 கோடியாக இருந்தது என மனிகண்ட்ரோல் கட்டுரை தெரிவிக்கிறது.
எனினும், நிறுவன முதலீடுகள் சில மோசமான செயல்பாட்டை சந்தித்துள்ளது கவலை தரும் அம்சமாகவும் கருதப்படுகிறது.
எதிர்ப்பு
எனினும், தொழிற்சங்கத் தரப்பினரும். பொதுத்துறை ஆதரவாளர்களும் இந்த முடிவை கடுமையாக எதிர்க்கின்றனர். பொதுத்துறை நிறுவனங்களை விற்பது அவசியம் என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டாலும் கூட, எல்.ஐ.சி மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் போல் அல்ல என்கின்றனர்.
காப்பீடு வழங்குவதற்காக தேசிய அளவில் உருவாக்கப்பட்ட எல்.ஐ.சி தனித்துவம் வாய்ந்தது. 1956 LIC தனிச்சட்டம் மூலம் இது உருவாக்கப்பட்டது. இதன் பாலிசி தொகை மற்றும் போனசுக்கு அரசு உறுதி அளிப்பதாக இந்த சட்டத்தின் 37வது பிரிவு தெரிவிக்கிறது. தனியார் நிறுவனங்களில் இந்த அம்சம் கிடையாது.
மேலும், எல்.ஐ.சி நிறுவனம் லாப நோக்கில்லாதது. அதன் லாபம் மீண்டும் நிறுவன பாலிசி தாரர்கள் வளர்ச்சி மற்றும் தேசத்தின் நலனுக்கே பயன்படுத்தப்படுகிறது. இதை மீறுவது சரியல்ல என்பதோடு, பாலிசிதாரர்களுக்கு அளிக்கப்பட்ட நம்பிக்கையை குலைப்பதாகும் என வாதிடப்படுகிறது.
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டால், எல்.ஐ.சியின் செயல்பாடுகள் லாப நோக்கில் அமைந்து அதன் அடிப்படை செயல்பாடுகள் மாறிவிடும் என்கின்றனர்.
சட்ட சிக்கல்
பங்கு வெளியீடு முடிவு விவாதத்தை ஏற்படுத்தியிருந்தாலும், உடனடியாக இந்த முடிவு செயலுக்கு வர வாய்ப்பில்லை. முதலில் எல்.ஐ.சி பங்கு வெளியீட்டிற்கு வழி செய்யும் வகையில், எல்.ஐ.சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம்.
மேலும், காப்பீடு ஒழுங்குமுறை ஆணைய அனுமதியும் அவசியம். இந்த சட்டச் சிக்கல்களை சரி செய்த பிறகே பங்கு வெளியீடு சாத்தியம். இதில் இன்னொரு நடைமுறை சிக்கலும் இருக்கிறது. எல்.ஐ.சி பங்கு விலையை தீர்மானிக்க அதன் இ.வி எனப்படும் எம்பெடட் வேல்யூ மதிப்பு கணக்கிடப்பட வேண்டும். நிறுவன சொத்துகள், கடன் பொறுப்புகள் உள்ளிட்டவை இதற்காக ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இந்த ஆய்வில் எல்.ஐ.சியின் அலுவலகங்கள், ஐடி வளங்கள் உள்ளிட்டவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதற்கான நிறுவனத்தை அரசு அறிவித்திருந்தாலும் இந்த செயல்முறைக்கு அவகாசம் தேவை.
பங்குச்சந்தையில் ஐ.பி.ஓ எனப்படும் பங்கு வெளியீட்டு வரிசை கட்டும் நிலையில், எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு வெளியீடு உற்சாகத்தை ஏற்படுத்தியிருப்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இதன் செயலாக்கம் மற்றும் தாக்கத்தை பொருத்திருந்த பார்க்க வேண்டும்.