நிச்சயம் முதல் ரிசெப்ஷன் வரை: உலகப் பிரபலங்கள் திரண்ட அம்பானி வீட்டுக் கல்யாணம்!
திருமணத்துக்கு முன், தி.க்கு பின்... என கொண்டாட்டத்தில் உத்து கவனிக்க வேண்டிய பத்துக்கு பத்து தகவல்கள் இதோ...
‘கடந்த பத்து நாட்களாக டாக் ஆப் தி இந்தியாவே இஷா அம்பானியின் டும் டும் டும் தான். ஆம், ஊரே ‘ஆ’ என்று வாயை பிளந்து பார்க்கும் அளவுக்கு மகள் கல்யாணத்துக்கு ரூ 700 கோடி செலவு செய்து தாறுமாறாக கொண்டாடியுள்ளார் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான தி ரிச்சஸ்ட் மேன் இன் இந்தியா - முகேஷ் அம்பானி!.
யெஸ்... முகேஷ் அம்பானி - நீடா தம்பதியின் மகள், இஷா அம்பானிக்கும் பிரமால் குழுமத்தின் தலைவர் அஜய் - ஸ்வாதி தம்பதியின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் கடந்த 12ம் தேதி மும்பையில் உள்ள அம்பானியின் வீட்டில் இனிதே திருமணம் நடந்தேறியது.
இந்தியாவின் முதல் பணக்காரரர் வீட்டு விசேஷம் அத்தனை எளிதில் நடந்திடுமா? ஒரு பத்திரிக்கைக்கே ரூ 3 லட்சம் செலவழித்து அசத்திய அம்பானி, கல்யாணத்தையும் தடல்புடலாகவே நடத்தியுள்ளார். அம்பானிக்கே மருமகன் ஆகபோகும் அந்த லக்கி மேனை பற்றியே கடந்த வாரம் கூகுளில் அதிகம் தேடப்பட்டுள்ளது.
மாப்பிள்ளை பெயர் ஆனந்த் பிரமால், ஹெல்த்கேர் துறையில் நாட்டின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான பிராமல் குரூப்பின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.
இரண்டு பேமிலிக்கும் இடையே நீண்டகால நட்பு இருந்து வருகிறது. இஷாவுக்கும் ஆனந்துக்கும் இடையே இருந்ததும் அதுவே. பின், அதுவே காதலாக மாற இரு குடும்பங்களும் சம்மதம் தெரிவிக்க, அனுஷ்கா - விராட் கோலி மற்றும் ரன்வீர் - தீபிகா படுகோன் மணம் முடித்து கொண்ட இத்தாலியின் கோமா ஏரியில் மூன்று நாட்கள் நிச்சயதார்த்தத்தை மட்டும் கொண்டாடினர். அப்போது, திருமணத்தை எப்படியெல்லாம் கொண்டாடடுவர் என்கிற எதிர்பார்ப்பு எகிற, பிரம்மாண்டத்தின் மறுபெயர் பாகுபலி என்பதையே தோற்கடித்துவிட்டது அம்பானிவீட்டு கல்யாணம்...!
திருமணத்துக்கு முன், தி.க்கு பின்... என கொண்டாட்டத்தில் உத்து கவனிக்க வேண்டிய பத்துக்கு பத்து தகவல்கள் இதோ...
தாயின் திருமண சேலையை அணிந்த அம்பானி மகள்!
பிரம்மாண்டத்தின் உச்சகட்டமாய் நிகழ்ந்த இஷா அம்பானியின் திருமணத்தில், அனைத்தும் காஸ்ட்லியஸ்ட் ரகமாய் இருக்க, மணமகள் இஷா லெஹங்காவிற்கு அணிந்திருந்த ரெட் கலர் சாரீ மட்டும் கிளாசிக் லுக்கில் தனித்து தெரிந்தது. ஆம், 33 ஆண்டுகளுக்குமுன் தயார் நீடா அம்பானி அவர் திருமணத்தில் அணிந்திருந்த அதே சேலையை அணிந்துள்ளார்.
3 வேளை; 4 நாட்கள்; 5,100 பேருக்கு கல்யாண விருந்து
திருமணத்துக்கு முன்பு, ஜெய்ப்பூரில் டிசம்பர் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற்ற ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாய், ‘அண்ணா சேவா’ நடைபெற்றது. மூன்று வேளை, நான்கு நாட்களுக்கு மாற்றுத்திறனாளிகள், ஏழை மக்கள் என 5,100 பேருக்கு விருந்தளித்தளித்தனர். முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீடா அம்பானி, மணப்பெண் இஷா அம்பானி என விசேஷ குடும்பத்தார் பலரும் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறினர்.
