விம்பிள்டன் போட்டிக்கு இந்திய ராணுவத்தில் இருந்து தகுதி பெற்றுள்ள கோவை இளைஞர்!
என் ஸ்ரீராம் பாலாஜி 12 வயதுக்குட்பட்டோருக்கான டென்னிஸ் பிரிவில் இந்திய தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்தபோது அவர் தனக்கான வரலாறை எழுதத் தொடங்கினார். பதினாறு ஆண்டுகள் கழித்து 26 வயதில் இந்திய ராணுவத்தில் இருந்து விம்பிள்டனுக்கு தேர்வான முதல் நபர் இவர்தான்.
பெங்களூருவின் மெட்ராஸ் என்ஜினீரிங் ரெஜிமெண்ட் கேடட் ஸ்ரீராம் கோயமுத்தூரைச் சேர்ந்தவர். இவர் Madras Sappers-ல் இணைந்த 2017-ம் ஆண்டு முதல் ஐந்து ஏடிபி சாலன்ஞர் கோப்பைகளை வென்றுள்ளார். ஸ்ரீராம் தற்போது இணை ஆணையர் அதிகாரியாக (JCO) நியமிக்கப்பட்டுள்ளார். ஆடவர் இரட்டையர் பிரிவு இரண்டாம் தகுதி சுற்றில் ஸ்ரீராம் பாலாஜி, விஷ்ணுவர்தன் ஜோடி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் டெனிஸ் மால்கனோவ், இகோர் செலினே ஜோடியை வென்றது. இதன் மூலம் ஆடவர் இரட்டையர் பிரிவிற்கு தகுதி பெற்றார்.
ஸ்ரீராம், விஷ்ணு ஜோடி இந்த ஆண்டிற்கான எடிஷனில் பங்கேற்க உள்ள ஒரே இந்திய ஜோடி ஆகும். இந்த இரு வீரர்களுக்குமே இது முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியாகும் என தி நியூஸ் மினிட் தெரிவிக்கிறது. கடந்த மே மாதம் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் பகுதியில் நடைபெற்ற ஏடிபி சாலஞ்சர் ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்த ஜோடி பட்டத்தைக் கைப்பற்றியது.
இந்திய ராணுவமும் இவரது வெற்றி குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
2017-ம் ஆண்டு டேவிஸ் கோப்பை போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இரட்டையர் பிரிவில் ஸ்ரீராம் வெற்றி பெற்றார். தற்போது உலகளவிலான தரவரிசைப் பட்டியலில் 117-வது இடத்தில் உள்ளார். இந்தியா சார்பாக இவருடன் விம்பிள்டன் போட்டியில் களமிறங்கும் மற்றொரு நபர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜீவன் நெடுஞ்செழியன். இவர் தனது பார்ட்னரான அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்டின் உடன் இணைந்து விம்பிள்டன் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
பெண்கள் பிரிவில் 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா பங்கேற்றதில் இருந்து கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற முதல் இந்திய பெண் அன்கிதா ரைனா. இருப்பினும் தகுதிச் சுற்றில் உலக தரவரிசைப் பட்டியலில் 132-வது இடத்தில் உள்ள ரஷ்ய அணியைச் சேர்ந்த விடாலியா டியாட்சென்கோ 2-6, 7-5, 4-6 என்கிற செட் கணக்கில் இவரை வென்றார்.
ஏடிபி சாலஞ்சர் சர்க்யூட் வென்ற பிறகு ’தி ஸ்க்ரால்’ உடனான உரையாடலில் ஸ்ரீராம் கூறுகையில்,
“இது நிச்சயம் எங்களது அடுத்தகட்ட வளர்ச்சியாகும். நாங்கள் போட்டியில் மேலும் தீவிரமாக விளையாடுவோம். நாங்கள் சிறப்பாகவும் நம்பிக்கையுடனும் விளையாடுகிறோம். மிகவும் கவனமாக ஒவ்வொரு அடியாகவே எடுத்து வைக்க விரும்புகிறோம்,” என்றார்.
கட்டுரை : THINK CHANGE INDIA