விண்ணில் சீறிப்பாய்ந்த 'Chandrayaan- 2'- மகிழ்ச்சியில் இந்தியா! பயணத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது?
இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின முயற்சியில் உருவான சந்திராயன் 2 இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு பூமியின் புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. சந்திராயன் 2-வின் பயணத்தில் அடுத்தது என்ன?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகளின் கனவு...! எந்த உலக நாட்டு விஞ்ஞானிகளும் ஆராய்ந்து பார்த்திராத நிலவின் தென்துருவப் பகுதியில் மறைந்து கிடக்கும் மர்மங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட சந்திராயன் 2 கடந்த ஜூலை 15ம் தேதி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தடை பட்டது.
பழுதுகள் சரிபார்க்கப்பட்டு இன்று பிற்பகல் 2.43 மணியளவில் விஞ்ஞானிகள் மற்றும் பார்வையாளர்களாக அமர்ந்திருந்த மக்களின் கரஒலியோடு நெருப்பைக் கக்கிக் கொண்டு வெண்மேகங்களை கிழித்து காதை பிளக்கும் வெற்றி முரசு சத்தத்துடன் விண்ணை நோக்கி சீறிப் பாய்ந்தது.
சந்திராயன் 2 வெற்றிகரமாக திட்டமிட்டபடி பூமியின் புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதையடுத்து இஸ்ரோ தலைவர் கே.சிவன்,
“இன்றைய தினம் இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு முக்கிய நாள் என்று குறிப்பிட்டார். சந்திரனின் தென்துருவத்தில் இதுவரை கண்டறியப்படாதவற்றை கண்டறிவதற்கான இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் இதுவொரு தொடக்கம்தான் விண்வெளி அரங்கில் இந்தியா மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது,” என்றார்.
கடந்த வாரம் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டு, 24 மணிநேரத்திற்கு உள்ளாகவே சரிசெய்யப்பட்டது. எனினும், அடுத்த ஒன்றரை நாள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஜிஎஸ்எல்வி மார்க்-3 எம்-1 செலுத்துவாகனத்தை வெற்றிகரமாக செலுத்த கடின உழைப்பை வழங்கிய இஸ்ரோவின் அனைத்துப் பிரிவினருக்கும் தமது பாராட்டுக்களையும், நன்றியையும் சிவன் தெரிவித்துக் கொண்டார்.
பழுது நீக்கத்தின்போது மேற்கொள்ளப்பட்ட பணிகள் காரணமாக, இதற்கு முந்தைய ஜிஎஸ்எல்வி செலுத்துவாகனத்தின் செயல்பாடுகளைவிட, இன்று செலுத்தப்பட்ட வாகனத்தின் செயல்திறன் 15 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதலாக 6,000 கிலோமீட்டர் இயங்கத் தேவையான எரிபொருள் கிடைத்திருப்பதன் மூலம், விண்கலத்தின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது.
சந்திரயான்-2 வெற்றிகரமாக செலுத்தப்படுவதை இஸ்ரோவும், இந்தியாவும் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகமும் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தது. விண்வெளித் துறையில் இந்தியாவின் கொடி மேலும் உயரப் பறக்க தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் சிவன் குறிப்பிட்டார்.
அடுத்த 23 நாட்களுக்கு சந்திரயான் 2 விண்கலம் பூமியை அதன் நீள்வட்டப்பாதையில் சுற்றிவரும். பூமிக்கு அருகில் வரும்போது அதில் உள்ள என்ஜின் இயக்கப்பட்டு சந்திராயன் நீள்வட்டப்பயணப்பாதையின் தூரம்படிப்படியாக அதிகரிக்கப்படும். 23வதுநாள் இந்த விண்கலம் சந்திரனின் ஈர்ப்புவிசைப்பகுதிக்குள் செலுத்தப்படும். இந்த நடவடிக்கை சுமார் 7 நாட்கள் மேற்கொள்ளப்பட்டு, 30வது நாள் விண்கலம் சந்திரனை நீள்வட்டப்பாதையில் சுற்றிவரும் வகையில்இயக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து சுமார் 13 நாட்கள் விண்கலத்தின் வேகம்படிப்படியாக குறைக்கப்பட்டு, 43வது நாள் விண்கலத்தின் இரண்டு பகுதிகளான ஆர்பிடெரும், லேண்டரும் பிரிக்கப்படும். பின்னர், ஆர்பிடெர் சந்திரனை 100கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றிவரும்.
