‘உங்களுக்கு சமைக்கத் தெரியுமா? அப்படியானால் உங்களால் சம்பாதிக்கவும் முடியும்’
வீட்டிலிருந்தபடியே சமையல் செய்து சம்பாதிக்க வழிகாட்டுகிறது ஷீரோ ஹோம் ஃபுட்.
“எனக்கும் சம்பாதிக்கணும்னு ஆசைதான். ஆனா என்ன பண்றது? சமையலும் வீட்டு வேலையும் தவிர வேற எதுவும் தெரியாதே?”
”என்ன சொன்னீங்க? சமைக்கத் தெரியுமா? அது போதுமே. நீங்களும் சம்பாதிக்கலாமே?”
”ஆனா, நான் அதுக்கான பயிற்சி எல்லாம் எடுத்துக்கலையே?”
“தேவையே இல்லைங்க. உங்களுக்கு பயிற்சி கொடுப்பாங்க”.
“நான் முதலீடு செய்யற நிலைமையில இல்லையேங்க?”
“உங்க சமையல் திறமைதாங்க முதலீடு. பணம் செலவழிக்க வேண்டாம்”.
”என்ன இருந்தாலும் இன்னொருத்தர் வீட்டுக்கும் போய் சமையல் வேலை எல்லாம் என்னால செய்யமுடியாதே?”
”வேணாங்க. நீங்க உங்க வீட்லேர்ந்து சமைச்சுக் கொடுத்து சம்பாதிக்கலாம்...”
“நிஜமாவா? ஆனா என்னால சமைச்சதைக் கொண்டு போய் டெலிவர் பண்ணவும் முடியாதே?”
“அட, அதுகூட நீங்க பண்ணவேண்டாங்க. திரும்பவும் சொல்றேன். சமைக்கத் தெரியுமா? அது மட்டும் போதும், நீங்க சம்பாதிக்கலாம்”.
அநேகமாக உங்களுக்குப் புரிந்திருக்கும். அதேதான். வீட்டில் இருந்தபடியே சமையல் செய்து கொடுத்து சம்பாதிக்க ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது ஷீரோ ஹோம் ஃபுட் (Shero Home Food).
முதலீடு ஏதுமின்றி இதில் இணையலாம் என்பது கவனிக்கத்தக்க பிளஸ் பாயிண்ட்.
கணவன்- மனைவி இருவரும் வேலை செய்யும் இன்றைய காலகட்டத்தில் சமையலுக்கு அதிக நேரம் ஒதுக்க முடிவதில்லை. இதனால் ஹோட்டலில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவது தவிர்க்கமுடியாததாகிவிட்டது. வீட்டில் சமைக்க முடியவில்லை; அதேசமயம் ஹோட்டல் உணவையும் அடிக்கடி சாப்பிடமுடியாது.
இந்த சிக்கலுக்குத் தீர்வுகாணும் வகையில் வீட்டில் தயாரிக்கப்படும் உணவை முறையாக ஒருங்கிணைத்து வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியான 'ஷீரோ ஹோம் ஃபுட்’ தொடங்கியுள்ளார் ஜெயஸ்ரீ திலக்.
“இதுவரை வீட்டு சாப்பாட்டை இதுபோல் யாரும் சானலைஸ் செய்ததில்லை. இந்த இடைவெளியை ஷீரோ நிரப்புகிறது,” என்கிறார் ’ஷீரோ ஹோம் ஃபுட்’ இணை நிறுவனர் ஜெயஸ்ரீ திலக்.
ரெஸ்டாரண்ட், கேட்டரிங் என உணவுத் துறையில் 15 ஆண்டுகள் அனுபவமிக்கவர் ஜெயஸ்ரீ திலக். ஊபர் சேவை போன்ற வணிக மாதிரியை உணவுத் துறையில் அறிமுகப்படுத்த விரும்பிய ஜெயஸ்ரீ, அதற்கான ஆய்வைத் தொடங்கினார்.
