ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய ஃபென்ஸர்: சாதித்த வடசென்னை பவானி தேவி!
வாள்வீச்சு போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி அசத்தல்!
வாள்வீச்சு போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். இதன்மூலம் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய ஃபென்ஸர் (வாள்வீச்சு போட்டியாளர்) என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறாரார்.
அவர் டோக்கியோ 2021ல் சேபர் பிரிவில் போட்டியிட இருக்கிறார். ஏப்ரல் 5, 2021 நிலவரப்படி உலக தரவரிசைகளை அடிப்படையாகக் கொண்ட ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்தியத்திற்கான இரண்டு தனிப்பட்ட இடங்கள் கிடைத்தன. இதில் ஒரு இடத்தை தான் தற்போது பவானி தேவி பிடித்துள்ளார்.
எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவானி தேவி ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றதற்காக மத்திய விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற இந்திய ஃபென்சர் பவானி தேவிக்கு வாழ்த்துக்கள்! இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய ஃபென்ஸர் என்ற பெருமையைப் பெற்றார்," என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
யார் இந்த பவானி தேவி?
பவானி தேவி தமிழகத்தைப் பூர்விகமாக கொண்டவர். வடசென்னை தான் இவரின் சொந்த பகுதி. தண்டையார்பேட்டை முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது தான் வாள்வீச்சு விளையாட்டில் பவானி ஆர்வம் கொண்டுள்ளார்.
6ம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் மற்ற விளையாட்டுகளை சக மாணவிகள் தேர்வு செய்துவிட, பவானி வாள்வீச்சைத் தேர்வு செய்யும் நிலை வர ஆர்வத்துடன் அதைக் கற்றுக்கொண்டு தற்போது இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார்.
2004 முதலே தேசிய அளவிலான வாள்வீச்சு போட்டிகளில் பங்கேற்று வருகிறார் பவானி தேவி. எனினும் போதிய நிதியுதவி கிடைக்காமல் பல போட்டிகளில் பங்கேற்க முடியாமல் இருந்துள்ளார். பின்னர் கேரளாவில் இது போன்ற போட்டிகளுக்கு அதிக நிதியுதவி கிடைக்கும் என்பதால் அங்குச் சென்று கல்லூரிப் படிப்பை முடித்து கேரளா சார்பாகத் தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்றிருக்கிறார்.
நிதி கிடைக்காமல் கஷ்டப்பட்டாலும் தொடர்ந்து பவானி போட்டிகளிலும் ஆர்வத்தோடு பங்கேற்றதற்குக் காரணம் அவரின் தாய் தான். கடன் வாங்கி அவரை போட்டிகளில் பங்கேற்க வைத்திருக்கிறார் அவரின் அம்மா.
2014ல் பிலிப்பின்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம், 2015ல் மங்கோலியாவில் நடைபெற்ற போட்டியில் வெண்கலப் பதக்கம், காமன்வெல்த் ஜூனியர் வாள்வீச்சுப் போட்டிகளில் பல பதக்கங்கள் என பவானி தேவி வென்ற பதக்கங்கள் ஏராளம்.
இந்த நிலையில் தான், 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற முயற்சித்து பவானி தோல்வியை சந்தித்தார். இதனையடுத்து தான் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதற்காகப் பயிற்சியாளா் நிகோலா ஜனோடியின் மேற்பாா்வையில் இத்தாலியில் பயிற்சி பெற்று வந்தவர் தற்போது அதனை சாதித்தும் காட்டியிருக்கிறார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல நாமும் அவரை வாழ்த்துவோம்!