Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

சீனியர் சிட்டிசன்களின் நண்பனாய் அனைத்து சேவைகள் அளிக்கும் சென்னை நிறுவனம்!

தனியாக வசிக்கும் முதியவர்களுக்கு வீட்டுச் சாப்பாடு, மருந்து, மளிகைப் பொருட்கள் வாங்கித் தருவது முதல் அவர்களை மருத்துவமனை, வங்கி என அழைத்து செல்வது வரை அனைத்தையும் செய்கிறது இந்நிறுவனம்.

சீனியர் சிட்டிசன்களின் நண்பனாய் அனைத்து சேவைகள் அளிக்கும் சென்னை நிறுவனம்!

Thursday July 30, 2020 , 4 min Read

முதியவர்களுக்கு ஏற்கெனவே ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் இருக்கும். இதுபோன்ற இணை நோய்கள் இருக்கும் முதியவர்களுக்கு கோவிட்-19 தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக தொற்று எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.   


இந்தச் சூழலில் முதியவர்களைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் அவசியமாகிறது. குடும்பத்துடன் வசிக்கும் முதியவர்களை குடும்பத்தினர் பராமரிக்கும் நிலையில் தனியாக வசிக்கும் முதியவர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.

1

சென்னையைச் சேர்ந்த முதியோர் பராமரிப்பு ஸ்டார்ட் அப் Alserv. இந்த ஸ்டார்ட் அப் பெருந்தொற்று சமயத்தில் முதியவர்களுக்கு உதவுகிறது. சரவணன் ஆதிசேஷன், ஜகதீஷ் ராமமூர்த்தி, அதுல் ஜகதீஷ் ஆகியோர் ஒன்றிணைந்து 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஸ்டார்ட் அப்'பைத் தொடங்கியுள்ளனர். முதியவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை அவர்களது வீடுகளுக்கே கொண்டு சேர்த்து உதவுவதே இந்த ஸ்டார்ட் அப்பின் நோக்கம்.

Get connected to Alservys-connect


ஜகதீஷ் ராமமூர்த்தி, சரவணன் ஆதிசேஷன் இருவரும் 1998ம் ஆண்டு Allsec Group of Companies நிறுவினார்கள். Alserv இந்நிறுவனத்தின் ஒரு பிரிவு என்று அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விருவரும் 2019ம் ஆண்டு ஜூன் மாதம் Allsec-ல் இருந்து விலகினார்கள். இதைத் தொடர்ந்து ஜகதீஷ், சரவணன், ஜகதீஷின் மகன் அதுல் ஆகியோர் தற்போது ஒன்றிணைந்து Alserv மூலம் முதியவர்களுக்கு உதவி வருகின்றனர்.

“முதியோர்களுக்கு தொழில்நுட்பத்தின் உதவியுடன் சேவையளிக்கும் ஸ்டார்ட் அப்’பை உருவாக்க விரும்பினோம். இதன் மூலம் முதியோர்களுக்குத் தேவைப்படும் அனைத்து சேவைகளையும் முழுமையாக வழங்குவது கடினம். எனவே அனைத்து வகையான சேவைகளையும் உள்ளடக்கிய, தொகுக்கப்பட்ட ஒரு தளத்தை உருவாக்கினோம். உணவு, மளிகை, சுகாதாரம், வீட்டுப் பணிகளுக்கான சேவை என பல்வேறு சேவைகளைப் பயனர்கள் பெறுவதற்கு ஒரே ஒரு தளத்தைப் பயன்படுத்தினால் போதும்,” என்றார் Alserv இணை நிறுவனர் மற்றும் இயக்குநர் ஜகதீஷ் ராமமூர்த்தி.

முழுமையான சேவை

உணவு மற்றும் கேட்டரிங், மருத்துவம், பாதுகாப்பு, வீட்டு பராமரிப்பு, பாதுகாவலர் சேவை ஆகிய ஐந்து பிரிவுகளின்கீழ் இந்த ஸ்டார்ட் அப் முதியோர்களுக்கு சேவையளிப்பதாக யுவர்ஸ்டோரி இடம் ஜகதீஷ் விவரித்தார்.