கொரோனாவுக்கு முன்பே திட்டமிடல் தொடங்கப்பட்டாலும் பெருந்தொற்று சமயத்தில் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுக்கான தேவை அதிகரித்தது. இது ஷீரோ வளர்ச்சியை துரிதமாக்கியுள்ளது, என்றார்.
ஷீரோ ஹோம் ஃபுட்
Shero Home Food 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டது. வீட்டிலிருக்கும் பெண்கள் தங்கள் கைப்பக்குவத்தை முதலீடாகக் கொண்டு வருமானம் ஈட்ட வாய்ப்பளிக்கிறது ’ஷீரோ ஹோம் ஃபுட்.’
“சாதிக்கும் ஆண்கள் ஹீரோ என்றால் சாதிக்கும் பெண்கள் ஷீரோ,” – இதுவே இதன் பெயர் காரணம் என்கிறார் ஜெயஸ்ரீ.
ஒருவர் சமைத்த உணவின் வாசம் வீட்டு சமையலறையைத் தாண்டி ஊர் முழுவதும் பரவச் செய்கிறது ஷீரோ ஹோம் ஃபுட்.
எந்த பொருளை எதனுடன், எந்த அளவு சேர்த்தால் சுவை கூடும் என்பது உங்களுக்கு தெரியும்தானே? அப்படியானால் எப்படிச் சமைத்து எப்படி வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்த்து எப்படி சம்பாதிக்கலாம் என்பதற்கு Shero வழிகாட்டும்.
சாம்பார், ரசம், பொறியல் என நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் மெனுவில் இருக்கும். இந்த உணவு வகைகளை 10 நிமிடங்களில் தயாரிக்கும் வகையில் ரெசிபி உருவாக்கப்பட்டுள்ளது. சமைப்பவர்கள் பின்பற்ற நிலையான இயக்க நடைமுறைகள் (SOP) வழங்கப்படும். இதனால் குழப்பங்கள் இருக்காது என்பதுடன் நேரமும் மிச்சமாகும்.
முழு ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படுபவர்களுக்கு நல்ல ரேட்டிங்கும் தொடர் ஆர்டரும் கிடைக்கிறது.
இவர்கள் 20 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை மாத வருமானம் ஈட்டுகிறார்கள்.
ஷீரோ ஹோம் ஃபுட் Ready to Eat உணவு வகைகள் மட்டுமின்றி நறுக்கிய காய்கறிகள், இஞ்சி-பூண்டு விழுது என Ready to Cook வகைகளையும் வழங்கி இல்லத்தரசிகளுக்கு உதவுகிறது.
ஷீரோ ஆவது எப்படி?
ஷீரோ ஹோம் ஃபுட் செஃப் என பதிவு செய்து ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும். பதிவு செய்தவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்படும். பிறகு உங்கள் சமையலறைக்கு உணவுத் துறையின் FSSAI உரிமம் வாங்கிக்கொடுக்கிறது Shero.
சுலபமாகவும் விரைவாகவும் சமைப்பதற்கான வழிமுறைகள், ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவது, ஆர்டர் பெறுவது, டெலிவரி ஏற்பாடு போன்றவற்றிற்கு பயிற்சி வழங்கப்படுகிறது, என்று விளக்கினார் ஜெயஸ்ரீ.
ரெசிபிக்கு ஏற்ப சமைப்பது, வணிகத்தைத் திறம்பட நடத்துவது, உணவு வீணாகாமல் தவிர்ப்பது போன்றவற்றிலும் பயிற்சியளிக்கப்படுகிறது.
ஷீரோ நிறுவனத்துடன் இணைபவர்கள் செயலி மூலம் வீட்டிலிருந்தே ஆர்டர் பெறலாம். டெலிவரி ஆட்கள் வீடு தேடி வந்து சமைத்த உணவை வாங்கிக்கொண்டு உங்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவர் செய்துவிடுவார்கள்.
