பணி நீக்கம் செய்யப்பட்ட 2,500 ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்ட பைஜு ரவீந்திரன்!
ஆன்லைன் எஜுடெக் நிறுவனமான பைஜூஸ் தனது 2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள நிலையில், அவர்களிடம் அந்நிறுவனத்தின் நிறுவனரான ரவீந்திரன் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஆன்லைன் எஜுடெக் நிறுவனமான பைஜூஸ் தனது 2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள நிலையில், அவர்களிடம் அந்நிறுவனத்தின் நிறுவனரான ரவீந்திரன் மன்னிப்பு கோரியுள்ளார்.
நாட்டின் முன்னணி இணையவழி கல்வி நிறுவனமான ’பைஜூஸ்’ (
) 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வருவாயை அதிகரிக்கவும், லாபகரமான நிறுவனமாக பைஜூஸை மாற்றுவதற்கும் திட்டமிட்டுள்ளது. இதற்காக 2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவித்தது."பணிநீக்கங்கள் மற்றும் ஒரே வேலையை பலர் செய்வதை தவிர்க்க 50 ஆயிரம் பணியாளர்களில் இருந்து 5% பேர் படிப்படியாக தயாரிப்பு, உள்ளடக்கம், ஊடகம் மற்றும் தொழில்நுட்பக் குழுக்களில் இருந்து கண்டறியப்பட்டு பணி நீக்கம் செய்யப்படுவார்கள்,” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
லாப நோக்கத்திற்காக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ள பைஜூஸ், மார்க்கெட்டிங்கிற்கான செலவை அதிகரிக்க உள்ளதாகவும். 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில், வரும் ஆண்டில் மொத்தம் 10,000 ஆசிரியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், வேலையை விட்டுச் செல்ல உள்ள 2500 பணியாளர்களிடம் பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரன் மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து பைஜூஸ் நிர்வாக ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில்,
“BYJU’s ஐ விட்டு வெளியேற உள்ளவர்களுக்காக நான் உண்மையிலேயே வருந்துகிறேன். நீங்கள் எனக்கு வெறும் பெயர் மற்றும் எண்கள் அல்ல, நீங்கள் அனைவரும் எனது நிறுவனத்தைச் சேர்ந்த 5 சதவீதத்தினர் அல்ல; நீங்கள் என்னில் கலந்த 5 சதவீதத்தினர்,” எனக்குறிப்பிட்டுள்ளார்.
ஊழியர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்றும், அவர்களை மீண்டும் பணியமர்த்த முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் பைஜூஸ் நிர்வாகம் தனது மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளது.
பைஜூஸ் நிறுவனம் தனது செலவுகளை கட்டுப்படுத்துவதற்காக தயாரிப்பு, உள்ளடக்கம், ஊடகம் மற்றும் தொழில்நுட்பக் குழுக்களில் சுமார் 5% பணியாளர்களை பணியை விட்டு நீக்க முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து அக்டோபர் 31ம் தேதி அன்று ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலில்,
"எங்கள் நிறுவனத்தை ஒரு நிலையான வளர்ச்சிப் பாதையை நோக்கிக் கொண்டு செல்வதன் மூலமாக, மீண்டும் உங்களை பணியமர்த்துவதையே நான் முதல் வேலையாக கொண்டுள்ளேன். புதிதாக உருவாக்கப்பட உள்ள வேலை வாய்ப்புகள் அனைத்தையும், முன்னாள் ஊழியர்களுக்கு முதலில் கிடைக்கும்படி செய்யுமாறு மனித வளத்துறை தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளேன்,” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
மெக்ரோ பொருளாதார காரணிகள், தொழில்நுட்ப நிறுவனங்களின் நிலைத் தன்மை மற்றும் மூலதானத்தை திறமையான வழியில் செயல்படுத்த நிர்பந்தித்துள்ளது. இதனை பின்பற்றியதால் தான் கடந்த 4 ஆண்டுகளில் பைஜூஸ் நிறுவனம் வளர்ச்சி அடைந்ததாகவும், தற்போது அதனை பின்பற்றி நிலையான வளர்ச்சியை அடைய வேண்டி உள்ளதாகவும் பைஜூஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு இந்நிறுவனம் 232 கோடி நஷ்டம் அடைந்தது. கடந்த 2021ம் ஆண்டு 4,588 கோடி ரூபாய் வரை நஷ்டம் உயர்ந்துள்ளதாக இந்நிறுவனம் அறிவித்தது. பைஜூஸ் நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு 22 பில்லியன் டாலர் ஆகும்.
இந்த வார தொடக்கத்தில், BYJU’s தனது முழுச் சொந்தமான துணை நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் நிறுவனத்திடமிருந்து பாதுகாப்பற்ற கடனாக ரூ.300 கோடி ($36.45 மில்லியன்) திரட்டியதாக செய்தி அறிக்கைகள் தெரிவித்தன.
அதேபோல், தனது முதலீட்டாளர்களிடம் இருந்து 250 மில்லியன் அளவிற்கு புதிதாகவும் பைஜூஸ் நிறுவனம் நிதி திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் - அமிஷா அகர்வால் | தமிழில் - கனிமொழி