புற்றுநோய் பறித்துப்போன தாய்மை; புதிய பாதை உருவாக்கிக் கொண்ட மது சிங்
புற்றுநோய் செல் உங்கள் மனதையும், ஆன்மாவையும் அரிக்க ஒரேயோரு மோசமான நாள் போதுமானது. நமது வாழ்வின் முக்கிய குறிக்கோளை தூக்கி வீசவும், நம் நிலையை எண்ணி வருந்தவும் அதுவே போதும். இந்தக் கதை இத்தகையதொரு மாயவலைக்குள் சிக்கிக்கொண்ட பின்னரும் மீண்டெழுந்தவரின் அனுபவத்தைப் பற்றியது. ஐம்பத்து மூன்று வயது மது சிங் புற்றுநோயுடன் போராடிய அதே வேளையில் நொய்டாவின் புகழ்பெற்ற ஆரம்பப் பள்ளியைத் தொடங்கியுள்ளார்.
ஜார்க்கண்டின் வளர்ந்துவரும் தொழில்நகரமான ஜாப்லாவைச் சேர்ந்த மதுவின் இளம் வயது வருத்தங்கள் இல்லாததாக, மூன்று சகோதரன் மற்றும் ஒரு குட்டித் தங்கையுடனான சாகசப் பயணமாக இருந்தது. தன்னம்பிக்கையை ஒருகனமும் தவறவிடாத அவர் ராஞ்சி பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடத்தில் பட்டம் பெற்றார்.
ஜாம்ஷெட்பூரின் இந்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்த அன்சல் சிங்கை மணமுடித்த பின்னர், இந்தியாவின் பல்வேறு மூலைகளுக்கும் பயணப்பட்டார். மகன் அன்கேஷுடன் தங்களது சிறு குடும்பம் அழகாக உருப்பெற்றதுப் போல தோன்றியது. தனது விருப்பப்படி அழகு நிலையம் ஒன்றை திறக்க முயற்சித்தார். ஆனால், கடவுளின் சித்தம் வேறாக இருந்தது.
கடந்த 1988-ம் ஆண்டு மார்பகத்தில் கட்டி உருவாகியிருப்பது மருத்துவர்களால் உறுதிசெய்யப்பட்டது. பாட்னாவில் இந்த கட்டியை நீக்குவதற்கான சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், அத்தோடு இதற்கான தீர்வு கிடைக்கவில்லை. தொடர்ந்து 1989-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு சின்ன அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. மும்பையின் டாட்டா நினைவு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்போது நீக்கப்பட்ட திசுவை ஆய்வு செய்தபோது, புற்றுநோய் செல்கள் பரவியிருப்பது உறுதியானது.
மது டாட்டா நினைவு மருத்துவமனையில் தனக்கு சொல்லப்பட்ட இந்த விஷயம் வாழ்க்கையின் மிக மோசமான செய்தி என்றார்.
‘எனக்குள் இருந்த அத்தனை நம்பிக்கையும் சுக்கு நூறாய் உடைந்து போனது. புற்றுநோயின் பின்விளைவுகளைப் பற்றி நான் ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தேன். எனது ஏழு வயது மகனின் முகம் கண் முன்னே விரிந்தது. நான் இறந்த பின்னர் அவன் எப்படி வாழ்வான்? என்றெல்லாம் சிந்தனைகள் விரிந்தன.
மருத்துவர் முலை நீக்க அறுவை சிகிச்சையை உடனடியாக செய்துகொள்ள அறிவுறுத்தினார். மதுவுக்கு கெட்ட செய்திகள் தொடர்ச்சியாக அணிவகுப்பதாகத் தோன்றியது. தன்னை அலங்கரித்துக்கொள்வதில் ஆர்வம் மிகுந்த மதுவுக்கு மேன்மேலும் சோகத்தில் ஆழ்த்துவதாய் இந்த செய்தி அமைந்தது.
‘துயரம் மற்றும் துரதிஷ்டம் போன்றவற்றை வெறும் வார்த்தைகளாகத்தான் அறிந்திருந்தேன். புற்றுநோயாளிகளின் வார்டில் அதன் அர்த்தம் என்ன என்பதை முழுமையாக உணர்ந்தேன்.’ உடலளவில் பாதிப்பை ஏற்படுத்திய இந்தப் புற்றுநோய்தான், மதுவுக்கு மாபெரும் மன தைரியத்தையும் தந்தது.
‘ஒவ்வொரு முறை எனது கணவரையும் அவருடன் இருக்கும் ஏழு வயது மகனையும் பார்க்கும்போது அவர்களுக்காகவாவது வாழ வேண்டும் எனத் தோன்றியது. எனது கணவரும் அவரது சகோதரன் கே.எம். சிங்கும் புற்றுநோய் செல்களை எனது உடலிலிருந்து முழுமையாக விரட்டியடிக்க முடியும் என்ற தைரியத்தைக் கொடுத்தனர். நானும் போராடத் தயாரானேன்.’
புற்றுநோயிலிருந்து முற்றிலுமாக குணமடைய ஏழு ஆண்டுகள் தேவைப்பட்டது. அதே காலகட்டத்தில் என்னை காசநோயும், ஆஸ்துமாவும் தாக்கின. எனது உடலின் எடை பாதியாக குறைந்தது. நான் டெல்லி மருத்துவமனைகளில் காலத்தைக் கழித்த வேளையில் எனது கணவரும், மகன் அன்கேஷும் ஜார்கண்ட்டில் வசித்தனர். அவர்களைப் பிரிந்து வாடினாலும், எனக்கான வேலைகளை நானே செய்துகொண்டது என்னை தன்னிச்சையாக செயல்படவைத்து மேலும் திடமாக்கியது.’
