கூலி வேலை செய்யும் மருத்துவ மாணவி: படிப்பை தொடர நிதி உதவி கேட்கும் பெற்றோர்!
அனைவருக்கும் கல்வி என்ற சொற்றொடர் தற்போதைய சூழலில் மாறிக்கொண்டே வருகிறது. மேல்படிப்பு படிக்க விரும்பும் கீழ்தட்டு மக்கள் பலருக்கு அது வெறும் கனவாகவே இருக்கிறது அதிலும் மருத்துவப்படிப்பை நினைத்து பார்க்க முடியாத சூழல் இங்க உருவாகிவிட்டது. இதுபோல் பெரம்பலூர் மாவட்டத்தின் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த கனிமொழி தனது மருத்துவ கல்லூரி கட்டணத்தை கட்ட முடியாமல் கூலி வேலை செய்து வருகிறார்.
கனிமொழி பன்னிரண்டாம் வகுப்பில் 1127 மதிப்பெண்கள் எடுத்து 3 வருடத்திற்கும் முன் இட ஒதிக்கீடு மூலம் தனலட்சுமி மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். கனிமொழியின் பெற்றோர்கள் கூலித் தொழில் செய்தும் கடன்கள் பெற்றும் 3 வருடமாக மகளின் மருத்துவ படிப்புக்கு கட்டணம் செலுத்தி வந்துள்ளனர். ஆனால் ஓர் விபத்தினால் கனிமொழியின் தந்தையால் நடக்க முடியாமல் போக அவரால் வேலைக்கும் செல்ல இயலவில்லை. தாய் வேலை செய்து கொண்டு வரும் கூலி, வீட்டிற்கே பத்தாத நிலையில் கனிமொழியின் கல்லூரி கட்டணம் தடைப்பட்டது. மேலும் காது கேளாத தனது சகோதரியின் மருத்துவ செலவிற்கு பணம் தேவைப்படும் சூழலில் அவதிப்படுகிறது இவரது குடும்பம். இதனால் தானே வீட்டுச் சூழலுக்கு உதவ கூலி வேலை செய்து வருகிறார் கனிமொழி.
“வரும் பிப்ரவரி மாதம் எனது நான்காம் ஆண்டு தேர்வு நடக்கவிருக்கிறது ஆனால் கூலி வேலை செய்து வருகிறேன். தேர்வுக்கு படிப்பத்தைபற்றி யோசிப்பதை விட எப்படி பணம் செலுத்த போகிறேன் என்பதில் தான் என் யோசனை இருக்கிறது,” என்கிறார் கனிமொழி.
வறுமையான சூழ்நிலை இருந்தபோதிலும் கடந்த மூன்று ஆண்டுகளில் அரியர் எதுவும் இல்லாமல் தேர்ச்சி பெற்று வந்துள்ளார் இவர். இந்த ஆண்டு தேர்வை எழுதி முடித்தால் மட்டுமே தேர்ச்சி பெரமுடியும் என்ற சூழலில், கனிமொழிக்கு கல்லூரிக்கு செல்வதே கேள்விக்குறியாக உள்ளது. கனிமொழியின் படிப்பு செலவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். ராசா அறக்கட்டளையில் இருந்து வழங்கப்படுவதாக சொன்ன உதவித் தொகையும் அவரை சேரவில்லை.
பல கடன் பெற்று தன்னால் முடிந்த வரை செய்து இதுவரை 8 லட்சம் வரை கல்விக்கட்டணம் செலுத்தி 3 ஆண்டுகளாக மகளை படிக்க வைத்துவிட்டார் கனிமொழியின் தந்தை. தற்பொழுது கனிமொழி படிப்பை முடிக்க 5 லட்சம் தேவைப்படும் நிலையில் கண்ணீர் மல்க பண உதவி கேட்கிறார் கனிமொழியின் தாயார்.
இவரது படிப்பிற்கு உதவ இங்கு தொடர்புக்கொள்ளலாம்: 9790109152 / 9524705879
தகவல்கள் உதவி: புதிய தலைமுறை, தினமலர்.
கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்