‘திருநங்கைகளுக்கு பேருந்து சலுகை' - டிவிட்டர் கோரிக்கைக்கு உடனடியாக பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசு அறிவித்துள்ள, பெண்களுக்கான பேருந்து பயணச்சலுகையை திருநங்கைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் எனும் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் உடனடியாக பதில் அளித்துள்ளார்.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றுள்ள முக ஸ்டாலின் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். பதிவேற்ற முதல் நாளிலேயே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் முக்கிய உத்தரவுகளிலும் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.
கொரோனா நிவாரணமாக குடும்பத்துக்கு ரூ.4000, ஆவின் பால்விலை லிட்டருக்கு ரூ.3 விலைக்குறைப்பு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே, காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும், அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளுக்கான கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இந்த உத்தரவுகள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக பெண்களுக்கு பேருந்து சலுகை திட்டம் பரவலாக வரவேற்கப்படுகிறது. இந்த அறிவிப்பு சமூகத்தில் முக்கிய தாக்கத்தை நிகழ்த்தும் என்றும் கருதப்படுகிறது.
எதிர்பார்ப்பு
இந்த அறிவிப்பு தொடர்பாக பலவிதமான எதிர்பார்ப்புகளும் உண்டாகியுள்ள நிலையில், திருநங்கைகளுக்கும் இந்தத் திட்டம் விரிவாக்கப்பட வேண்டும் எனும் கருத்தும் எழுந்துள்ளது. இது தொடர்பாக பத்திரிகையாளரும், யுவர்ஸ்டோரி தமிழ் செய்தி ஆசிரியருமான இந்துஜா ரகுனாதன் தனது டிவிட்டரில்,
“பெண்களுடன், திருநங்கைகளுக்கும் இலவச பஸ் பயண திட்டத்தை அறிவித்தால் நன்றாக இருக்கும்,” என்றும், திருநங்கைகள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை போக்க இது உதவும் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
ட்வீட் செய்த சில நிமிடங்களில் மக்களின் ஆதரவைப் பெற்ற அந்த ட்வீட்டை பல்லாயிரக்கணக்கானோர் மறுபதிவு செய்து, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை இதற்கான அறிவிப்பை வெளியிட கேட்டுக்கொண்டனர்.
உடனடி பதில்
தமிழக முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரிலும் வேகமாக செயல்பட்டு வருபவர். முதல்வராக பதவியேற்ற நிலையில், அவரது டிவிட்டர் பக்க அறிமுகக் குறிப்பிலும் அண்மையில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், டிவிட்டரில் வெளியான இந்த கோரிக்கையும் முதல்வர் கவனத்தை ஈர்தத்துடன், இதற்கு அவர் உடனடியாக பதிலும் அளித்துள்ளார்.
”மகளிருக்கான சலுகை போலவே, திருநங்கைகளுக்கான சலுகை தொடர்பான கோரிக்கையும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்,” என அவர் அதில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிலில்,
’மகளிர் நலன் - உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம். தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி. பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்,” எனக் கூறியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், முதல் முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினின் செயல்பாடுகள் அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளன.
இந்நிலையில், மக்கள் கோரிக்கைக்கு செவி சாயத்து உடனடியாக பதில் அளுக்கும் அணுகுமுறையும் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.