'சமூகம் பெண்களை பலவீனமான இனமாகவே வளர்த்தெடுக்கும் நிலை மாற வேண்டும்' - அமுதா ஐ.ஏ.எஸ்.
பார்க்க சாதாரண பெண்மணியைப்போல் காட்சியளிக்கும் அமுதா ஐ.ஏ.எஸ் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். தனிப்பட்ட திறனால் சட்ட மீறல்கள்களைத் தடுத்து, சமூக நலனில் அக்கரையுள்ள அதிகாரியாகவும் வலம்வரும் அவரின் செயல்பாடுகள் இன்றைய தலைமுறை பெண்களுக்கு ஒரு முன்மாதிரி. சமீபத்தில் மழை வெள்ள பாதிப்பு, அதற்குப் பிறகு ஆக்கிரமிப்புகளை அகற்றுவது போன்றவற்றில் எந்த ஆண் அதிகாரியும் செய்யத் துணிந்திடாத காரியங்களைச் செய்து அனைத்துத் தரப்பினரின் பாராட்டை பெற்றவர்.
அரசுப் பணியில் பெண்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் என்ன? சம வாய்ப்பு கிடைக்கிறதா? முன்னேற்றத்தின் தாரகமந்திரம் என்ன? இப்படி தமிழ்யுவர்ஸ்டோரியின் பல கேள்விகளுக்கு அராமல் பதில் அளிக்கிறார் அமுதா. அவரது பிரத்யேக நேர்காணல் இதோ:
ஐ.ஏ.எஸ். கனவுக்கான விதை விதைத்தது யார்?
எனது சொந்த ஊரான மதுரையில், கேந்திரய வித்யாலயா பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயம் அப்போது எனக்கு வயது 10 இருக்கும். என் தாத்தா சுதந்திர போராட்ட வீரர் என்பதால் அவருக்கான உதவித்தொகையை பெற என் பாட்டியுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றிருந்தேன். அப்போது எனக்குள் எழுந்த கேள்வி தான் யார் இந்த கலெக்டர்? என் சந்தேகத்தை உடனடியாக பாட்டியிடம் கேட்டு அதற்கான விடையை என் மனதில் ஆழப் பதிந்து கொண்டேன்.
“அப்போது கலெக்டர்னா யாரு? என்ன செய்வாங்கன்னு தெரியாது. என் பாட்டி எளிமையா சொல்லிப்புரியவச்சாங்க. கலெக்டர் அரசருக்கு ஒப்பானவங்க, மக்களுக்கு நல்லது செய்றவங்கன்னு சொன்னாங்க” இதுவே ஐஏஏஸ் படிக்க பாட்டி போட்ட விதை.
அடுத்ததாக ஐஏஎஸ் கனவிற்கு மேலும் அடித்தளம் அமைத்தது பதிமூன்று வயதில் சென்ற மலையேற்றப் பயிற்சி. இமயமலைக்கு மலையேறு பயிற்சிக்கு சென்ற போது நான் சந்தித்த ஐஏஎஸ் அதிகாரிகள்தான் எனது வாழ்வில் ஏற்றத்தை பெற உந்துதலாக இருந்தனர். பயிற்சி முடிந்து மதுரை திரும்பிய போது என்னை பேட்டி எடுத்த ஊடகத்தினர் எதிர்காலத்திட்டம் பற்றி கேட்டார்கள். “அப்போதுதான் நானும் கலெக்டர் ஆவேன் என்று உறுதியாகச் சொன்னேன்”. அதிலிருந்து ஆரம்பித்த உத்வேக வாழ்க்கை 1994 ஆம் ஆண்டில் கலெக்டர் ஆகும்வரை ஓயவில்லை. மதுரையில் இளநிலை விவசாயம் முடித்த கையோடு 1992ம் ஆண்டு ஐபிஎஸ் எனப்படும் இந்திய காவல் பணிக்கான தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றேன். எனினும் அது ஐ.ஏ.எஸ்-க்கு மீண்டும் முயற்சிக்க எனது தந்தை பெரியசாமி கூறிய அறிவுரையால் அடுத்தகட்டமாக இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வு எழுதி அதிலும் முதல் முயற்சியிலேயே வென்று 1994ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியானேன்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வை முதல் முயற்சியிலேயே வென்றதன் ரகசியம் பற்றி கேட்டதற்கு பதிலளித்த அமுதா, “நான் படிப்பில் படுசுட்டி என்று சிரிக்கிறார், பள்ளியில் முதல் மாணவர் என்பதோடு, இளநிலை பட்டம் பெற்றதிலும் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் வென்றதால் குடிமைப் பணிக்கான தேர்வுகள் எளிதானதாகவே இருந்தது” என்கிறார் அவர்.