ஆர்பிட்டரில் இருந்து பிரிக்கப்பட்டு விக்ரம் லேண்டர் மெதுவாக சந்திரனின் தரைப்பகுதி நோக்கி செலுத்தப்படும். மெதுவாக சந்திரனின் தரைப்பகுதியை நோக்கி செலுத்தப்படும். 48 வதுநாள் விக்ரம் சந்திரனில் மென்மையாகத் தரையிறங்கும். ஆர்பிடெர், சந்திரனின் தரைப்பகுதியை ஆய்வுசெய்து, பூமிக்கும், சந்திரனில் இறங்கும் விக்ரம் லேண்டருக்கும் தொடர் தகவல்களை அளிக்கும்.
சந்திரனை 100 கி.மீட்டர் உயரத்தில் துருவப்பகுதியின் வழியாக சுற்றி வரும் இந்த ஆர்பிடரில் சந்திரனின் தரைப்பகுதியை படம்பிடிக்கும் கேமரா, அதிலுள்ள தனிமங்களின் அளவைக் கணக்கிடும் எக்ஸ்ரே ஸ்பெட்ரோ மீட்டர், சந்திரனில் உறைபனி இருப்பதை உறுதிப்படுத்தும் புகைப்படத்தை எடுப்பதற்கான கருவி, துருவப்பகுதிகளை படம் பிடிக்கும் கருவி, சந்திரனின் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் 2 எக்ஸ்ப்ளோரர் கருவிகளும் விண்கலனில் வைக்கப்பட்டுள்ளது.
சந்திரனில் ஏற்படக் கூடிய அதிர்வுகளைக் கண்டுபிடிக்கும் கருவி விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்டுள்ளது. சந்திரனின் தரைப்பகுதியில் இருக்கும் வெப்பத்தை கண்டறியவும் கருவிகள் சேர்க்கப்பட்டுள்ளன. சந்திரனின் தரையில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ளும் பிரக்யான் ரோவரில் தனிமங்களின் அளவைக் கணக்கிடும் ஸ்பெக்ட்ரோஸ்கோப் இடம்பெற்றுள்ளது.
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே இருக்கும் தூரத்தை 48 நாட்களில் கடந்து சந்திராயன் 2 ஏற்கனவே திட்டமிட்டபடி செப்டம்பர் 6 அல்லது 7ல் சந்திரனின் தென்பகுதியை சென்றடையும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சந்திராயன் 2 தொடங்கியுள்ள வெற்றிப் பயணத்தை இந்தியாவே பெருமையோடு கொண்டாடி வருகிறது.
Chandrayaan 2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது இஸ்ரோ விஞ்ஞானிகளின் வலிமைக்கான சான்று என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
“விஞ்ஞானத்தில் புதிய எல்லைகளை அளவிட 130 கோடி இந்தியர்களின் உறுதியை விளக்கும் வகையில் சந்திராயன் 2 விண்கலத்தின் பயணம் அமைந்துள்ளது. ஒவ்வொரு இந்தியரும் இன்று பெருமிதம் கொண்டுள்ளனர். சந்திராயன் 2 முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது.”
சந்திரனை ரிமோட் சென்சிங் செய்ய ஆர்பிட்டர், நிலவில் இறங்கி ஆராய்ச்சி செய்ய லேண்டர், ரோவரை தன்னகத்தே கொண்டுள்ளது சந்திராயன் 2. இந்த புதிய ஆய்வு நமக்கு நிலவைப் பற்றிய புதிய தகவல்களை வழங்கும். சந்திராயன் 2 போன்ற முயற்சிகள் நமது இளைஞர்களை அறிவியல், உயர்தர ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை நோக்கிச் செல்ல மேலும் ஊக்குவிக்கும். சந்திராயன் 2 விண்கலத்திற்கு நன்றி என்றும் பிரதமர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
சந்திராயன் 2 வரலாற்றில் வெற்றியை பதிவு செய்திருப்பதற்கு இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படும் வாய்ப்பை வழங்கிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதே போன்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், ]உள்ளிட்டோரும் நிலவை முத்தமிட சென்றிருக்கும் சந்திராயன் 2 வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.