20 லட்ச ரூபாய் நிதி திரட்டியுள்ள சென்னை மார்க்கெட்டிங் ஸ்டார்ட் அப் ‘PickMyAd’
PickMyAd ஸ்டார்ட் அப் அதன் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வேல்டெக் டிபிஐ இன்குபேட்டர் குழுவின் ஒருங்கிணைப்புடன் `ஸ்டார்ட் அப் இந்தியா சீட் ஃபண்ட் திட்டம்’ (SISFS) மூலம் 20 லட்ச ரூபாய் ப்ரீ-சீட் நிதி திரட்டியுள்ளது.
உங்கள் பிராண்டை விளம்பரப்படுத்த விரும்புகிறீர்களா? சமூக வலைதளங்களில் செல்வாக்குள்ளவர்கள் மூலமாக மக்களை சென்றடையலாம் என்று தோன்றுகிறதா? ஆனால் இவர்கள் மூலம் எப்படி விளம்பரப்படுத்துவது என்று தெரியவில்லையா?
இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதில் “ஆம்” எனில் உங்களுக்கு உதவுவதற்குத் தயாராக இருக்கிறது PickMyAd நிறுவனம்.
சென்னையைச் சேர்ந்த PickMyAd சமூக வலைதளங்களில் செல்வாக்குள்ளவர்கள் மூலம் விளம்பரப்படுத்த உதவும் மார்க்கெட்டிங் ஸ்டார்ட் அப். இந்நிறுவனம், அதன் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ’ஸ்டார்ட் அப் இந்தியா சீட் ஃபண்ட் திட்டம்’ (SISFS) மூலம் 20 லட்ச ரூபாய் ப்ரீ-சீட் நிதி திரட்டியுள்ளது. வேல்டெக் டிபிஐ இன்குபேட்டர் குழுவின் ஒருங்கிணைப்பில் இந்த நிதி திரட்டப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் செல்வாக்குள்ளவர்கள் மூலம் பிராண்டுகள் மார்க்கெட்டிங் செய்ய உதவும் தளம் ஒன்றை உருவாக்கவேண்டும். பிராண்டுகள் இந்தத் தளத்தில் இணைந்து ஒரே ஒரு தட்டு தட்டினால் போதும், சமூக வலைதளங்களில் செல்வாக்குள்ள மில்லியன் கணக்கானோரை பிராண்டுகள் அணுகமுடியும். அப்படிப்பட்ட தளமாக உருவாகவேண்டும் என்பதே PickMyAd நோக்கம்.
தற்போது திரட்டப்பட்டுள்ள நிதி இந்த நோக்கத்தை எட்ட உதவும் என்று இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வேல்டெக் டிபிஐ குழு இந்த செயல்முறையில் பெரும் பங்களித்து ஆதரவளிக்கிறது. டாக்டர் சந்திர குமார் பி மற்றும் டாக்டர் ராஜாராம் வெங்கட்ராமன், சிஇஓ, வெல்டெக் டிபிஐ ஆகியோருடன் சுரேஷ், இன்குபேஷன் மேலாளர், வேல்டெக் டிபிஐ மற்றும் மனோஜ் குமார், SISFS நிர்வாகி ஆதரவளிக்கின்றனர்.
பிரபு தாஸ், சிவக்குமார், அருள் ஜோதி, அருண் பியோஸ் ஆகிய நால்வரும் PickMyAd நிறுவனர்கள்.
“சிறந்த தொடக்கமே பாதி வெற்றிக்கு சமம்’ என்பதுபோல் இறைவனின் ஆசியுடன் மிகச்சிறந்த முறையில் எங்கள் முன்னெடுப்பைத் தொடங்குகிறோம். எங்களைப் போன்ற ஸ்டார்ட் அப்களின் இலக்குகள் எட்டப்பட உதவும் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்திற்கு மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்கிறார் PickMyAd சிஇஓ பிரபு தாஸ்.
அவர் மேலும் கூறும்போது,
”PickMyAd நிறுவனத்தின் நோக்கத்தில் நம்பிக்கை வைத்த குழுவினருக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். கடின உழைப்பை மூலதனமாகக் கொண்டே PickMyAd நிறுவனம் இன்றைய நிலையை எட்டிள்ளது. ஆனால், கடினமான பாதையை எளிதாக இருப்பது போல் காட்டிக்கொண்டு எங்கள் குழுவினர் புன்னகையுடன் மிகப்பெரிய பொறுப்புகளைத் தோளில் சுமந்துள்ளனர்,” என்றார்.