அரசு மற்றும் உயர்பதவிகளில் பெண்களின் பங்களிப்பு எப்படி உள்ளது?
பெண்கள் பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளனர், குறிப்பாக முன்பெல்லாம் ஆசிரியர், மருத்துவர், செவிலியர் எனக் குறிப்பிட்ட சில பணிகள் பெண்களுக்கானதாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி பெண்கள் நுழையாத துறையே இல்லை என்ற நிலையை அடைந்து விட்டோம் என்பது உத்வேகம் தந்தாலும் இது போதுமானதல்ல. ஏனெனில் பெண்கள் எல்லாத்துறையிலும் நுழைந்து விட்டாலும் பெயரளவில் இரண்டு, மூன்று பேர் மட்டுமே உள்ளனர், இந்த நிலை மாறி பெண்கள் ஆண்களுக்கு நிகராக சம வாய்ப்புகளைப் பெற வேண்டும்.
ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளை எடுத்துக் கொண்டால் பெண்களின் பங்களிப்பு வெறும் 10 முதல் 20 சதவிகிதம் மட்டுமே உள்ளது. ஆண்களைப் போன்றே பெண்களும் முடிவெடுக்கும் திறன் படைத்தவர்கள், பொருளாதாரம், காமர்ஸ் என்று யோசிக்கும் ஆண்களைவிட பெண் அதிகாரிகள் என்று வரும்போது அவர்கள் மனிதாபிமானம் பற்றியும் கூடதலாக யோசிப்பார்கள், எனவே ஒரு நல்ல நிர்வாகத்திற்கு இந்த அனைத்து அம்சங்களும் பொருந்திய பெண்களின் பங்களிப்பும் தேவை என்பதே என்னுடைய விருப்பம்.
அதனாலேயே நான் செல்லும் இடங்களில் எல்லாம் பெண்களுக்கு அரசுத்துறையில் இருக்கும் பலன்களை எடுத்துக் கூறி அவர்களுக்கு ஊக்கமளித்து வருகிறேன். அதோடு அரசு சம்பளம் நிலையானது என்பதோடு, சமுதாயத்திற்கு பணியாற்ற அரசு நமக்கு ஊதியம் தருகிறது என்ற பெருமையும் உண்டு.
பணியில் நீங்கள் சந்தித்த சவால்கள்?
நான் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்ற உடன் எனக்கு முதலில் வழங்கப்பட்ட பணி கடலூர் மாவட்ட துணை ஆட்சியர் பொறுப்பு, அதன் பின்னர் செங்கல்பட்டுக்கு மாறுதல் கிடைத்து அங்கு மணல் கொள்ளை மிகப்பெரிய பிரச்னை. மணற்கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற போது ஒரு லாரி என்னை தாக்கிவிட்டு சென்றுவிட்டது, ஆனாலும் நான் ஓய்ந்து விடவில்லை.
அடுத்தகட்டமாக கோவை மாவட்டத்தில் தொழில்சாலைகள் மைய பொதுமேலாளர், யுனிசெஃப்பின் குழந்தைகள் நலன், சானிடேஷன் உள்ளிட்ட பிரச்னைக்குத் தீர்வு காணும் தேசிய திட்ட அதிகாரி பொறுப்பையும் வகித்துள்ளேன். தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்ததே இந்த பயணத்தில் மிகச் சவாலானது. தருமபுரி மாவட்டம் அடிப்படையில் பெண்கல்வியில் பின்தங்கிய மாவட்டம், அதே போன்று பெண் சிசுக் கொலைகள், குழந்தைத் திருமணங்கள் அதிக அளவில் நடைபெறும் இடமாகவும் அது இருந்தது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண இரண்டு வழிகளை நான் பின்பற்றினேன்;
1. சுயஉதவிக் குழுக்களை அமைத்து பெண்களுக்கு பயிற்சி அளித்து வங்கிக் கடன் பெற்று அவர்களை சுய வருமானம் ஈட்டுபவர்களாக உருவாக்கினோம். இதனால் அவர்கள் பெண் குழந்தைகளின் கல்வி நிலை முன்னேற்றம் அடைந்தது.
