வீட்டு முதியவர்களுக்கு முறையான மருத்துவப் பராமரிப்பு அளிக்க நேரம் இல்லையா? இதோ உதவிடும் சென்னை நிறுவனம்!
கார்த்திக் ராமகிருஷ்ணன் நிறுவிய ’அதுல்யா அசிஸ்டட் லிவிங்’ சென்னையைச் சேர்ந்த முதியோர் பராமரிப்பு ஸ்டார்ட் அப் ஆகும். 50 படுக்கை வசதியுடன் செயல்படும் இந்நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 5,000 படுக்கை வசதியுடன் வளர்ச்சியடைய திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள இளம் பருவத்தினரின் தேவைகளுக்கேற்ற தயாரிப்புகளும் சேவைகளும் காணப்படும் நிலையில் சென்னையைச் சேர்ந்த ’அதுல்யா அசிஸ்டட் லிவிங்’ என்கிற ஸ்டார்ட் அப் முதியோர்களுக்கு சேவையளிக்கிறது.
இந்தியாவில் உள்ள 1.3 பில்லியன் மக்களில் பாதி பேர் 25 வயதிற்கும் குறைவானவர்கள் என்பதால் இந்தியா ஒரு இளம் நாடாகவே கருதப்படுகிறது. ஆனால் அரசாங்கத் திட்ட ஏற்பாடுகளும் சமீபத்திய பொருளாதார ஆய்வுகளும் இதை மாற்றக்கூடியதாக உள்ளது.
2050-ம் ஆண்டில் நாட்டில் அறுபது வயதிற்கும் மேற்பட்டோரின் எண்ணிக்கை 340 மில்லியனாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இது அமெரிக்காவில் தற்போதுள்ள மக்கள்தொகை அளவைக் காட்டிலும் அதிகமாகும்.
இந்தியாவில் 1,000 நோயாளிகளுக்கு ஒரு படுக்கை வசதி என்கிற அளவிலேயே சுகாதார பராமரிப்பு வசதிகள் இருந்து வருவதால் முதியோர்கள் பராமரிப்பில் அதிகப்படியான முதலீடும் வளங்கள் ஒதுக்கீடும் இருக்கவேண்டியது அவசியமாகிறது.
சென்னையில் கார்த்திக் ராமகிருஷ்ணன் 2017-ம் ஆண்டு அமைத்த ’அதுல்யா அசிஸ்டட் லிவிங்’ 'Athulya Assisted Living' என்கிற முதியோர் பராமரிப்பு ஸ்டார்ட் அப் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண முற்படுகிறது.
இந்த நிறுவனம் மருத்துவ பராமரிப்பு சார்ந்த தொழில்முறை நிபுணர்கள் அடங்கிய குழுவுடன் முதியோர் பராமரிப்பு சேவை வழங்குகிறது. க்ளையண்ட்டின் ஒவ்வொரு தேவைக்கும் சிறப்பாக சேவையளிக்கும் இந்த ஸ்டார்ட் அப் ஆன்லைனிலும் செயல்படுகிறது.
முதியோர் இல்லம் அல்ல…
அதுல்யா முதியோர்கள் பராமரிப்பு மையமாக விளங்குகிறது. வெளிநாடுகளில் வசிப்பவர்களும் தங்களது பணிவாழ்க்கையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களும் தங்களது பெற்றோர்களை பராமரிக்க உதவி தேடுவார்கள். அத்தகைய நபர்களை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது அதுல்யா.
படுக்கைகள், நவீன ஈசிஜி இயந்திரம், அழைப்பின்பேரில் எந்த நேரத்திலும் மருத்துவரைத் தொடர்புகொள்ளும் வசதி என அனைத்து புக்கிங்கையும் ஆன்லைனில் மேற்கொண்டு போன் மூலமாகவும் நேரிலும் தகவல்களை சரிபார்க்கிறது. இந்த ஸ்டார்ட் அப் அதன் க்ளையண்ட்களுக்கு மாதாந்திர அடிப்படையில் கட்டணம் வசூலிக்கிறது.
”இந்தியாவில் ஸ்டார்ட் அப் தொடங்குவது எளிதல்ல. ஏனெனில் இங்குள்ள முதியோர் இல்லங்களில் முதியோர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டாலும் அவர்களுக்கு சுகாதார பராமரிப்பு வழங்கப்படுவதில்லை. வயது முதிர்ந்தவர்களுக்கு ஒருங்கிணைந்த சமூகம் மட்டும் போதுமானதாக இருக்காது. அவர்கள் மருத்துவர்களையும் செவிலியர்களையும் அணுகுவது அவசியம். மருத்துவமனைக்கு அருகில் இருக்கவேண்டியதும் அவசியமாகிறது,” என்றார் ’அதுல்யா அசிஸ்டட் லிவிங்’ நிறுவனர் கார்த்திக் என்.ராமகிருஷ்ணன்.
