Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

கொட்டும் மழையில் உயிரை பணயம் வைத்து மீட்புப் பணிகள்: 'நிஜ தீரன்' சென்னை போலீஸ்!

நேற்று முதல் வீசும் பெரும் காற்றால் சென்னையில் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து போக்குவரத்தை முடக்கின. இதனை அறிந்த சென்னை காவல்துறையினர் கொட்டும் மழையிலும் மரங்களை அகற்றி மக்களை வெளியேற்றி வருகின்றனர்.

கொட்டும் மழையில் உயிரை பணயம் வைத்து மீட்புப் பணிகள்: 'நிஜ தீரன்' சென்னை போலீஸ்!

Wednesday November 25, 2020 , 2 min Read

நிவர் புயல் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் மற்றப் பகுதிகளைக் காட்டிலும் சென்னையில் மழை கொட்டி வருகிறது. போதாக்குறைக்கு செம்பரம்பாக்கம் ஏரி வேறு முழு கொள்ளளவை எட்டியதால் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் கூடுதல் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.


கடந்த முறை ஏற்பட்ட சென்னை பெருவெள்ளத்துக்கு காரணம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் சென்னையின் பல பகுதிகளில் குறிப்பாக அடையாறு, சைதாப்பேட்டை பகுதிகளில் ஊடுருவியது. அப்படி எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


இதற்கிடையே, கடந்த முறை போலவே இந்தமுறையும் இதே அடையாறு பகுதிகளில் புயலில் பாதிக்கப்பட்டு உள்ளன. கடும் மழையால் அடையாற்றின் பல பகுதிகளில் நீரில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. செம்பரம்பாக்கம் ஏரி வேறு திறக்கப்பட்டுள்ளதால் அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். ஆனால் இவர்கள் இடம்பெயர்வதில் சிக்கல் எழுந்தது.

சென்னை போலீஸ்

அதாவது நேற்று முதல் வீசும் பெரும் காற்றால் அடையாறு பகுதிகளில் இருந்து மரங்கள் முறிந்து போக்குவரத்தை முடக்கின. இதனால் மக்கள் வெளியேறுவதில் சிரமம் இருந்தன. இதனை அறிந்த அடையாறு காவல்துறையினர் கொட்டும் மழையிலும் அகற்றி மக்களை வெளியேற்றி வருகின்றனர்.


கடந்த முறைப் போலவே இந்த முறையும் அடையாறு பகுதி மக்களுக்குத்தான் அதிக பாதிப்புகள் நிகழ்ந்து வருகிறது என்பதால் முன்கூட்டியே காவல்துறையினருக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது பம்பரம் போல் சுழன்று மக்கள் பணி ஆற்றிக்கொண்டிருக்கின்றனர். அடையாறு டிசிபி விக்ரமன் தனது ட்விட்டர் பக்கத்தில், காவல்துறையினரின் மீட்புப்பணியை பதிவிட்டு வெகுவாக பாரட்டி வருகிறார்.


அடையாறு காவல்துறை மட்டுமல்ல, கிண்டி காவல்துறையினர் ஈக்காட்டுத்தாங்கல் ஒலிம்பியா எதிரே உள்ள ஜவகர்லால் நேரு சாலையில் அதிக அளவு மழை நீர் தேங்கியுள்ளதை கண்டு அதை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களுடன் சேர்ந்து உடனடியாக அகற்றி வருகின்றனர். கிண்டி AC சுப்புராயன், ஆய்வாளர் சந்துரு ஆகியோர் இதற்காக குழு அமைத்து உடனடி மீட்புப் பணிகளை செய்து வருகின்றனர்.


இதேபோல் சாஸ்திரி நகர் முதல் அவென்யூ சாலையில் பெரும் காற்றால் மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தன. இதனை சாஸ்திரி நகர் ஆய்வாளர் பலவேஷம் தலைமையிலான காவலர்கள் SAG குழு மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து சில மணி நேரங்களில் அப்புறப்படுத்தினர்.


மேலும் திருவான்மியூர் பிள்ளையார் கோவில் தெரு சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தது குறித்த தகவல் கிடைத்த உடன் காவல் ஆய்வாளர் ராசுந்தரம் தலைமையிலான சிறப்பு நடவடிக்கைக் குழு உடனடியாக செயல்பட்டு முறிந்த மரங்களை விரைவாக அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர். சாந்தோம், திருவான்மியூர் போன்ற இடங்களிலும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் காவல்துறையினர்.


சென்னை மட்டுமல்ல, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் கொட்டும் மழை, புயலில் தங்கள் உயிர், உடமைகளை பொருட்படுத்தாமல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் தமிழக காவல்துறையினர். இதனால் அவர்களுக்கு மக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


தமிழக காவல்துறைக்கு நமது சார்பிலும் ஒரு பெரிய சல்யூட்!


படங்கள் உதவி : புதிய தலைமுறை