முக்கிய டெலிகாம் நிறுவனங்களின் கடன் ரூ.4.09 லட்சம் கோடியாக அதிகரிப்பு; பி.எஸ்.என்.எல். கடன் குறைவு!
2022-ம் நிதியாண்டில் BSNLரூ.40,400 கோடி கடனைக் கொண்டிருந்தது, ஆனால் மத்திய அரசின் நிதியுதவியினால் கடன் ரூ.28,092 கோடியாகக் குறைக்கப்பட்டது.
2024 நிதியாண்டில் நாட்டின் நான்கு பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களின் மொத்தக் கடன் ரூ.4,09,905 கோடியாக உள்ளது. அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கடன் ஆகக்குறைந்த ரூ.23,297 கோடியாக உள்ளது, என நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
மக்களவைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மார்ச் 31, 2024 நிலவரப்படி, தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் பெம்மாசானி சந்திரசேகர் பகிர்ந்துள்ள தரவுகளின்படி,
வோடபோன் ஐடியா ரூ.2.07 லட்சம் கோடி கடனைப் பதிவு செய்துள்ளது, பார்தி ஏர்டெல் ரூ.1.25 லட்சம் கோடியும், ஜியோ இன்ஃபோகாம் ரூ.52,740 கோடியும் கடனாகப் பதிவு செய்துள்ளன.
2022-ம் நிதியாண்டில் BSNL ரூ.40,400 கோடி கடனைக் கொண்டிருந்தது, ஆனால், மத்திய அரசின் நிதியுதவியினால் கடன் ரூ.28,092 கோடியாகக் குறைக்கப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் கூறும்போது,
"2019 ஆம் ஆண்டில், BSNL/MTNL-க்கு ரூ.69 ஆயிரம் கோடி அரசால் வழங்கப்பட்டது 2022ல், சுமார் ரூ.1.64 லட்சம் கோடி மதிப்பிலான தொகை வழங்கப்பட்டது. இதனால் ஊரகத் தொலைத் தொடர்பு மற்றும் கடனை மறு கட்டமைப்பு செய்தல் ஆகியவற்றை மேற்கொள்ள முடிந்தது.
"பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி/5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கு சுமார் ரூ.89,000 கோடி செலவில் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இந்த பேக்கேஜ்களின் விளைவாக, 2020-21 நிதியாண்டிலிருந்து பிஎஸ்என்எல் இயக்க லாபத்தை ஈட்டத் தொடங்கியுள்ளது,” என்றார்