108 இந்திய கைவினைப் பொருள்கள் அடங்கிய மாபெரும் கண்காட்சி!
உதய்பூர் நகரில் பிரமாண்டமாய், நடந்த திருமணத்துக்கு முந்தைய சடங்குகளின் போது, ரிலையன்ஸ் பவுண்டேஷன் சார்பில் பாரம்பரிய இந்திய கைவினைஞர்களின் கைத்திறனை உலகமறிய செய்யும் நோக்கிலும், குறிப்பாக உள்நாட்டு கைவினைப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் ‘சுதேசி பஜார்’ எனும் பெயரில் 108 பாரம் பரிய இந்திய கைவினைப் பொருள்கள் அடங்கிய மாபெரும் கண்காட்சியை ஏற்பாடு செய்தது அம்பானி குடும்பம். அதில் காஞ்சிவரம் கலெக்ஷன்களும் அடங்கியிருந்தன. கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனுடன், நீடா அம்பானி, மற்றும் இஷா அம்பானியும் கண்காட்சியில் கலந்து கொண்டனர்.
அம்பானி வீட்டு திருமணத்துக்காக ஒரே நாளில் இயக்கப்பட்ட 1004 விமான சேவை!
மும்பை டவுனில் இருந்து உதய்பூர் நகரில் நடந்த திருமணத்துக்கு முன்பான கொண்டாட்டங்களில் பங்கேற்க வருவோர் உதய்பூர் செல்வதற்காக சுமார் 50க்கும் அதிகமான தனியார் விமானங்கள் கொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துள்ளனர். பாலிவுட் நட்சத்திரங்கள் கியூ கட்டி வந்ததுடன், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், வெளிநாட்டு பிரபலங்கள் என மும்பை வந்திருங்கிய முக்கிய விருந்தினர்கள், மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் உதய்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அன்றைய தினத்தன்று (டிசம்பர் 8ம் தேதி) மட்டும் மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையம் 1,004 சேவைகளை கையாண்டுள்ளது.
27 அடுக்கு மாடி; 168 கார் பார்க்கிங் வசதி கொண்ட அம்பானி வீட்டில் நடந்த திருமணம்
உலகிலேயே அதிக விலை மதிப்பு கொண்ட ரெசிடென்சியல் பகுதியாக திகழும் மும்பையின் அல்டாமவுன்ட் சாலையில் சுமார் 40 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது அம்பானியின் ‘அன்டில்லா’ பங்களா எனும் அரண்மனை. 27 அடுக்குகளே இருந்தாலும் பங்களா கிட்டத்தட்ட 40 மாடிக் கட்டடத்துக்கு இணையான உயரத்தில், மினி தியேட்டர், எந்நேரமும் பனியைக் கொட்டிக்கொண்டே இருக்கும் ‘ஸ்நோ ரூம்’, 168 கார்களை நிறுத்திக்கொள்ளக்கூடிய பார்க்கிங் வசதி, 3 ஹெலிகாப்டர் தளங்கள் என பாகுபலி செட்டுக்கு இணையான பங்களாவில் 12.12.18ம் தேதி இனிதே நடந்தேறியது இஷாவின் வெட்டிங். இதற்காக பங்களா, மலர் அலங்காரம் செய்யப்பட்டு திருவிழா கோலம் பூண்டது.
அமெரிக்க பாப் பாடகி பியான்ஸ் நோயல்சின் இசை நிகழ்ச்சி
ப்ரீ வெட்டிங் செலிபிரேஷனை பெரும் விமர்சியாக, காசை மூட்டையில் கட்டி இறக்கி உதய்பூரையே திருவிழாக் கோலம் காணவைத்தனர் என்பதற்கான சான்று பாப் பாடகி பியான்ஸ் நோயல்சை அழைத்து வந்து நிகழ்த்திய கச்சேரி. கலிஃபோர்னியாவின் கொலராடோ பாலைவனத்தில் ஆண்டுத்தோறும் நடக்கும் இசை மற்றும் கலை விழாவில் பங்கேற்கவே, 3 மில்லியன் டாலர் பணத்தை பெற்றுள்ளார் பியான்ஸ். சோ,
இஷாவின் கல்யாணத்தில் கச்சேரி நிகழ்த்த குறைந்தபட்சம் 4 மில்லியன் அமெரிக்க டாலராச்சும் பெற்றிருப்பார் என்கின்றனர். அதாவது, நம்மூர் ரூபாய் நோட்டுக்கு கூட்டி கழித்து பார்த்தால் ஜஸ்ட் ரூ 29 கோடி ஒன்லி!!
புகுந்த வீட்டாரின் கல்யாணப் பரிசு!
