ஸ்டார்ட் அப்'களை ஊக்குவிக்க ‘ஒரு நபர்’ நிறுவனங்களுக்கு அனுமதி: பட்ஜெட்டில் அறிவித்த நிதி அமைச்சர்!
பட்ஜெட் 2021 ல், ஆறு விதமான தூண்களில் கவனம் செலுத்தியுள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எந்த வித செலுத்தப்பட்ட மூலதன கட்டுப்பாடும் இல்லாமல் ஒரு நபர் நிறுவனத்தை துவக்க அனுமதி உள்ளிட்ட ஸ்டார்ட் அப் மற்றும் சிறுதொழில்களுக்கு ஊக்கம் அளிக்கும் திட்டங்களை அறிவித்தார்.
இந்திய ஸ்டார்ட் அப் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், செலுத்தப்பட்ட மூலதனம் மற்றும் விற்றுமுதல் கட்டுப்பாடு இல்லாமல் ஒரு நபர் நிறுவனத்தை அமைத்துக்கொள்வதற்கு வழி செய்யும் அறிவிப்பை வெளியிட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மேலும், 2013 கம்பெனிகள் சட்டத்தின் கீழ், சிறிய நிறுவனங்கள் வரையறை தொடர்பான அப்டேட்டையும் வெளியிட்டார்.
இந்தியாவின் முதல் காகிதம் இல்லா பட்ஜெட்டை சமர்பித்த நிதி அமைச்சர், தற்போதுள்ள ரூ.50 லட்சம் என்பதில் இருந்து ரூ.2 கோடியாக மூலதன அளவை உயர்த்துவதன் மூலம், சிறு தொழில் நிறுவனங்களுக்கான வரையறையை மாற்றி அமைக்க உத்தேசித்திருப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
நிறுவன பங்குதாரர்களுக்கான பொறுப்பை குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து விலக்குவது தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டார்.
ஸ்டார்ட் அப் சூழலின் வரவேற்பைப் பெறும் நடவடிக்கையாக, கட்டுப்பாடுகள், செலுத்தப்பட்ட மூலதனம், விற்றுமுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இல்லாத ஒரு நபர் நிறுவனங்களை புதுமையாளர்கள் உருவாக்க வழி செய்யும் திட்டத்தையும் அறிவித்தார்.
இந்தியாவில் குடியிருப்பதற்கான வரம்பை 120 நாட்களாகவும் குறைப்பதாக அறிவித்துள்ளார். இது தொழில்முனைவோர் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என கருதப்படுகிறது.
"செலுத்தப்பட்ட மூலதனம் தொடர்பான கட்டுப்பாடு இல்லாமல், ஒரு நபர் நிறுவனங்களை அமைக்க அனுமதிப்பது வரவேற்கத்தக்கது. ஏனெனில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு குறைந்தது 2 இயக்குனர்கள் தேவை என்பதால், நிறுவனர்கள் வேறு வழியில்லாமல் ஒருவரை இணைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது,” என Orios Venture Partners நிர்வாக பாட்னர் அனூப் ஜெயின் கூறியுள்ளார்.
டேட்டா அனல்டிக்ஸ், ஏ.ஐ., எம்.எல் சார்ந்த MCA 3.0 வெர்ஷன் மற்றும் சிறுதொழில்களுக்கான இ-கோர்ட் ஆகியவைத் தொடர்பான அறிவுப்புகளும் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக இந்தியாவின் முதல் காகிதம் இல்லா பட்ஜெட்டை வெளியிட்ட நிதி அமைச்சர், தேசிய மகாகவி தாகூரின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டினார்.
"மூன்று முறை மட்டுமே இந்திய பொருளாதாரத்தில் தேக்க நிலையை தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை உலக பெருந்தொற்றால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது. பொருளாதார மீட்சிக்கு உதவ அரசு முழு அளவில் தயாராக உள்ளது,” என்று நிதி அமைச்சர் கூறினார்.
ஆங்கிலத்தில்: சிந்து காஷ்யப் | தமிழில்: சைபர் சிம்மன்