Chandrayaan-2 நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது!
'சந்திராயன் 2' விண்கலத்தை நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் வெற்றிகரமாக செலுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனைப் படைத்துள்ளனர்.
'சந்திராயன் 2' விண்கலத்தை நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் வெற்றிகரமாக செலுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனைப் படைத்துள்ளனர்.
கடந்த மாதம் (ஜூலை) 22ம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட அந்த விண்கலம் இன்று காலை 9 மணி அளவில் வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதைக்குள் செலுத்தப்பட்டது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் கே.சிவன்,
”சந்திராயன்-2 பயணம் மிகப்பெரிய மைல் கல்லை இன்று கடந்து, இலக்கிற்கு அருகில் சென்றுவிட்டது. இன்று காலை 9 மணி அளவில் சுமார் 30 நிமிடங்களில் நிலவின் வட்டப் பாதைக்குள் சந்திராயன் 2 செலுத்தப்பட்டது. இந்த செயல்பாடு நிகழும் போது சற்று பதற்றமும், பரபரப்பும் இருந்தது,” என தெரிவித்தார்.
கடந்த புதன் கிழமை அதிகாலை 2.21 மணி அளவில் புவி வட்டப் பாதையில் இருந்து சந்திரயன் 2 இஸ்ரோ விஞ்ஞானிகள் வெளியேற்றினர். புவி வட்டப் பாதையில் இருந்து விடுபட்ட சந்திரயான் 2 நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது. நிலவில் இருந்து குறைந்தபட்சமாக 114 கிலோ மீட்டர், அதிகப்பட்சமாக 18 ஆயிரத்து 72 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த சுற்றுவட்டப் பாதையில் சந்திரயன் 2 செலுத்தப்பட்டுள்ளது.
பூமியில் இருந்து செலுத்தப்பட்டு 28 நாட்களுக்குப் பிறகு, தற்போது நிலவின் நீள்வட்டப் பாதையை செயற்கைக்கோள் அடைந்த நிலையில், வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி சந்திராயன் 2-ல் உள்ள விக்ரம் லேன்டர் பிரிந்து உள்நுழையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
“விக்ரம் லேன்டர் பிரிந்த பிறகு செப் 3 ஆம் தேதி அதன் அசைவு சரியாக உள்ளதா என்பதை சோதிக்க 3 நொடி செயல்பாடு மேற்கொள்ளப்படும். அதன்பிறகு, செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலையில் பிரிக்கப்பட்ட விக்ரம் லேன்டர் நிலவில் தரையிறங்கும்,” என்றார்.
தற்போது வரை விண்கலத்தின் அனைத்து கருவிகளும் மிகச்சரியாக வேலை செய்து கொண்டிருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பெங்களூரில் உள்ள திட்டச் செயல்பாடுகளுக்கான வளாகத்தில் இருந்து சந்திராயன் 2 தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெற்றியை இஸ்ரோ மற்றும் இந்தியா முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
தகவல் உதவி: ANI