ரூ.21 ஆயிரம் முதலீடு; இன்று மொபைல் கவர் சாம்ராஜ்யம் உருவாக்கிய சென்னை இளைஞர்!
முதலில் ஒரு முகநூல் பக்கமாக துவங்கிய இந்த நிறுவனம், இன்று 1லட்சம் மொபைல் கேஸ்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றது.
ரொனாக் சாரதா முதன் முதலாக தொலைபேசி கவர்களை சைனாவில் இருந்து வாங்கிய பொழுது, பின்னாளில் அது பெரும் தொழிலாக மாறும் என அவர் அறியவில்லை.
"எனது 21வது பிறந்தநாளில் எனது தந்தை எனக்கு 21,000 ரூபாய் தந்தார். அதனை முழுவதையும் வைத்து சைனாவில் இருந்து போன் கவர்கள் வாங்கலாம் என முடிவுசெய்தேன். அதன் பின்னர் ஒரு முகநூல் பக்கம் துவங்கி அவற்றை விற்கத் துவங்கினேன். என்ன ஆச்சர்யம் என்றால் மிகவும் சீக்கிரம் அனைத்து கவர்களும் விற்றுத் தீர்ந்தன."
இது நடந்தது 2013 - 2014 வருடங்களில். ஸ்மார்ட் போன் சந்தை இந்தியாவில் மெதுவாக வளர்ந்து வந்தது. வலைதள விற்பனையில் பாப் கலாச்சாரத்திற்கு ஏற்ப பல பொருட்கள் விற்பனைக்குத் தயாராகின.
இந்நேரத்தில் அனைவரையும் கவரும் வண்ணம் பொருட்கள் உருவாவது ஆரம்பக் கட்டத்தில் இருந்தது. அதிலும் தொலைபேசிக்கு தேவையான மற்ற பொருட்களின் சந்தை எவ்வித புதுமைகளும் இல்லாது இருந்தது.
"தாங்கள் விரும்பியதை எடுத்துச்செல்ல விரும்பும் மக்கள் கொண்ட இந்திய சந்தையில் அதிக வாய்ப்புகள் இருப்பதை அப்போது நான் அறிந்தேன். அதற்கு ஏற்றவாறு சாதாரண பொருட்கள் மட்டுமே சந்தையில் கிடைத்தன. இதுதான் என்னை வியாபாரத்தில் இழுத்தது," என்கிறார் அவர்.
விரைவில் முகநூல் பக்கம் தந்த வெற்றி ஒரு வியாபார வலைத்தளமாக மாற்ற உந்தியது. அந்த தளம் கைபேசி தொடர்பான பொருட்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டது.
தற்போது ‘கவர் இட் அப்’ இல் இருபாலருக்குமான டீ ஷர்ட்ஸ், தொப்பி, ஹூடிக்கல், ஏர் பாடுகளுக்கு கேஸ், மக்குகள், போஸ்டர்கள், நோட்டுப்புத்தகங்கள் என பல கிடைக்கின்றன.
வடிவமைப்பே வணிகத்தின் அடித்தளம் :
"முதலில் இந்தத் தொழிலை துவங்கியவுடன் 20-30 நபர்கள் இந்த அச்சிடப்படும் அலைபேசி கவர்கள் பற்றி என்னிடம் கேட்டனர். வெகுவிரைவாக இது 100-150 என மாறியது. இன்று 1000த்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு தினமும் நாங்கள் சேவை செய்கிறோம் என்கிறார் 27 வயதான இந்த தொழில்முனைவர்.
அலைபேசி தொடர்பான பொருட்கள் வேண்டும் என்றால் அதற்கு ‘கவர் இட் அப்’ ‘Cover It Up' சிறந்த இடம் என இன்று நிறுவியுள்ளார் ரொனக். அதற்குக் காரணம் அலைபேசி கேஸுகள் மற்றும் கவர்களில் அவரது தனித்தன்மையே.
"எங்கள் தனித்தன்மையை எங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தினோம்," என சமூக வலைத்தளங்களில் அரை மில்லியன் விசுவாசிகள் பெற்றதை பற்றி குறிப்பிடுகிறார்.
"அந்த அளவுக்கு பலர் எங்கள் முகநூல் பக்கத்திற்கு வந்ததற்குக் காரணம் நாங்கள் டீ ஷர்டுகள் விற்கவில்லை. முதலில் பாப் கலாச்சாரம் தொடர்புடைய அலைபேசி கவர்கள் தான் விற்பனை செய்தோம். தங்கள் அலைபேசிகளில் தங்களுக்கு பிடித்த வண்ணம் கவர்கள் வைக்க வேண்டும் என்று விரும்பிய மக்களை நாங்கள் ஈர்த்தோம்," என்கிறார் அவர்.
2014ல் 250-300 கேஸ்கள் வரை உற்பத்தி செய்து விற்பனை செய்துவந்த இந்நிறுவனம், 2017-2018ல் 30,000 கேஸ்கள் வரை தங்கள் உற்பத்தித் திறனை வளர்த்துக் கொண்டனர். 2019-2020 வருடத்தில் 100,000 பொருட்கள் என்ற எண்ணிக்கையை எட்டும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர்.
"2019ல் இருந்து பல புதிய ஒப்பந்தங்கள், புதிய அணி ஆகியவை அமைந்த பின்பு, எங்கள் வளர்ச்சியும் 4 மடங்கு அதிகரித்துள்ளது," என்கிறார் அவர்.
சந்தையில் பல பெரும் நிறுவனங்களோடு அவர்களின் பொருட்களை விற்பனை செய்ய கவர் இட் அப் ஒப்பந்தங்கள் செய்துள்ளது.
மார்வெல், ஸ்டார்வார்ஸ், டிஸ்னி, லூனி டூன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நயிட் ரைடர்ஸ், காலா, தர்பார், ரோபாட் 2.0, ஹாரி பாட்டர் என அந்த பட்டியல் நீளுகிறது.
"இந்த வணிகத்தில் நாங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் உண்டு. அது எப்பொழுதும் அந்த பிராண்டிடம் இருந்து எங்களுக்கு வரும்," என்கிறார் நிறுவனர். முதலில் திட்டமிட்டு வடிவமைத்து, அதில் சில பொருட்களை தயாரித்து பிராண்டின் அனுமதிக்காக அனுப்பி வைப்போம். அவர்கள் அனுமதி தந்தவுடன் எங்கள் சமூக வலைதள பக்கங்கள் மற்றும் வலைத்தளத்திற்கு அவை அனுப்பப்படும். எங்களை பொறுத்தவரை புதிய புதிய யோசனைகளுக்கு என்றுமே தடை இல்லை.
அதற்கான அணி, சந்தையில் உள்ள பொருட்களுக்கும் சேர்த்து புதுமைகள் புகுத்த வழிகள் சிந்தித்த வண்ணம் இருக்கும். இதனை போன்ற மற்ற நிறுவனங்களில் இருந்து இவர்கள் தனித்து நிற்க பொருட்களில் இவர்கள் புகுத்தும் புதுமை மிகவும் முக்கியமான காரணம் ஆகும்.
எழுதியவர் : சுத்ரிஷ்னா கோஷ் | தமிழில் : கெளதம் தவமணி