ஆகாஷ் நிறுவன கையகப்படுத்தலில் ரூ.2,000 கோடி நிலுவை வைத்துள்ள பைஜுஸ்!
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் கையகப்படுத்தல் ஒப்பந்த ஷரத்தின்படி, 2022 ஜூன் மாதத்திற்குள் ரூ.1,983 கோடி அளவிலான தொகை செலுத்தப்பட வேண்டும். இது செப்டம்பர் 23ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கல்வி நுட்ப முன்னணி நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ்' நிறுவனத்தை கையகப்படுத்தலில், எஞ்சிய ரூ.2,000 கோடி தொகையை முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோனுக்கு செப்டம்பர் 23ம் தேதிக்கு முன் வழங்க வேண்டிய நிலையில் உள்ளது.
ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான '"ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் கையகப்படுத்தல் ஒப்பந்த ஷரத்தின்படி, 2022 ஜூன் மாதத்திற்குள் ரூ.1,983 கோடி அளவிலான தொகை செலுத்தப்பட வேண்டும். இது செப்டம்பர் 23ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது,” என பைஜுஸ் நிறுவனத்தின் 2021 நிதியாண்டு நிதி நிலை அறிக்கை தெரிவிக்கிறது.
முதலீட்டு நிறுவனம் பிளாக்ஸ்டோன், ஆகாஷ் நிறுவனத்தில் 38 சதவீத பங்குகள் கொண்டுள்ளது, பைஜுஸ் கையகப்படுத்தலில் 75 சதவீத தொகையை வழங்கியுள்ளது.
இதனிடையே, பைஜுஸ், 23 பில்லியன் டாலர் சந்தை மதிப்பில், 500 மில்லியன் டாலர் (ரூ.3,900 கோடி), புதிய சுற்று நிதி திரட்ட உள்ளது. இந்த நிதி ஆகாஷ் கையகப்படுத்தல் நிலுவைத்தொகையை செலுத்த பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021 நிதியாண்டில் நிறுவனம், ரூ.4500 கோடி நஷ்டம் மற்றும் ரூ.2,428 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
தணிக்கையாளர்கள் ஆலோசனையின் பேரில், வருவாயை அங்கீகரிக்கும் முறையில் கொண்டு வரப்பட்ட மாற்றம் காரணமாக, 2020 மற்றும் 2021 நிதியாண்டுகளுக்கான வருவாயில் வேறுபாடு இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட காலத்தில் ஆகாஷ் கையகப்படுத்தல் நிலுவைத்தொகையை பைஜுஸ் செலுத்தத் தவறினால், இந்த பரிவர்த்தனையை பூர்த்தி செய்ய நிறுவனம் ரிசர்வ் வங்கி கதவுகளை தட்ட வேண்டியிருக்கும் என சட்ட வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இது பற்றி பைஜுஸ் கருத்தை அறிய முடியவில்லை. கடந்த மாதம், தேர்வு தயாரிப்பு நிறுவனம் ஆகாஷை 1 பில்லியன் டாலர் அளவில் கையகப்படுத்தவதாக பைஜுஸ் அறிவித்தது. ஆகாஷுக்கான பணம் செலுத்தல் முடிந்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தது.
செய்தி- பிசினஸ் ஸ்டாண்டர்டு (ஐ.ஏ.என்.எஸ்)