திருநங்கைகளுக்கு வாழ்வு அளிக்கும் ‘கரிமா கிரே' இல்லம்: தமிழகத்தில் முதன்முறை!
மத்திய அரசு திட்டத்தால் உதவி!
திருநங்கைகள் சமூக ரீதியாக நிறைய பாகுபாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர். அதேபோல் திருநங்கைகள் என்றால் பெரிய நகரங்கள் முதல் சிறிய ஊர்கள் வரை வீடு வாடகைக்குக் கொடுப்பது உள்ளிட்ட விஷயங்களில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
பெரும்பாலும், அவர்கள் உணவு, தங்குமிடம் மற்றும் வேலை போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக போராடும் நிகழ்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்கள் சந்திக்கும் இந்த வேதனையை போக்கும் வகையில் சென்னையின் கொளத்தூரில் திருநங்கைகளுக்கென பிரத்யேக தங்குமிடம் ’கரிமா கிரே' என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.
திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் கீழ், தமிழ்நாட்டில் முதல்முறையாக இந்த இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி அமைச்சகம் இவர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்துள்ளது. இங்கு ஏற்கனவே எட்டு திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் வாழ்ந்து வருகின்றனர். திருநங்கைகள் உரிமைகள் சங்கத்தின் நிறுவனரும் இயக்குநருமான ஜீவா இந்த இல்லம் தொடர்பாக பேசுகையில்,
“இது திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்காக ஏற்படுத்தப்பட்டது. அவர்களில் பலர் தங்கள் குடும்பத்தையும் வீட்டையும் விட்டு வெளியேறி வந்தபின் தங்கள் வாழ்க்கையைத் தொடங்க ஒரு நல்ல தளத்தை பெறுவதில்லை. எனவே, அவர்கள் பெரும்பாலும் பிச்சை அல்லது பாலியல் வேலையில் தள்ளப்படுகிறார்கள். இந்த சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவே இந்த திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கரிமா கிரே இல்லம் அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் தவிர,வாழ்வாதாரத்தை வழங்கவும் முயல்கிறது.”
அவர்கள் படித்தவர்களாக இருந்தால், அவர்களுக்கான வேலைகளை ஏற்பாடு செய்ய முயற்சிக்கிறோம். இல்லையெனில், எங்களிடம் பல பயிற்சி வகுப்புகள் உள்ளன. தையல், அழகு பாடநெறி, சணல் பைகள் தயாரித்தல், நகைகள் தயாரித்தல், சோப்பு தயாரித்தல், மெழுகுவர்த்தி தயாரித்தல் மற்றும் கணினிகள் போன்ற பயிற்சிகளை முடித்தபின் இதைப் பயன்படுத்தி ஒரு வேலையை பெற முயசிக்கிறோம்.
இந்த இல்லத்தில் யோகா அமர்வுகள், ஆலோசனை மற்றும் பயிற்சிக்காக 25 பேருக்கு தனி அறைகளுடன் இப்போது தங்குவதற்கான திறன் எங்களுக்கு உள்ளது. எதிர்காலத்தில் அதிகமான நபர்களை தங்க வைக்க விரிவாக்க எங்களுக்கு இடம் உள்ளது.
மேலும், அரசாங்கச் சலுகைகளைப் பெற உதவும் வகையில் திருநங்கைகள் நல வாரியம், தமிழக அரசிடம் பதிவு செய்யவும் எங்கள் இல்லம் அவர்களுக்கு உதவுகிறது, என்று தெரிவித்துள்ளார். திருநங்கைகள் தங்கள் வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கும் வகையில் இந்த இல்லம் உதவிபுரிந்து வருகிறது!
கட்டுரை: Think Change India | தமிழில்: மலையரசு