2. பள்ளி செல்லும் பெண் குழந்தைகளிடம் குழந்தைத் திருமணம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு சக மாணவிகள் பாதிக்கப்பட்டால் புகார் தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தியதன் பயனாக பல குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
இடம் மாறுதல்கள், பணி மாறுதல்கள் பற்றிக் கவலைப்படாமல் தனக்கு அளிக்கும் பணியை சிறப்பாக செய்து முடிப்பதில் அமுதாவிற்கு நிகர் யாரும் இல்லை. நிர்வாகத்திறன் மட்டுமல்ல சென்ற சட்டசபை தேர்தலில் உதவி தேர்தல் அதிகாரியாக சிறப்பாக பணியாற்றி நல்ல முறையில் தேர்தலை நடத்திய பெருமைக்கும் சொந்தக்காரர் அவர். தற்போது தொழிலாளர் ஆணையத்தின் ஆணையராக இருக்கும் அமுதா, அண்மையில் சென்னையை புரட்டிப் போட்ட மழை வெள்ளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் துணிச்சலாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.
மழை வெள்ள மீட்புப் பணிக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட அவர், துரிதமாக செயல்பட்டதையடுத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் குழுவிலும் தமிழக அரசு அவரை நியமித்துள்ளது.
பெண் முன்னேற்றத்திற்கு எது தடைகல்?
பெண்கள் உயர்பதவியை அடைவதில் இருக்கும் தடைகல் சிறுவயது முதலே அவர்களுக்கு அளிக்கப்படும் தவறான வழிகாட்டுதலே. ஏனெனில் நம் சமூகம் பெண்களை பலவீனமான இனமாகவே வளர்த்தெடுக்கிறது. இந்த நிலை மாற வேண்டும் ஆண்களுக்கு இருக்கும் அனைத்து அம்சங்களும் பெண்களிடமும் உள்ளது உடல் மற்றும் மனரீதியில் இருவரும் சமமே என்பதை பெண்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். இந்த பழக்கம் நம்வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும்.
பெற்றோர் ஆண் பிள்ளை, பெண் பிள்ளை இருவரையும் பாலின பாகுபடுகளின்றி சமமாக நடத்த வேண்டும், அடுத்தபடியாக பெண்களுக்கு தைரியத்தை ஊட்டும் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது. பெரும்பாலான நேரத்தை குழந்தைகள் பள்ளியில் செலவிடுவதால் அவர்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவது ஆசிரியர்களின் கையில் தான் உள்ளது.
எனது பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி இவை மூன்றுமே எனக்கு சிறந்த வழிகாட்டியாக அமைந்தது. எனக்கு கபடி போட்டி மீது அதீத ஆர்வம் உண்டு, நான் இந்த விளையாட்டை என்னுடைய விருப்பமாக தேர்வு செய்த போது இது ஆண்களுக்கான விளையாட்டு என்று யாரும் எனக்குத் தடைபோடாமல் மாறாக எனக்கு உற்சாகமூட்டினர்.
குழந்தைகளிடம் நீ பெண் குழந்தை பலவீனமான இனம் என்ற மாயையை ஏற்படுத்தாதீர்கள், ஆபத்து நேரத்தில் மற்றவர்களின் உதவிக்காக அபயக்குரல் எழுப்பாமல் அவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஒரு திருடன் ஒரு பொருளை திருடிச் சென்றால் அவனுக்கு சமமாக ஓடி தன் பொருளை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை சிறுவயது முதலே ஏற்பட வேண்டும்.
குடும்பப் பொறுப்புகளால் கனவுகளை தொலைத்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் பெண்களுக்கு சொல்ல விரும்புவது என்ன?
'திருமணம் என்பது எப்போதும் வாழ்வின் தொடக்கமாக இருக்க வேண்டுமே தவிர முடிவாக இருக்கக் கூடாது.'
