‘என் பதவி உயர்வை அம்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன்’ - இணை மேலாளர் ஆன காய்கறி கடைக்காரர் மகள் மதுபிரியா!
தன் அம்மாவைப் பற்றி லிங்டின்னில் போட்ட ஒரே ஒரு பதிவின் மூலம் இணையத்தில் பிரபலமாகி இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த மதுபிரியா. அவர் போட்ட தன் வாழ்க்கையைப் பற்றிய பதிவு இன்று பல பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இன்ஸ்பிரேஷன் ஆகி இருக்கிறது.
போதிய கல்வியறிவு இல்லாத, அடிதட்டு தாயின் கனவு, தியாகம் மற்றும் உழைப்பு எப்படி ஒரு மகளை சமுதாயத்தில் உயர்ந்த இடத்திற்கு இன்று கொண்டு சேர்த்திருக்கிறது என தன் வாழ்க்கை மூலம் மக்களுக்கு புரிய வைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த மதுபிரியா.
அப்ளாஸ்களை அள்ளும் வகையில் லிங்டின்னில் அவர் போட்ட பதிவு, ‘ஒரு தாயின் கனவு எப்படி நிறைவேறியது, தன் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஒரு பெற்றோர் எப்படியான தியாக வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள்...’ என்பது பற்றியது.
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவரான மது, முதல்தலைமுறை பட்டதாரி ஆவார். அவரது குடும்பத்தில் முதுநிலை பட்டம் பெற்ற முதல் பெண், வளாகத் தேர்வில் தேர்வாகி எம்என்சியில் வேலை பார்க்கும் முதல் பெண், அசோசியேட் மானேஜராக பதவி உயர்வு பெற்றிருக்கும் முதல் பெண் என அவர்களது குடும்பத்தின் வருங்கால சந்ததிகளுக்கு பல ஆரம்பங்களுக்கு முதலாக இருக்கிறார் மது.
அவரது இந்த ‘முதல்’களுக்கு காரணமாக, உறுதுணையாக இருந்தவர் அவரது அம்மா தேவகி. அவரைப் பற்றி மது வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு தான் இப்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
மதுவின் தாத்தா, அப்பா என எல்லோருமே பிளெம்பிங் வேலை பார்த்தவர்கள். ஒரு கட்டத்தில் பம்பு செட்களின் தேவை குறைந்ததால், அவர்களுக்கு வேலை குறைந்தது. இதனால் வருமானத்திற்காக காய்கறி வியாபாரம் ஆரம்பித்தனர் மதுபிரியாவின் பெற்றோர் தேவகி - திருவேங்கடம்.
அவர்களது ஒரே கனவு தங்களது இரு மகள்களையும் சமூகத்தில் நல்ல இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான். அவர்களது எதிர்காலத்திற்காக பணம், நகையைச் சேர்த்து வைப்பதற்குப் பதில், நல்ல கல்வியைத் தந்தால் போதும், அவர்களே நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வார்கள் என தெளிவு அந்த ஏழைப் பெற்றோரிடம் அப்போதே இருந்தது.
தினமும் ரூ. 800 அளவு வருமானம் வரக்கூடிய காய்கறிக் கடை நடத்தி வந்த போதும், தங்களது மகள்களை அப்பகுதியிலேயே பெரிய, பணக்காரர்கள் மட்டுமே படிக்கும் குட்ஷெப்பர்ட் கான்வெண்ட்டில் சேர்க்க ஆசைப்பட்டுள்ளார் மதுபிரியாவின் அம்மா. ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.
இது குறித்து யுவர்ஸ்டோரி தமிழ்-க்கு பிரத்யேகமாக பேட்டி அளித்த மதுபிரியா தன் வாழ்க்கை அனுபவங்களை விரிவாக பகிர்ந்து கொண்டார்.
“அம்மா அவரோட சின்ன வயசுல அந்தப் பெரிய ஸ்கூல்ல படிக்கணும்னு ஆசைப்பட்டிருக்கார். ஆனா அவரோட பொருளாதாரச் சூழல் அதுக்கு தடையா இருந்திருக்கு. அதனால நாமதான் அங்க படிக்க முடியல, நம்ம பிள்ளைங்களையாவது அங்க படிக்க வைக்கணும்னு அவர் முடிவு செய்துள்ளார். ஆனால் அவ்வளவு சுலபமாக அங்கு எங்களுக்கு படிக்க இடம் கிடைக்கவில்லை. வழக்கமாக பெரிய பள்ளிகள் எதிர்பார்க்கும் பெற்றோரின் வருமானம், கல்வியறிவு போன்ற தகுதிகள் எதுவும் எங்களுக்கு இருக்கவில்லை.
