கடும் எதிர்ப்பை மீறி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!
முஸ்லிம் ஆண்கள் உடனடி விவாகரத்து வழங்குவதை குற்றமாக்கும், முத்தாலக் மசோதா ஜூலை 25ம் தேதி மக்களவையில் நிறைவேறியது.
முத்தாலக் பழக்கத்திற்குத் தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. உச்சநீதிமன்றம் தடை விதித்தும் நூற்றுக்கணக்கான உடனடி விவாகரத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால், இதற்கான சட்டம் அவசியமாகிறது என அரசு தெரிவித்துள்ளது. முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2019, மீதான விவாதத்திற்கு பதில் அளித்த சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு தண்டனை அளிக்கவும் இதில் வழி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த மசோதா பரிசீலிக்கப்பட்ட போது, இதைத் தடுப்பதற்காக எதிர்கட்சிகளின் முயற்சி 303க்கு 82 எனும் வாக்குகளில் வீழ்த்தப்பட்டது. எதிர்கட்சிகள் கொண்டு வந்த பல்வேறு திருத்தங்களும் வீழ்த்தப்பட்டன.
முத்தாலக் பழக்கத்தை மேற்கொள்ளும் கணவருக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்க வழி செய்யும் மசோதாவின் ஷரத்து, 302க்கு 78 எனும் வாக்குகளில் நிறைவேறியது.
காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பிற்கு மத்தியில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த மசோதா 16வது மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும் மாநிலங்களவையில் எதிர்ப்பை சந்தித்தது. தற்போது மீண்டும் மாநிலங்களவை சோதனை காத்திருக்கிறது.
உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் ரவிசங்க பிரசாத்,
2017 ஜனவரிக்கு பிறகு 574 முத்தாலக் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும்,. இது தொடர்பான அவசரச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு 101 வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் 2017 ஆகஸ்ட்டில் வழங்கிய தீர்ப்பை மீறி, உடனடி விவாகரத்து வழக்குகள் பதிவாக இருப்பதாகத் தெரிவித்தார். இதுவே இந்த சட்டம் இயற்றப்பட முக்கியக் காரணம் என தெரிவித்தார். முத்தாலக் வழங்கும் கணவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்குவதை எதிர்கட்சிகள் ஏன் எதிர்க்கின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
”வரதட்சணைச் சட்டம் அல்லது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் சிறை தண்டனை வழங்கப்படும் போது யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. இதில் மட்டும் ஏன் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும்,” என அவர் கூறினார்.
இந்தப் பழக்கத்தை மேற்கொள்வதை தடுக்கும் வகையில், முத்தாலக் வழங்கும் கணவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முஸ்லிம் பெண்கள் தொடர்பாக மட்டும் இந்தச் சட்டத்தை கொண்டு வருவது ஏன் எனும் கேள்விக்கு, முஸ்லிம் சமூகத்தில் தான் பழக்கம் பரவலாக இருப்பதாக தெரிவித்தார். அமீர் அலி கருத்தை மேற்கோள் காட்டியவர், நபிகள் நாயகம் கூட, இந்த பழக்கத்திற்கு எதிராக இருந்ததாகவும், ஒரு முறை தனது ஆதரவாளர் ஒருவர் மனைவியை மீண்டும் சேர்த்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
முத்தாலக் பழக்கத்திற்கு இஸ்லாமிய நூல்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்த மசோதா அவையில் மூன்றாவது முறை விவாதிக்கப்படுவது குறித்து அமைச்சர் வருத்தம் தெரிவித்தார்.
இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள் அல்லது இதை நிலைக்குழுவுக்கு பரிந்துரைக்க விரும்புகிறவர்களின் நோக்கம் இதை நிறைவேற்ற விடாமல் முடக்குவது தான் என்று அவர் தெரிவித்தார். வரதட்சணை பாதுகாப்பு சட்டம் அல்லது இந்துக்கள் தொடர்பான மற்ற சட்டங்களில் சிறை தண்டனை பரிந்துரைக்கப்படும் போது ஏன் எதிர்ப்பு இல்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மோடி அரசு தெளிவாக செயல்படுகிறது என்றும் கூறியவர், ஷாபானு வழக்கின் போது, 1986ல் காங்கிரஸ் இந்த பழக்கத்தை தடை செய்திருக்கலாம் என்றும், ஆனால் வாக்குவங்கி அரசியலால் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
“முத்தாலக் 20 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. ஷரியா சட்டத்தை பின்பற்றும் நாடுகளில் இதை மாற்ற முடியும் என்றால், மதச்சார்பற்ற நாட்டில் ஏன் முடியாது,” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“நான் நரேந்திர மோடி அரசின் சட்ட அமைச்சர். ராஜீவ் காந்தி அரசின் சட்ட அமைச்சர் அல்ல. இது மதம் அல்லது நம்பிக்கை அல்லது வாக்கு தொடர்பான விஷயம் அல்ல. பெண்கள் கவுரவம் தொடர்பானது. பெண்களுக்கு நியாயம் வழங்குவது,” என்றும் அவர் தெரிவித்தார்.
முத்தலாக்கை மட்டுமே மசோதா தடை செய்வதாகுவும், மற்ற வகை தலாக்குகளை அல்ல என்றும் அவர் கூறினார்.
இந்த விஷயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியது முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண்கள் தானே தவிர அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அல்ல என்றும் தெரிவித்தார்.
கும்பல் வன்முறை சம்பவங்கள் தொடர்பான கேள்விக்கு, குற்றவாளிகள் மீது ஐபிசி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படலாம் எனும் அச்சம் தேவையற்றது என்றும், இதற்கான ஷரத்துகள் இருக்கின்றன என்றும் அமைச்சர் கூறினார்.
”இந்த குற்றம் ஜாமீன் பெற முடியாத வகையில் அமைந்திருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்கு முன், ஜாமீன் பெற மாஜிஸ்திரேட்டை அணுகலாம். ஜாமீன் பெற முடியாத குற்றங்களில் காவல் நிலையத்தில் காவலர்கள் ஜாமீன் வழங்க முடியாது. மனைவி தரப்பை கேட்ட பிறகு மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்க வழி செய்யும் ஷரத்து சேர்க்கப்பட்டுள்ளது,” என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : பிடிஐ | தமிழில் :சைபர்சிம்மன்