தேர்வு செய்யப்பட்ட பாதை
கொரோனா பெருந்தொற்று நம் வாழ்க்கையையின் அங்கமாகவே மாறிய பிறகு புதிய வாழ்க்கைமுறைக்கு நாம் நம்மை பழக்கிக்கொண்டுள்ளோம். பிராண்டுகளை நம்மிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்கமுடியாது. இவற்றை சந்தைப்படுத்துவதும் உத்திகள் இன்றைய தலைமுறையினரை நோக்கியே உள்ளது.
அதேபோல், சமூக வலைதளங்களில் செல்வாக்குள்ளவர்கள் வெறும் பிரபலங்கள் அல்ல, கருத்துகளை மக்கள் மனதில் எளிதாகக் கொண்டு சேர்க்கக்கூடிய வல்லமை படைத்த தலைவர்களாகவே திகழ்கின்றனர்.
பிராண்டுகளுக்கும் செல்வாக்குள்ளவர்களுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நிரப்புவதே இவர்களின் நோக்கம். பிராண்டுகள் எளிதாக அணுகும் வகையில், முதன் முதலாக தொழில்நுட்பத்தின் உதவியுடன் செல்வாக்குள்ளவர்கள் அடங்கிய நெட்வொர்க்கை உருவாக்கத் தீர்மானித்தனர்.
“2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் PickMyAd உருவாக்கும் பணி தொடங்கியது. செல்வாக்குள்ளவர்களை ஏஜென்சி ஒன்றின் மூலம் நாங்கள் தொடர்புகொள்ள முயற்சி செய்தபோது கட்டணம் தொடர்பாக பெரிய பிரச்சனைகளை சந்தித்தோம். இன்ஃப்ளுயன்சர்களை நேரடியாகத் தொடர்புகொள்வது சாத்தியமில்லாமல் இருந்தது. இத்தகைய சூழல் பிராண்டுகள், செல்வாக்குள்ளவர்கள் இருவருக்குமே பலனளிக்காது என்பதைத் தெரிந்துகொண்டு தொழில்நுட்பத்தின் உதவியுடன் சேவையளிக்கும் இந்த முயற்சியைத் தொடங்கினோம்,” என்கிறார் PickMyAd சிஓஓ மற்றும் இணை நிறுவனர் சிவக்குமார்.
PickMyAd வழங்கும் பிராடக்டின் அம்சங்களை விரிவுபடுத்தவும் குழுவை வலுப்படுத்தவும் இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு விரிவடையவும் ப்ரீ-சீட் நிதி பயன்படுத்தப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொழி, இடம் போன்ற அம்சங்கள் எதுவும் தடையாக இல்லாதபடி பிராண்டுகளையும் செல்வாக்குள்ளவர்களையும் இணைக்கவேண்டும் என்கிற முக்கிய நோக்கத்தை முன்னிறுத்தியே செயல்பட்டு வருவதாக நிறுவனர்கள் வலியுறுத்துகின்றனர். எனவே அடுத்தகட்டமாக பயனர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு மொழிகளை இணைத்துக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.
தொழில்நுட்பத்தின் உதவி
”ஒவ்வொரு தொழிலுக்கும் வளர்ச்சி என்பது அவசியம். எனவே தொழில்நுட்பத்தின் உதவியுடன் எல்லைகள் கடந்து பிராண்டுகள் சென்றடையவும் செல்வாக்குள்ளவர்கள் கூடுதல் வருவாய் ஈட்டவும் உதவ விரும்புகிறோம்,” என்கிறார் PickyMyAd சிஎம்ஓ மற்றும் இணை நிறுவனர் அருண் பியோஸ்.
தொழில்நுட்பப் பயன்பாட்டைப் பொருத்தவரை, பொருத்தமானவற்றைத் தேர்வு செய்ய செயற்கை நுண்ணறிவு சார்ந்த டூல், எஸ்கிரோ பேமெண்ட் என மனிதத் தவறுகளைக் குறைப்பதில் குழுவினர் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
“ஒரு யோசனையைக் கொண்டு தொடங்குவது கடினமல்ல. அதை முறையாகக் கற்பனை செய்து பார்த்து, திறம்பட பயனபடுத்த ஊக்குவிப்பதே கடினம். எங்கள் குழுவினர் எங்கள் நோக்கத்தில் நம்பிக்கை வைத்தனர்,” என்கிறார் சிடிஓ மற்றும் இணை நிறுவனர் அருள் ஜோதி.