பெரிய பெரிய செலிபிரிட்டிகளின் பிள்ளைகள் படிக்கும் அப்பள்ளியில் காய்கறிக் கடை வைத்திருப்பவர்களின் பிள்ளைகளுக்கு இடம் கிடைப்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. ஆனால் தனது விடாமுயற்சியினால் அதனை எங்கள் அம்மா சாத்தியமாக்கினார்.
”தொடர்ந்து எங்களுக்காக அப்பள்ளியின் கதவுகளை அவர் தட்டிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அம்மாவின் மன உறுதியைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனார் அப்பள்ளியின் பிரின்சிபல். அம்மாவின் நம்பிக்கையை மட்டுமே பெரிய தகுதியாக எடுத்துக் கொண்டு அப்பள்ளியில் எங்களுக்கு சீட் கொடுத்தார்,” என தன் தாயின் முதல் வெற்றி குறித்து நினைவு கூர்கிறார் மது.
ஆரம்பத்தில் இந்த விவகாரத்தில் மதுவின் பெற்றோர் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்துள்ளது. படிக்கும் பிள்ளை எந்தப் பள்ளியில் இருந்தாலும் ஜெயிக்கும் என்பது மது அப்பாவின் வாதம். ஆனால் மதுவின் அம்மா விட்டுக் கொடுக்கவில்லை. குட் ஷெப்பர்டு பள்ளியில் தான் தனது இரு மகள்களும் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். கடைசியில் அவரது பிடிவாதம் தான் ஜெயித்தது.
ஆனால் தான் ஆசைப்பட்ட பள்ளியில் மகள்களுக்கு இடம் கிடைத்து விட்டது, தன் ஆசை நிறைவேறி விட்டது என இத்தோடு நின்று விட முடியவில்லை அவரால். அப்பள்ளியில் பயிலும் சக மாணவர்கள் மத்தியில் தங்களது பிள்ளைகளும் பொருளாதார ஏற்றத்தாழ்வு தெரியாதவாறு காட்டிக் கொள்ள கூடுதலாக உழைக்க வேண்டி இருந்தது.
“அப்பா காலையில் 4 மணிக்கெல்லாம் எழுந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்கச் சென்று விடுவார். அம்மா 5.30 மணிக்கு கடைக்குச் சென்று அங்கு வேலையை ஆரம்பித்து விடுவார். நானும் என் அக்காவும் தான், தானாக பள்ளிக்குக் கிளம்பிச் செல்வோம். மாலையில் வீடு திரும்பும் போதும், வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். பள்ளி, வீடு என ஒரு மாதிரியான இயந்திரத்தனமான வாழ்க்கை தான் சென்றது.
பெரும்பாலும் நானும், எனது அக்காவும் தான் ஒருவருக்கொருவர் துணையாக இருந்தோம். மற்றபடி சினிமா, பீச் என பொழுதுபோக்கு எதுவுமே இல்லாமல் வெறுமையாகத்தான் அந்த நாட்கள் சென்றது. குழந்தைப் பருவ நினைவுகள் என எனக்கும் சரி, என் அம்மாவிற்கும் சரி இனிமையானதாக எதுவும் ஞாபகம் இல்லை. அந்தளவிற்கு எங்கள் கனவிற்காக அவர்கள் உழைத்துக் கொண்டிருந்தார். அவரது கனவிற்காக நாங்கள் படித்துக் கொண்டிருந்தோம்,” என்கிறார் மது.
விஐபிக்களின் குழந்தைகள் பலர் படிக்கும் பள்ளி என்பதால், பெரும்பாலும் மாணவர்கள் காரில் தான் வருவார்களாம். வேட்டி கட்டிக் கொண்டு அங்கே உள்ளே போக முடியாது. இதனாலேயே மது அப்பள்ளியில் படித்த 15 வருடங்களில் ஒருமுறைகூட, அவரது அப்பா உள்ளே சென்றதே கிடையாதாம். அவரது அம்மாவும் கூட, பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பைத் தவிர அப்பள்ளியின் ஆண்டுவிழா, கலை நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்து கொள்ள மாட்டாராம்.