நான் திருமணம் செய்து கொள்ளும் முன்னரே என் கணவரிடம் என்னுடைய வாழ்க்கைப் பயணத்தையும் லட்சியத்தையும் தெளிவாகக் கூறி விட்டேன், இந்த தெளிவு இல்லாததே மனமுறிவு, விவாகரத்துக்கு முக்கியக் காரணம் என நான் கருதுகிறேன். வாழ்வின் பெரும்பகுதியை பகிர்ந்து கொள்ளும் இருவரும் தங்கள் வாழ்க்கைப் பாதையை பற்றி முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதன் பின்னர் திருமண பந்தத்தில் இணைவதில் எந்தத் தவறும் இல்லை என்றே நான் கருதுகிறேன். குடும்பம் என்று வரும் போது பெண்கள் மட்டுமே அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆண், பெண் இருவரும் இணைந்ததே குடும்பம் எனவே பொறுப்பை இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
மேலை நாட்டு பழக்கவழக்கங்களில் நமக்கு சௌகரியமான விஷயங்களை காப்பி அடிக்கும் நாம் அவர்கள் கடைபிடிக்கும் சமநிலை வாழ்வை மட்டும் விட்டுவிடுகிறோம். அவர்கள் மளிகை சாமான் வாங்குவது, குழந்தை மற்றும் வீட்டு பராமரிப்பை பகிர்ந்தே செய்கின்றனர், இந்த தலைமுறையினருக்கு இந்த பழக்கத்தை நாம் புகுத்தினால் வாழ்வில் ஏற்படும் மனஅழுத்தத்தை போக்க முடியும்.
என் அப்பா அம்மா இருவருமே அரசுப் பணி ஊழியர்கள் அவர்கள் இருவரும் தங்களது பொறுப்பை பகிர்ந்து கொண்டு செய்ததை சிறு வயது முதலே நானும் என் சகோதரர் மற்றும் சகோதரி பார்த்து வளர்ந்தோம், அதனாலேயே இதுபோன்றதொரு தெளிவு ஏற்பட்டிருக்கலாம். அதிர்ஷ்டவசமாக நான் திருமணம் செய்த கொண்டவரும் ஐஏஎஸ் அதிகாரி என்பதால் என்னுடைய எதிர்கால வாழ்க்கை பற்றி இருவரும் கலந்து பேசி தெளிவு பெற்ற பின்னரே திருமணம் செய்து கொண்டோம். வாழ்க்கை என்பது Give and Take policy மாதிரிதான், எனக்கு அலுவலகப் பணி இருக்கும் போது என் கணவர் வீட்டு நிர்வாகத்தை கவனித்துக் கொள்வார்.
ஆனால், அதே சமயம் பெண்கள் தங்களது பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது. பெண் சுதந்திரம் என்பதன் அர்த்தம் சுதந்திரமாக இருப்பதல் பொறுப்புடன் கூடிய சுதந்திரம் என்பதே என்னைப் பொருத்தவரையில் நான் நினைப்பது. பொறுப்பிற்காக உரிமைகளை விட்டுக் கொடுக்கத் தேவையில்லை. உங்களுக்குப் பிடித்த கல்வி, வேலை உள்ளிட்டவற்றை கேட்டுப் பெறுவது உங்களின் உரிமை அதற்காக எப்போதும் தயங்கக் கூடாது. ஆண்களிடம் இருக்கும் முழு சக்தியில் பாதியை கேட்டுப் பெறும் போது அவர்களுக்கு சிறிது வலி இருக்கும் அதற்காக நாம் கவலைப்படக் கூடாது.
மகளிர் தின வாழ்த்து செய்தி என்ன?
உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆண், பெண் இரு பாலினரும் சமமான சக்தி கொண்டவர்களே. அடுத்த தலைமுறை இந்த சமன்பாட்டை உணர்ந்து செயல்படவேண்டும். எல்லா பிரச்னைகளுக்கும் சமூகத்தை மட்டுமே குறைசொல்லாமல், ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண்குழந்தையாக இருந்தாலும் பெற்றோர்கள் அவர்களை நல்ல முறையில் வளர்க்க வேண்டும். குழந்தைப் பருவத்திலிருந்தே இருவருக்கும் சமஉரிமை உள்ளதை புகட்டி வளர்த்தால் எதிர்காலத்தை நல்ல சமூகமாக கட்டமைக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.
“பெண்கள் இல்லாமல் உலகம் இல்லை, அதனால் உலகில் ஒவ்வொரு நாளும் மகளிர் தினம் தான்”.
மகளிர் தினச் சிறப்பு கட்டுரைகள்:
'பெண்களை மதிக்கும் சமூகமே உயர்ந்த நிலையை அடையும்'- எழுத்தாளர் அனு சுப்ரமணியன்