Chandrayaan 2: 2.1 கிமீ தொலைவில் ’விக்ரம் லேன்டர்’ சிக்னல் துண்டிப்பு!
நடந்தது என்ன: சந்திராயன்- 2 வெற்றிக்கு மிக அருகில் சென்றுள்ளது. நிலவின் தென்துருவ பகுதியில் விக்ரம் லேன்டர் 2.1 கிலோ மீட்டர் தொலைவில் சென்ற போது சிக்னல் துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது.
இந்தியாவின் நிலவை நோக்கிய லட்சியப் பயணத்தின் ஒரு பகுதியான சந்திராயன்-2 பத்து ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணிற்கு செலுத்தப்பட்டது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த செயற்கைகோளானது விண்ணில் செலுத்தப்பட்டது முதல் சரியான பாதையில் சென்று கொண்டிருந்தது.
சந்திரயான்-2ல் மூன்று முக்கிய கலன்கள் இருந்தன நிலவைச் சுற்றி ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர் என்ற கலனும், நிலவில் தரையிறங்க ’விக்ரம் லேண்டர்’ கலனும், நிலவின் தரைப்பகுதியில் ஊர்ந்து சென்று ஆய்வு நடத்த ரோவர் என்ற சாதனமும் பொருத்தப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி சந்திராயன் 2 கலன்கள் புவிவட்ட பாதையில் சென்றது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சந்திரயான் விண்கலத்தின், 'விக்ரம்' தரையிறங்கும் கலன் சுற்றுவட்டக் கலனிலிருந்து கடந்த 2ம் தேதி வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.
இதனையடுத்து செப்டம்பர் 7 அதிகாலையில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது. பெங்களூரு இஸ்ரோ மையத்தில் இருந்து இந்த நிகழ்வானது கண்காணிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்திருந்து இந்த வரலாற்று நிகழ்வில் பங்கேற்றார். விண்வெளி ஆய்வில் மிக சவாலானது லேன்டரை சரியாக தரையிறக்குவதாகும். சாஃப்ட் லேண்டிங்கின் அந்த கடைசி 15 நிமிடத்தில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம். சரியாக அதிகாலை 1.40 மணியளவில் விக்ரம் லேன்டரை தரையிறக்கம் செய்யும் பணியானது தொடங்கியது.
நிலவின் தரைப்பகுதிக்கு 600 கி.லோ மீட்டர், 400 கிலோ மீட்டர் தொலைவு என அடுத்தடுத்த தூரங்களை மிகச்சரியாக கடந்து சென்றது லேன்டர். இதனை விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால் இந்த மகிழ்ச்சியானது நீடிக்கவில்லை அடுத்த சில நிமிடங்களிலேயே விஞ்ஞானிகளின் முகங்கள் இருகிப் போகின.
1471 கிலோ எடை கொண்ட விக்ரம் லேண்டர் தரையிறங்கும் சில நிமிடங்களுக்கு முன்னர் தனது பாதையில் இருந்து விலகி செங்குத்தாக சென்றது. கடைசி நேரத்தில் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் ஒரு நிசப்தம் நிலவிய நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் என்ன நடந்தது என்பதை பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கிக் கூறினார்.
அடுத்த சில நிமிடங்களில் தழுதழுத்த குரலில் சந்திராயன் 2 பற்றிய அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரோ தலைவர் சிவன் விக்ரம் லேன்டர் நிலவின் தரைப்பகுதியை நோக்கி 2.1 கிலோ மீட்டர் தொலைவில் சென்ற போது சிக்னல் துண்டிக்கப்பட்டதால் சமிக்ஞைகள் கிடைக்கவில்லை என்றார்.
கிடைக்கப்பெற்ற தகவல்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து என்ன நடந்திருக்கும் என்பதை ஆராய்வார்கள். நிலவைச் சுற்றி வரும் ஆர்பிட்டர் அடுத்த ஓராண்டிற்கு ஆய்வு செய்து தகவல்களை திரட்டி அனுப்பும் என்று கூறினார்.
லேன்டரில் இருந்து சிக்னல் கிடைக்காததால் வாடிப்போயிருந்த விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்ட விஞ்ஞானிகளை தட்டிக் கொடுத்து நம்பிக்கை கொடுத்தார்.
“தைரியமாக இருங்கள் உங்களுடன் நான் இருக்கிறேன், முன்னேறிச் செல்லுங்கள். இந்திய விஞ்ஞானிகளை நினைத்து நாடு பெருமை கொள்கிறது. நாம் இதுவரை செய்துள்ளது சாதாரண விஷயமல்ல. நாடு, அறிவியல், மக்களுக்காக விஞ்ஞானிகள் சிறந்த சேவையாற்றியுள்ளீர்கள். வாழ்க்கை என்றால் மேடு, பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும். நம்பிக்கையுடனும், கடின உழைப்புடனும் தொடர்ந்து விண்வெளி ஆய்வுகளைச் செய்வோம் என்றும் பிரதமர் விஞ்ஞானிகள் மத்தியில் பேசினார்.
இதனைத் தொடர்ந்து லேன்டர் தரையிறங்குவதை நேரில் பார்ப்பதற்காக வந்திருந்த மாணவர்களுடனும் பிரதமர் கலந்துரையாடினார்.
சந்திராயன் 2ல் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேன்டரின் சிக்னல் ஏன் துண்டிக்கப்பட்டது? லேன்டருக்கு என்ன ஆனது என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். வெற்றிக்கு மிக அருகில் சென்ற சந்திராயன் 2 தோல்வி பெற்றதாக கூற முடியாது என விண்வெளி பற்றிய ஆய்வுகளை செய்து வரும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விண்வெளி ஆய்வுகளை செய்து வரும் எல்லா நாட்டிற்குமே லேண்டிங் என்பது மிகப்பெரிய சவாலான விஷயம். நிலவில் வளிமண்டலம் இல்லாத நிலையில் லேண்டரின் வேகத்தை கட்டுப்படுத்தும் போது எதிர்பாராத எந்த நிகழ்வும் நடைபெறலாம். பல நாடுகளின் லேண்டர்கள் தரையிறங்கும் போது விழுந்த நொறுங்கும் சம்பவங்களும் நடந்துள்ளன. எனவே நிலவின் தரைப்பகுதிக்கு மிக அருகில் 2.1 கிலோ மீட்டர் தொலைவு வரை சந்திராயன் 2 லேண்டர் சென்றிருப்பதே வெற்றி தான் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருப்போம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.