ஆடம்பரமான மக்கள் வளைய வரும் இடத்தில் காய்கறி விற்பவர்களின் குழந்தைகள் என மற்றவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தாழ்வாக நினைத்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கின்றனர் அந்த ஏழைப் பெற்றோர். பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பிலும் அனைத்து பெற்றோரும் வந்து சென்ற பின்னர், கடைசியாகத்தான் வருவாராம் மதுவின் அம்மா. ஆரம்பத்தில் இவையெல்லாம் ஏனென்று மதுவிற்கு புரியவில்லை. காரணம் விபரம் அறியாத வயதில் இருந்த சக மாணவர்களுக்கு மதுவின் பொருளாதாரச் சூழல் ஒரு தடையாக இருக்கவில்லை.
மற்ற மாணவர்களோடு ஒப்பிடுகையில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள், காய்கறி கடை வைத்திருப்பவரின் மகள்கள் எனத் தெரிந்து விடக் கூடாது என மிகவும் மெனக்கெட்டிருக்கிறார் மதுவின் அம்மா. அதனாலேயே பள்ளியில் ஃபீஸ் முதற்கொண்டு தன் தகுதிக்கு மீறிய தொகையையே கொடுத்திருக்கிறார்.
ஆனால் காலம் அப்படியே சென்றுவிடவில்லை. வகுப்புகள் கூட கூட சக மாணவர்கள் மதுவை வித்தியாசமாகப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். சுமார் 8 வருடம் நெருங்கிய தோழிகளாக இருந்தவர்கள்கூட, திடீரென நட்பைத் துண்டித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் பொருளாதார ஏற்றத்தாழ்வு பற்றி வாழ்க்கை நிதர்சனம் மதுவிற்கு புரிய ஆரம்பித்துள்ளது.
“பள்ளி ஒருபோதும் மாணவர்களைப் பிரித்துப் பார்த்ததில்லை. ஆனால் மாணவர்கள் அதனைச் செய்தார்கள். வயதுகூட கூட நான் அவர்களோடு நட்பாகப் பழகக்கூட தகுதியில்லாதவள் என நினைத்தார்கள். எனது பொருளாதாரச் சூழல் அவர்களுக்கு உறுத்தலாக இருந்தது. இதனால் என்னை விட்டு விலகத் தொடங்கினார்கள். காய்கறி விற்கும் பெண்ணின் மகளோடு தங்களது பிள்ளைகள் பழகுவதை அவர்களது பெற்றோரும் விரும்பவில்லை.
ஒரு கட்டத்தில் இது மனரீதியாக என்னை மிகவும் பாதித்தது. உடல்நலம் பாதிக்கப்பட்டேன். உடைந்து போய் வீட்டுக்குள்ளேயே இருந்தேன். பல மாதங்களுக்கு பள்ளிக்குச் செல்லவில்லை. அப்போதும் என் அம்மாதான் எனக்கு ஆறுதலாகவும், உறுதுணையாகவும் இருந்தார்.
மீண்டும் நான் பள்ளிக்கு செல்லத் தொடங்கியதும், கூடவே வந்து பள்ளிக்கு விட்டுச் செல்வார், பின் மாலையில் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வார். அந்தக் காலகட்டத்தில் தான் அம்மாவின் அர்ப்பணிப்பை நான் முழுமையாக உணர்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும், என்கிறார் மது.
ஒரே சமயத்தில் இரு வேறு வாழ்க்கை முறையில் வாழ மதுவிற்கு இந்த பள்ளிக்காலம் கற்றுக் கொடுத்திருக்கிறது. ஒரு பக்கம், தங்களுக்கென தனியாக வாங்கப்பட்ட காரில் வந்திறங்கும் ஆடம்பர வாழ்க்கை வாழும் மக்கள், மற்றொரு புறம் அன்றாட சமையலுக்கு பேரம் பேசி வாங்கும் காய்கறி வாங்கும் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கை முறை என இரண்டையும் ஒரு சேர பார்த்து வளர்ந்துள்ளார் மது.
“என்னுடன் படிக்கும் மாணவர்கள் விடுமுறைக்கு வெளிநாடு சென்று வந்தேன் எனக் கூறுவார்கள். ஆனால் நானோ விடுமுறை நாட்களிலும் அம்மாவின் காய்கறிக் கடையில் சென்று அவருக்கு உதவியாக வியாபாரம் பார்ப்பேன். இதனாலேயே ஒருவேறு துருவ மக்களின் வாழ்க்கையை ஒரே சமயத்தில் என்னால் பார்க்க முடிந்தது.