‘இந்த நோய் என்னை நானே அறிந்துகொள்ள பெரிதும் வழிவகுத்து தந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் இருந்ததைவிட, முழுமையாக குணமடைந்த பின்னர் இன்னும் சிறப்பாகவும், கூர்மையாகவும் இருப்பதாக உணர்ந்தேன்.’
இந்தப் புதிய தெளிவால் தனது மகனை ஏழு வயது முதல் பள்ளிக்கு அனுப்புவது, பார்த்துக்கொள்வது, உணவு ஊட்டுவது, விளையாடுவது என இழந்த சுகங்களை தான் திரும்பப்பெற புதியதொரு வழியை கண்டுபிடித்தார். ‘தாய்மையின் சுகங்களை தவறவிட்டதற்கு ஈடாக என்ன செய்வது என யோசித்தபோது ஆரம்பப் பள்ளியைத் (ப்ளே ஸ்கூல்) தொடங்கலாம் என்று முடிவெடுத்தேன்.’
________________________________________________________________________
தொடர்பு கட்டுரை:
தலசீமியா நோய், பாதியில் விட்ட பள்ளிப்படிப்பு, இவை எதுவும் ஜோதியின் கனவை தகர்க்கவில்லை!
________________________________________________________________________
‘எனது மனதுக்கு நிறைவு தரும் 'ரிதம்' என்று பெயரிடப்பட்ட பள்ளியை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வாழ்கையில் வேறெதுவும் முக்கியமானதாகத் தோன்றவில்லை.’ தனது மாமியார் அடிக்கல் நாட்டி திறந்து வைக்கப்பட்ட ரிதம் ஆரம்பப்பள்ளி சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என மது உணர்ந்திருந்தார். கணவர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என அனைவரும் சாம்பலிலிருந்து ஃபீனிக்ஸ் பறவையாக மது திரும்ப எழ உதவி புரிந்தனர். அன்சல் மதுவுக்கு ஒரு கணவனாக மட்டுமின்றி, உடல்நிலை சரியில்லாத மகளைப் பார்த்துக்கொள்ளும் தந்தையாக, தனது வாழ்க்கைத் துணையின் லட்சியத்தை அடைய உதவும் சிறந்த துணையாகவும் பக்கபலமாக இருந்துள்ளார்.
ரிதம், கடந்த 2006-ம் ஆண்டு வெறும் ஏழு குழந்தைகளுடன் தொடங்கப்பட்டது. ‘ரிதம் தொடங்கியபோது எனது பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குமளவுக்குக் கூட வருமானம் இல்லை. உண்மையான உழைப்புக்கு பலன் கிடைக்கும் என்று எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. முதல் மூன்று ஆண்டுகளுக்கு மிகுந்த கடினமான சூழலே நீடித்தது. அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக எங்களது சிறப்பான முயற்சிகளுக்கு பெற்றோர்களிடையே வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. எனது பணியாளர்கள்தான் எனது சொத்து. பெற்றோர்கள்தான் விளம்பரதாரர்கள்’ என பெருமிதமாகக் கூறுகின்றார் மது.
முழுவதும் பெண்களால் இயங்கும் ரிதம் ஆரம்பப் பள்ளியில், பணிபுரிபவர்கள் அனைவருமே முன்னாள் இல்லத்தரசிகள் என்பது கூடுதல் சிறப்பு. இவர்களுக்கென தனியாக சான்றிதழுடன் பணிக்கான பயிற்சி அளிக்கப்படுகின்றது. இது மட்டுமின்றி ஆண்டுதோறும் வருமானம் குறைவான நிலையில் உள்ள குடும்பத்திலிருந்து ஐந்து குழந்தைகளுக்கு இலவசமாக இங்கு அனுமதியளிக்கப்படுகின்றது. பின்னர் மாற்றுத்திறனாளி குழந்தைகள், மற்ற குழந்தைகளைபோல சமூகத்தை எதிர்கொள்ள தனித்தன்மையான பாடத்திட்டங்களை இந்தப் பள்ளியில் வடிவமைத்தனர்.
தற்போது இந்தப் பள்ளியில் நூற்றைம்பது குழந்தைகள் பயின்றுவருகின்றனர். கல்வி உலகத்தால் (எஜுகேஷன் வேர்ல்டு) நொய்டாவின் ஆரம்பப்பள்ளிகளிலேயே சிறந்த பள்ளியாக கடந்த 2013-ம் ஆண்டு ரிதம் தேர்வு செய்யப்பட்டது. ஏ.பி.பி. செய்திகள் குழந்தைகளுக்கான பாதுகாப்பான அமைப்பையும், சிறந்த நிர்வாக அமைப்பையும் கொண்டுள்ளது என ரிதம் ஆரம்பப் பள்ளியை பாராட்டியுள்ளது.
மது வாழ்வின் மோசமான கட்டத்தைக் கடந்த பின்னரும் ஒரு தனியாளாக யார் வேண்டுமானாலும் தமது கனவுகளை நனவாக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றார் என்றால் அது மிகையாகாது.
ஆக்கம்: பின்ஜால் ஷா | தமிழில்: மூகாம்பிகை தேவி
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
இது போன்ற துயரங்களில் இருந்து மீண்ட பெண்கள் தொடர்பு கட்டுரைகள்:
தவறான அணுகுமுறை மட்டும்தான் உண்மையான ஊனம்: குண்டு வெடிப்பில் பிழைத்த மாளவிகா