ரூ.110 கோடி நிதி முதலீடு திரட்டிய சென்னை இறைச்சி நிறுவனம் TenderCuts
நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு இந்த நிதி உதவும் என்று டெண்டர்கட்ஸ் (TenderCuts) நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இறைச்சி மற்றும் கடல் உணவு பிராண்டான டெண்டர்கட்ஸ் ரூ.110 கோடி மதிப்பிலான நிதி திரட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. தனியார் ஈக்விட்டி நிதியான பாரகன் பார்ட்னர்ஸ் (Paragon Partners) தலைமையிலான இந்த சுற்றில், நபார்டு ஆதரவு பெற்ற வேளாண் உணவு விசி நிதியான NABVENTURES நிறுவனமும் பங்கேற்றுள்ளது.
நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு இந்த நிதி உதவும் என்று டெண்டர்கட்ஸ் (TenderCuts) நிறுவனம் தெரிவித்துள்ளது. சப்ளை செயினை மேம்படுத்துவது மற்றும் புதுமையாக்கத்திற்கு உதவும் வகையில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்திக்கொள்ளவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
நிஷாந்த் சந்திரனால் 2016ல் துவங்கப்பட்ட இந்நிறுவனம், இந்தியாவில் இறைச்சி மற்றும் கடல் உணவு விற்பனையில் புதுமையை புகுத்தியுள்ளது. வெளிநாட்டினர் போல் அல்லாமல் இந்திய வாடிக்கையாளர்கள் உறைய வைக்கப்பட்ட உணவை விரும்புவதில்லை. மேலும் வாடிக்கையாளர்கள், இறைச்சி உணவை வெட்டும் விதத்திலும் தனித்துவமான விருப்பங்களை கொண்டுள்ளனர்.
டெண்டர்கட்ஸ், தனது விற்பனை நிலையங்கள் மூலம் பிரஷ்ஷாக வெட்டப்பட்ட இறைச்சி மற்றும் கடல் உணவை அளிக்கிறது. ஆன்லைனிலும் வாங்கும் வசதி இருக்கிறது. ஒருங்கிணைந்த சப்ளை செயின் வசதி இதற்கு உதவுகிறது.
மிகவும் சுகாதாரமான மற்றும் சுவையான இறைச்சியை வழங்குவதில் நிறுவனம் கவனம் செலுத்தி வருவதோடு, பிரெஷ் இறைச்சியை அளிக்கும் பிராண்டட் நிறுவனமாக இருக்கிறது. இறைச்சி வெட்டப்பட்ட இரண்டு மணி நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்தியாவின் இறைச்சி மற்றும் கடல் உணவு சந்தை 100 பில்லியன் டால மதிப்பு கொண்டதாக கருதப்பட்டாலும், 95சதவீத சந்தை ஒருங்கிணைக்கப்படாத நிறுவனங்களிடமே இருக்கிறது. ஒருங்கிணைந்த துறை நிறுவனங்கள் தற்போது வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது.
சென்னை, மற்றும் ஐதராபாத்தில் நிறுவனம் 25 விற்பனை நிலையங்களைப் பெற்றுள்ளது. சிக்கன், மட்டன், ஊறுகாய்கள், முட்டை ஆகியவற்றை நிறுவனம் வழங்குகிறது. மேலும், உடனடி உணவு மற்றும் உடனடி சமையலுக்கான ரகங்களையும் கொண்டுள்ளது.
"நிறுவனம் செயல்படும் நகரங்களில் டெண்டர்கட்ஸ் சந்தையில் முன்னணியில் இருப்பதும், இந்த நகரங்களில் இறைச்சி விற்கப்படும் முறையில் மாற்றத்தை கொண்டு வந்திருப்பதும் மகிழ்ச்சி அளிப்பதாக,” டெண்டர்கட்ஸ் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ நிஷாந்த் சந்திரன் கூறியுள்ளார்.
இந்த முதலீடு புதிய சந்தைகளில் விரிவாக்கம் செய்ய மற்றும் வலைப்பின்னலை வலுவாக்க உதவும், என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் இறைச்சி விற்கப்படும் விதத்தை மாற்றி அமைக்கும் நிஷாந்தின் முயற்சியில் கைகோர்ப்பதில் உற்சாகம் கொள்கிறோம். விவசாயிகள் மற்றும் மீனவர்கள் கொண்ட சப்ளை செயின் பலத்தை நிறுவனம் சிறப்பாகப் பயன்படுத்துக்கொள்ளும் என நம்புகிறோம், என்று பாரகன் பாட்னர்ஸ் இணை நிறுவனர் சித்தார்த் பரேக் கூறியுள்ளார்.
“இந்தியாவில் வேளாண் துறையில் செயல்பட்டு வரும் ஸ்டார்ட் அப்களுக்கு ஊக்கம் அளிக்கும் எங்கள் கொள்கைக்குச் சான்றாக இந்த முதலீடு அமைகிறது. டெண்டர்கட்ஸ் நிறுவனத்தின் ஆம்னிசேனல் முறை ஆன்லைன் அல்லது விற்பனை நிலைய மாதிரிகளை விட வெற்றிகரமானது என நம்புகிறோம்,” என NABVENTURES தலைவர் ஜி.ஆர்.சிந்தாலா கூறியுள்ளார்.