கார்த்திக் முதலில் பயிற்சிபெற்ற மருத்துவராக செயல்படத் தொடங்கினார். இவர் நிர்வாகம் மற்றும் மருத்துவமனை சார்ந்த செயல்பாடுகளில் பத்தாண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மருத்துவமனை மேலாண்மை நிபுணர் ஆவார். இவர் பிராந்தியத் தலைவராகவும் அமெரிக்காவில் உள்ள டிக்னிட்டி ஹெல்த், ப்ரைம் ஹெல்த்கேர் சர்வீசஸ், கெய்சர் பெர்மனண்ட் போன்ற முன்னணி சுகாதார அமைப்புகளின் செயல்திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஃபெலோவாகவும் இருந்துள்ளார்.
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஒருங்கிணைந்த வணிக நகரங்களில் ஒன்றான ஸ்ரீ சிட்டியின் முதன்மை ஹெல்த்கேர் ஆலோசகராகவும் செயல்படுகிறார். அத்துடன் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியின் தலைவருக்கு ஆலோசகராகவும் உள்ளார்.
முழுமையான சேவைகள்
கார்த்திக் 2 கோடி ரூபாய் சுயநிதியுடன் அதுல்யா ஸ்டார்ட் அப்பைத் தொடங்கியுள்ளார். வருவாய் குறித்த தகவல்களை இவர் வெளியிட விரும்பாதபோதும் வளர்ச்சி அடைந்து வருவாத குறிப்பிட்டார். இருப்பினும் முதியோர்களின் பிள்ளைகளை சம்மதிக்க வைப்பதில் ஆரம்பகட்ட சவால்கள் இருந்ததாக தெரிவிக்கிறார்.
”முதியோர் பராமரிப்பைப் பொறுத்தவரை பாரபட்சமான கருத்து மக்களிடையே இருப்பதால் செயல்பாடுகள் சற்று குறைவான வேகத்திலேயே நகர்ந்தது. வெளிநாடுகளில் உள்ள பிள்ளைகள் தங்களது பெற்றோர்களை தொழில்முறை வல்லுநர்களைக் கொண்டு பராமரிக்க முடியும் என்கிற கருத்தினை உணர்ந்து ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு சிங்கப்பூரைச் சேர்ந்த முதல் க்ளையண்ட் எங்களுடன் இணைந்துகொண்டார்,” என்றார் கார்த்திக்.
2018-ம் ஆண்டின் வெற்றிகரமான செயல்பாடுகளைத் தொடர்ந்து சென்னையில் அரும்பாக்கம், பெருங்குடி ஆகிய பகுதிகளிலும் செயல்படத் தொடங்கினர். இன்று இந்த ஸ்டார்ட் அப்பில் 50-க்கும் அதிகமான தனிநபர்கள் இணைந்துள்ளனர். வருங்காலத்தில் அசிஸ்டட் ஹோம்ஸில் இணைந்திருக்கும் முதியவர்களை அவர்களது பிள்ளைகள் பார்க்க ஏதுவாக செயலிகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்சமயம் இந்நிறுவனம் முதியவர்களை மருத்துவமனைகளுடன் இணைக்கிறது. தொடர்ந்து அவர்களது முக்கிய அறிகுறிகள் ஐஓடி சாதனங்கள் மூலம் சோதனை செய்யப்பட்டு தகவல்கள் க்ளௌடிற்கு அனுப்பப்படுகிறது.
”முதல்கட்டமாக முதியவர்களுக்குத் தேவையான பராமரிப்பை வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம். நாங்கள் மேலும் வளர்ச்சியடைகையில் கூடுதல் தொழில்நுட்பத்தை இணைத்துக்கொள்வோம்,” என்றார் கார்த்திக்.
அதுல்யா Healthabove60 என்கிற பிராண்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது முதியவர்கள், பராமரிப்பு மையத்தில் வசிப்பதற்கு பதிலாக அவர்களது வீட்டிலேயே ஆதரவளிக்கப்பட உதவும் முயற்சியாகும்.
Healthabove60 முதியவர்களுக்கு அவர்களது வீட்டிலேயே மருத்துவர் ஆலோசனை, நர்சிங் உதவியாளர்கள், பராமரிப்பு ஊழியர்கள், பிசியோதெரபிஸ்ட், ரத்த சேகரிப்பு, மருந்து விநியோகம், மருத்துவ ஆலோசனை, ஆம்புலன்ஸ் சேவை, பல் பராமரிப்பு சேவை, மருத்துவ உபகரணங்கள், டயாலிசிஸ் உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது.
முதியவர்கள் பராமரிப்பிற்கான ஓராண்டு கட்டணம் 20,000 டாலர் முதல் 1,00,000 டாலர் வரை ஆகும்.
