ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து: 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுகிறது
இன்று காலை நாடாளுமன்றத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வந்த, ஜம்மூ காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானம், குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது.
ஜம்மூ காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், நிர்வாக வசதிக்காக காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாக பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. காஷ்மீர் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்றத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மூ காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான சிறப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதற்கு ஒப்புதல் அளிக்கும் அறிவிப்பாணையை வெளியிட்டார்.
இதன் படி, ஜம்மூ காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வழி செய்யும் அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது. இந்த பிரிவு, இந்தியாவின் மற்ற பகுதி மக்கள் காஷ்மீரில் சொத்து வாங்குவதையும் தடை செய்கிறது.
மேலும் நிர்வாக வசதிக்காக, ஜம்மூ காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் அமீத் ஷா அறிவித்தார். காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகள் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுகிறது. லடாக் பகுதியின் நீண்ட கால கோரிக்கை ஏற்பட்டு, இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக அது செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
காஷ்மீரில் பயங்கரவாதத்தால் ஏற்பட்டுள்ள உள்நாட்டு பாதுகாப்பு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, அது தனி யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படுவதாக தெரிவித்தார். சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக காஷ்மீர் செயல்படும்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில், பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவை காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்த பிறகு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட போது, அதன் மன்னர் ஹரிசிங், விதித்த நிபந்தனைகளை ஏற்று காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன் படி,
இந்தியாவின் மற்ற பகுதி மக்கள் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது. காஷ்மீருக்கு தனி அரசியல் சட்டம் இருக்கும். பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை, நிதித்துறை, தகவல் தொடர்புத்துறை தவிர மற்ற துறை தொடர்பான சட்டங்களுக்கு காஷ்மீர் சட்டமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
தற்போது இந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. முன்னதாக இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் காஷ்மீர் தொடர்பான முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, இந்த முடிவு இந்திய ஜனநாயகத்தின் கருப்பு தினம் என்று டிவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: ஏ.என்.ஐ | தமிழில்; சைபர்சிம்மன்