இத்தாலியில் - நிச்சயதார்த்தம்; உதய்பூரில் -ப்ரீவெட்டிங் செலிபிரேஷன்; 27 மாடி அன்டில்லா அரண்மனையில் - திருமணம் என தொடர்ந்து பத்து நாட்களுக்கு திருமண நிகழ்வினை கொண்டாடி மகிழும் அம்பானி மற்றும் பிரமல் குடும்பத்தார், ரிசெப்ஷன் நிகழ்த்தியது மும்பையில் வொர்லி பகுதியில் உள்ள மிகவும் பிரம்மாண்ட சொகுசு பங்களாவான ‘குலிடா’வில்.
அது தான் தம்பதியினரின் வருங்கால கனவு இல்லம். அரபிக் கடலைப் பார்த்தவண்ணம் அதிநவீன வசதிகள் கொண்ட 450கோடி ரூபாய் மதிப்பிலான பங்களா இஷாவுக்கு அவரது மாமனார்-மாமியார் அளித்த கல்யாணப்பரிசு. 50 ஆயிரம் சதுர அடியில் நீச்சல் குளம், நவீன ஜிம், 3டி கண்ணாடி முகப்பு, என அனைத்து நவீன வசதிகளும் இந்த பங்களாவில் அமைக்கப்பட்டுள்ளன. 2012ம் ஆண்டு ஹிஸ்துஸ்தான் நிறுவனத்திடம் இருந்து இவ்விடத்தை வாங்கி தற்போது 5 அடுக்கு மாடி பங்களாவாக கட்டி முடித்துள்ளனர். இதற்காக லண்டனைச் சேர்ந்த கட்டிடக் கலை நிபுணர் எக்கர்ஸ்லே ஓ காலகனை வரவழைத்துள்ளனர்.
இந்தியாவின் இசைக்குயில் அனுப்பி வைத்த பரிசு!
விசேஷ வீட்டுக்கு வருகை தரமுடியவில்லை என்ற காரணத்தினால் இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஸ்கர், பல ஆண்டுகளுக்கு பின் அவர் குரலிலே பாடிய காயத்ரி மந்திரம், விநாயகர் போற்றி பாடலுடன் கூடிய வாழ்த்து செய்தியை பரிசாக அனுப்பியுள்ளார். இஷா அம்பானி திருமணத்தின் போது லதாவின் குரலில் காயத்ரிமந்த்ரம் ஒலிபரப்பாக, நீடாஅம்பானி கைக்கும்பிட்டு நன்றியைக் கூறி கொண்டார்.
அம்பானியின் இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடிய சூப்பர் ஸ்டார்!
உதய்பூரில் நடந்த ப்ரீவெட்டிங் முதல் மும்பை ரிசெப்ஷன் வரை அனைத்து நிகழ்வுகளிலும், பிரம்மாண்டத்துக்கு பஞ்சம் இல்லாதது போல், விருந்தினர்களும் கும்பல் கும்பலாய் வருகைப்புரிந்திருந்தனர். பாலிவுட்டில் பச்சன் குடும்பம், மூன்று கிங் கான்கள், கபூர் குடும்பம், பத்து நாள் முன்பு கல்யாணம் செய்து கொண்ட புது தம்பதி பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்... என ஒட்டு மொத்த இன்டஸ்ட்ரீயே அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்டது மட்டுமல்லாமல் மேடை ஏரி ஆட்டம் பாட்டம் என தங்கள் வீட்டு விசேஷம் போல கொண்டாடி மகிழ்ந்தனர்.
சினி நட்சத்திரங்கள் தவிர, அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளின்டன் மற்றும் நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர்.
மத்திய அமைச்சர் மேனகா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு, முன்னாள் பிரதமர் தேவகவுடா, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் என விழாவில் கலந்து கொண்ட விஐபிக்கள் லிஸ்ட் வெகு நீளம். அதில் நம்மூர் நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய ஸ்டைலில் குர்தா அணிந்து மனைவியுடன் கலந்து கொண்டார். எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் தலைவரது பிறந்த நாள் அன்று.
இளவரசி டாயானவுக்கு பின் அதிகம் செலவு செய்யப்பட்ட திருமணம்
இஷா அம்பானியின் திருமணத்துக்காக மட்டும் சுமார் 100 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 37 வருடங்களுக்கு முன்னர் நடந்த இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் டயானாவின் திருமணத்துக்கு பிறகு அதிக பணம் செலவழித்து, ஆசியாவின் காஸ்ட்லியஸ்ட் திருமணம் என்ற பெருமையையும் சேர்த்துள்ளனர்.
"