இப்போதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்த சமயத்தில் என்னுடன் படிக்கும் சக மாணவியின் பண்ணை வீட்டிற்கு எங்களை சுற்றுலா அழைத்துச் சென்றிருந்தனர்.
அப்போதுதான், பணக்காரர்கள் தாங்கள் வசிப்பதற்கென்று தனி வீடும், இப்படி ஓய்வெடுக்க தனி வீடும் வைத்திருப்பார்கள் என்பதை தெரிந்து ஆச்சர்யப்பட்டுப் போனேன். உண்மையைச் சொல்வதென்றால் அந்த பண்ணை வீட்டின் செக்யூரிட்டி அறை அளவுதான் எங்களது மொத்த வீடே. ஏன் இப்படி பணத்தால் ஏற்றத்தாழ்வுகளுடன் மக்கள் வசிக்கிறார்கள் என்ற கோபம் அன்று எனக்கு ஏற்பட்டது. ஆனால் அப்படியான பணக்கார வாழ்க்கையைத் தரவில்லையே என ஒரு நாளும் என் பெற்றோர் மீது நான் கோபப்பட்டதில்லை, என்கிறார் மது.
பள்ளியில் கற்றுக் கொண்ட வாழ்க்கைப் பாடத்தால், முதுகலைப் படிப்பில் மனிதவள மேலாண்மையைத் தன் விருப்பப்பாடமாக எடுத்துப் படித்திருக்கிறார். கல்லூரியில் நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகி முருகப்பா குரூப்பில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.
கல்லூரி காலத்தில் நண்பராக இருந்த விக்னு பரத்தும் அதே நிறுவனத்தில் உடன் பணிபுரிந்துள்ளார். சில ஆண்டுகளுக்குப் பின், நட்பு காதலாக மாற இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இப்போது இந்தத் தம்பதிக்கு தியா என்ற அழகான மகள் இருக்கிறார்.
“என் பெற்றோர் செய்த தியாகத்தினால் தான் நான் தற்போது இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். ஆனால் இனிமையான குழந்தைப் பருவ நினைவுகளைத் தர மறந்து விட்டார்கள். அந்தத் தவறை நான் என் குழந்தைக்கு செய்யக்கூடாது என நினைக்கிறேன். வளர்ந்த பிறகு அவள் தன் குழந்தைப் பருவத்தை நினைத்துப் பார்த்தால் அவளுக்கு இனிமையான பல நினைவுகள் இருக்க வேண்டும். அதனை உருவாக்குவதில் தான் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறேன். அதே போல்,
எனக்கும் என் அக்காவிற்கும் நல்ல கல்வியறிவைத் தர வேண்டும் என்ற முனைப்பில் தங்களது ஓய்வு காலத்திற்கும் சரி, எங்களது திருமணத்திற்கும் சரி என் பெற்றோர் பணம் சேர்த்து வைக்க மறந்து விட்டனர். இப்போதும் ஒரு நாள் கடையை திறக்கவில்லை என்றால் அடுத்தநாளிற்கான வருமானம் இல்லை என்ற நிலையில் தான் உள்ளனர். வயதான காலத்திலும் ஓட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். அந்தத் தவறை நான் செய்யக்கூடாது என நினைக்கிறேன். எதிர்காலத்திற்கான சேமிப்பை இப்போதே ஆரம்பிக்க வேண்டும்,” என்கிறார் மது.
தன் அம்மா தேவகி பற்றி மது வெளியிட்ட பதிவு வைரலானதைத் தொடர்ந்து, அவரது காய்கறிக் கடைக்கு வருபவர்கள் அதைப் பற்றி விசாரிக்கிறார்களாம். ஒரு சிலர் தேவகியுடன் புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்களாம். இதனால் தேவகி சந்தோசம் கலந்த பெருமையுடன் இருக்கிறார். அவர் பட்ட கஷ்டங்களுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக மது நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
“அப்பள்ளியில் சேரும் போதே, இங்கு பயிலும் மாணவர்கள் தங்களது தாய்மொழியைப் பேசக் கூடாது. ஆங்கிலத்தில் தான் சரளமாகப் பேச வேண்டும் என பிரின்சிபால் தெளிவாகக் கூறி விட்டார். ஆனால் எனது அம்மாவிற்கோ ஆங்கிலம் தெரியாது. எனவே அவர் தனக்குத் தெரிந்ததை எனக்குக் கற்றுக் கொடுத்தார். நான் பள்ளியில் கற்றுக் கொண்டதை அவருடன் பகிர்ந்து கொண்டேன். இருவரும் ஒருவருக்கொருவர் கற்றுக் கொடுத்து ஆங்கிலம் கற்றுக் கொண்டோம் என்றுதான் கூற வேண்டும்.