”நாங்கள் ஒரு சமூகத்தை உருவாக்கி வருகிறோம். தற்சமயம் தற்போதுள்ள 50 படுக்கை வசதியை 100 படுக்கை வசதியாகவும் 18 மாதங்களில் 500 படுக்கை வசதியாகவும் அடுத்த 5 ஆண்டுகளில் 5,000 படுக்கை வசதியாகவும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளேன்,” என்றார் கார்த்திக்.
சந்தை வாய்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளபோதும் துரதிர்ஷ்ட்டவசமாக விநியோகம் 3,00,000 யூனிட்கள் மட்டுமே இருப்பதாக ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான ஜேஎல்எல் குறிப்பிடுகிறது. விரைவாக விரிவாக்கம் செய்வதற்கான தேவை நிலவுகிறது.
ஆஷியானா ஹவுசிங், Paranjape Schemes, இம்பாக்ட் சீனியர் லிவிங் எஸ்டேட், கோவை ப்ராபர்டீஸ், பிருந்தாவன் சீனியர் சிட்டிசன் ஃபவுண்டேஷன், கிளாசிக் ப்ரொமோட்டர்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் ஏற்கெனவே இந்தப் பகுதியில் களமிறங்கி செயல்பட்டு வருவதாக ரியர் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம் ஜேஎல்எல் தெரிவிக்கிறது.
இவர்களது ப்ராஜெக்டுகள் ஏற்கெனவே என்சிஆர்-டெல்லி, புனே, பெங்களூரு, அம்ரிஸ்டர், கோயமுத்தூர், சென்னை போன்ற முக்கிய மெட்ரோக்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்தப் பிரிவின் சாத்தியக்கூறுகளை உணர்ந்து சந்தையில் மிகப்பெரிய அளவில் பங்கு வகிப்பதற்காக மேக்ஸ் க்ரூப், டாடா ஹவுசிங் போன்ற முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்களும் செயல்படத் தொடங்கியுள்ளது.
”பயிற்சி பெற்ற மனிதவளங்கள் கிடைப்பது சவாலாக உள்ளது. வாய்ப்புகள் அதிகம் காணப்படும் மிகப்பெரிய தொழில்துறைகளில் இதுவும் ஒன்றாகும்,” என்றார் கார்த்திக்.
முதியவர்கள் எண்ணிக்கை
நாட்டில் முதுமையடைந்து வருபவர்கள் அதிகரித்து வருவதால் இந்த எண்ணிக்கை படிப்படியாக தொடர்ந்து அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 2011-ம் ஆண்டு இந்தியாவில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 76 மில்லியன் பேர் இருந்தனர். இந்த எண்ணிக்கை 2025-ம் ஆண்டில் 173 மில்லியனை எட்டும் என்றும் 2050-ம் ஆண்டில் 240 மில்லியனை எட்டும் என்றும் மதிப்பிடப்பட்டதாக ஜேஎல்எல் குறிப்பிடுகிறது. முதியவர்கள் அடங்கிய மக்கள்தொகை அதிகரிப்பதால் முதியவர்கள் சார்புநிலை விகிதத்தில் மாற்றம் ஏற்படும்.
2050-ம் ஆண்டில் சார்புநிலையில் உள்ள பெரியவர்களின் எண்ணிக்கையும் சார்புநிலையில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
இவ்வாறு எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதுடன் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த முதியவர்களுடன் ஒப்பிடுகையில் இன்றைய தலைமுறை முதியவர்களின் தேவை வெகுவாக மாறியுள்ளது. சீனியாரிட்டி போன்ற ஸ்டார்ட் அப் சுயசார்புடன் இருக்கக்கூடிய வசதிபடைத்த முதியவர்களுக்கு சேவையளித்து வருகிறது.
இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பணிஓய்வு பெற்ற பிறகு எடுக்கப்படவேண்டிய தீர்மானங்களில் தெளிவாக இருக்கும் நிலையில் இவர்களது தேவைகள் தனியார் மற்றும் பொதுத்துறையால் சரிவர புரிந்துகொள்ளப்படாமல் இருக்கின்றன. சேவை வழங்குவோரும் தொழில்முனைவோர்களும் முதியவர்களின் இருப்பிட தேவைகளில் புதுமை படைப்பதுடன் அவர்களது வாழ்க்கைமுறை தேவைகளுக்கும் தீர்வு காண மிகப்பெரிய வாய்ப்பு காணப்படுகிறது.
கார்த்திக் தற்போது சென்னையில் செயல்படுவதில் தீவிரமாக உள்ளார். அடுத்த மூன்றாண்டுகளில் பெங்களூரு, ஹைதராபாத் போன்ற முக்கிய தென்னிந்திய நகரங்களில் செயல்பட திட்டமிட்டுள்ளார். இனி வரும் நாட்களில் அதுல்யா செயல்படுவதற்கான வாய்ப்புகள் நாடு முழுவதும் விரிவடையும்.
ஆங்கில கட்டுரையாளர்: விஷால் கிருஷ்ணா | தமிழில்: ஸ்ரீவித்யா