ஷீரோவாக பதிவு செய்துகொண்டவர்களிடையே போட்டி ஏற்படுவதைத் தவிர்க்க 3 கி.மீட்டர் வரை ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படுகிறது.
ஷீரோவாக இணைபவர்களுக்கு எந்த மாதிரியான உதவிகள் கிடைக்கும்?
ஷீரோவாக இணையும் செஃப் எப்படி சமைக்கவேண்டும் என்பதற்கு நிலையான இயக்க நடைமுறைகள் (SOP) வழங்கப்படுகிறது. அதன்படி செயல்படவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் ஷீரோ நிறுவனம் உதவுகிறது.
உதாரணத்திற்கு குறிப்பிட்ட டிஷ்ஷை எப்படித் தயாரிக்கவேண்டும் என்கிற சந்தேகம் இருக்குமானால் ரெசிபி ட்ரெயினர் உதவுகிறார்கள்.
”24X7 வாடிக்கையாளர் சேவை போல் எந்த நேரத்திலும் சந்தேகங்களை தெளிவுபடுத்தறாங்க. ஆர்டர் தாமதமாவது, டிரைவர் வரவில்லை இப்படி எந்த சிக்கலாக இருந்தாலும் சப்போர்ட் பண்றாங்க,” என்கிறார் இவர்களுடன் இணைந்துள்ள ஷீரோ ஒருவர்.
ஆர்டர் வந்ததும் 20-25 நிமிடங்களில் அந்த குறிப்பிட்ட மெனுவில் இருக்கும் உணவு வகைகளைத் தயாரித்துக் கொடுக்கவேண்டும். இதைக் கற்றுக்கொடுக்க ’டெமோ கிச்சன்’ அமைத்துள்ளனர்.
”உணவுத் துறையில் எங்களது 15 ஆண்டுகால அனுபவத்தை ஒன்று திரட்டி ஏபிசி மாதிரியை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் சமையலுக்கான முன்னேற்பாடுகளை எப்படி செய்து வைக்கலாம் என்பதில் பயிற்சியளிக்கிறோம்,” என்று பகிர்ந்துகொண்டார் ஜெயஸ்ரீ.
சென்னை முழுக்க ஷீரோ நிறுவனத்துடன் ஏற்கெனவே 50 பெண் தொழில்முனைவோர் இணைந்துள்ள நிலையில் இந்த எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனா சூழல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது?
கொரோனா சமயத்தில் பலர் வேலையை இழந்துள்ளனர். வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாத சூழலில் வருமானத்திற்கு வழி தேடும் பலருக்கு ஷீரோ ஹோம் கிச்சன் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க கொரோனா சமயத்தில் உடல் ரீதியாகவும் மனதளவிலும் பாதிக்கப்பட்ட பலருக்கு வீட்டில் சமைக்கப்பட்ட ஆரோக்கியமான உணவு அவசியமாகியுள்ளது. இதனால் வீட்டு உணவிற்கான தேவையும் அதிகரித்துள்ளது.
“ஒவ்வொரு வீட்டையும் ஷீரோ கஸ்டமராகவும் அதேசமயத்தில் ஃபுட் பார்ட்னராகவும் பார்க்கிறது,” என்கிறார் ஜெயஸ்ரீ.
வருங்காலத் திட்டங்கள்
சென்னையில் முதல் முறையாக இத்தகைய மாதிரியை உணவுத் துறையில் அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக இந் நிறுவனத்தை நடத்தி வரும் ஜெயஸ்ரீ திலக் மற்ற நகரங்களுக்கும் விரிவடைய திட்டமிட்டுள்ளார்.
அடுத்த மூன்றாண்டுகளில் 1 லட்சம் இல்லத்தரசிகளை தொழில் முனைவோராக மாற்றவேண்டும் என்கிற இலக்கை நோக்கி பயணித்து வருகிறார்.
மேலும் பல ஷீரோக்களை இவர் உருவாக்க வாழ்த்துக்கள்!