இப்போது நான் வேறு ஒரு நிறுவனத்தில் பணி புரிகிறேன். அங்கு எனக்கு புரோமோசன் கொடுத்திருப்பதைக் கேட்டு என் பெற்றோர் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்தப் புரோமோசனை எனது அம்மாவிற்கு அர்ப்பணம் செய்து நான் வெளியிட்ட பதிவு தான் இப்போது வைரலாகி இருக்கிறது.
நான் பள்ளியில் படித்த போது, எங்கே என்னைப் பற்றிய அடையாளம் சக மாணவர்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவே பள்ளிக்கு வருவதை தவிர்த்தார் என் அம்மா. அப்போது அது எனக்குப் புரியவில்லை. என்னால் என் தோழிகளுக்கு அவரை அறிமுகம் செய்து வைக்க முடியவில்லை. இப்போது அதனை உரக்கச் சொல்ல வேண்டும் என்பதற்காகத் தான் அந்தப் பதிவை வெளியிட்டேன்.
ஒரு காய்கறி விற்பவரின் மகள் என்பதை பெருமையுடன் இன்று சொல்கிறேன். இன்று நான் கை நிறைய சம்பளம் வாங்கும் போதும், அவர்கள் என்னிடம் பண உதவி எதையும் பெற விரும்புவதில்லை. நாங்கள் சந்தோசமாக வாழ்வதைப் பார்ப்பதையே பெரிய கொடுப்பினையாக அவர்கள் நினைக்கிறார்கள்,” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் மது.
கடந்த காலத்தில் இழந்த மகிழ்ச்சியான தருணங்களை இப்போது மீண்டும் மீட்டெடுக்கும் முனைப்பில் இருக்கிறார் மது. இதுவரை பிறந்தநாளே கொண்டாடியிராத தன் பெற்றோருக்கு சமீபத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட வைத்து சர்ப்பிரைஸ் கொடுத்திருக்கிறார். தான் கார் வாங்கியதையும் மற்றொரு இன்ப அதிர்ச்சியாக பெற்றோருக்கு தெரிய வைத்திருக்கிறார். விரைவில் தனது பெற்றோரை தனது சொந்தச் செலவில் விமானத்தில் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாம்.
“அந்தக் குறிப்பிட்ட பள்ளியில் படித்ததால் தான் இந்தளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்தேன் என்று சொல்ல முடியாது. ஆனால் அந்தப் பள்ளி தான் மற்றொரு தரப்பு பணக்கார வர்க்கத்தின் வாழ்க்கையை எனக்கு எடுத்துக் காட்டியது. எங்கள் குடும்பத்தின் முதல் கார்ப்பரேட் ஊழியர் நான் தான். என்னை இந்த நிலைக்கு உயர்த்திய என் பெற்றோருக்கு நான் செய்யும் பெரிய கைமாறு, தொடர்ந்து வேலை பார்ப்பதும், அதில் பல புரொமோசன்களைப் பெறுவதும் தான்.”
குழந்தைகளுக்கு முதல் ஐந்து ஆண்டுகளில் தரப்படும் கல்வி தான் அவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும். எனவே அதில் அலட்சியமாக இருக்கக் கூடாது. நாம் கற்கும் படிப்பு எதிர்காலத்தில் நல்ல சம்பாத்தியத்தை தருவதாக மட்டுமல்ல, நமக்கு எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையையும் தருவதாக இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட தன்னம்பிக்கையை பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி, காய்கறிக் கடை நடத்தி எனக்குக் கொடுத்திருக்கிறார்கள் என் அம்மாவும், அப்பாவும். நிச்சயம் அவர்கள் பெருமைப்படும் வண்ணம் மேலும் பல செயல்களைச் செய்வேன், என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் மது.