Get connected to Alservys-connect
வீட்டில் சமைக்கப்பட்ட உணவு பயனரின் வீடுகளுக்கே டெலிவர் செய்யப்பட விற்பனையாளர்களுடன் இணைக்கிறது Alserv. மாதம், வாரம் அல்லது தினசரி டெலிவரி அடிப்படையில் பயனர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். விழாக்களுக்கான கேட்டரிங் சேவைகள் வழங்குவோர்களுடன் பயனர்களை இணைக்கிறது. இந்த ஆப் பயன்படுத்தி மளிகைப் பொருட்களையும் ஆர்டர் செய்துகொள்ளலாம்.

வீட்டிலேயே மருத்துவப் பரிசோதனை செய்யப்பட மருத்துவர்களுடனும் மருத்துவம் தொடர்பான சேவை வழங்குவோர்களுடனும் பயனர்களை இணைக்கிறது. இதன் மூலம் மருந்துகளைப் பெறலாம். பயனர்களின் உடல்நிலையைக் கண்காணிக்க பயிற்சிபெற்ற செவிலியர்களை நியமித்துக்கொள்ளலாம். இவை தவிர மருத்துவ ஆலோசனைகளைப் பெற மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல உதவும் நபர்களையும் நியமித்துக் கொள்ளலாம்.


முதியோர்கள் Alserv ஆப் அல்லது வலைதளம் பயன்படுத்தி செக்யூரிட்டி சர்வீஸ் பெறலாம். அத்துடன் வீட்டைப் பராமரிக்கவும் வீட்டு வேலைகளுக்கு நபர்களை பணியமர்த்தலாம். மேலும் டிக்கெட் புக்கிங், லாஜிஸ்டிக்ஸ், நிகழ்வு மேலாண்மை போன்ற சேவைகளை வழங்கும் வெண்டார்களுடன் பயனர்களை இணைக்கிறது இந்நிறுவனம்.

இந்த ஸ்டார்ட் அப் முதியவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள உதவுவதுடன் அவர்களை வங்கி, கோயில், மருத்துவமனை போன்ற இடங்களுக்கு கூட்டிச் செல்ல உதவியாளர்களைப் பெறவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி ஆன்லைனில் கட்டணங்கள் செலுத்த வேண்டிய செயல்முறையில் சிக்கல்கள் இருந்தால் அதற்கும் உதவி கிடைக்கும்.

பயனர்களுக்கு அனைத்து விதமான சேவைகளும் வீட்டிற்கு வந்து சேர தொழில்நுட்பம் உதவுகிறது. இருப்பினும் சில முதியவர்கள் மொபைல் மற்றும் செயலிகளைப் பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றிருக்க மாட்டார்கள்.

“Alserv-ல் இதற்கென பிரத்யேகமாக மேலாளர்களை நியமித்துள்ளது. பயனர்கள் இவர்களை அழைத்து தங்களது தேவைகளை தெரியப்படுத்தலாம். பயனர்கள் சார்பில் இந்த மேலாளர் புக்கிங் செய்வார். இந்த மேலாளர்கள் பயனர்களின் நண்பர்கள் போல் செயல்படுவார்கள்.”

மேலாளர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட பயனர்களை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை அழைப்பார்கள். அவர்களுடன் உணர்வுப்பூர்வமான இணைப்பை உருவாக்குவார்கள். இது கூடுதலாக வழங்கப்படும் சிறப்பு சேவை என்று குறிப்பிடுவதைக் காட்டிலும் மேலாளர்களின் பொறுப்பு எனலாம்,” என்று விவரித்தார்.

கோவிட்-19 தொற்று -  முதியோர்களுக்கு உதவி

முதியோர்கள் தற்சார்புடன் வாழ உதவவேண்டும். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியச் சேவைகளை அவர்களது வீட்டிற்கே கொண்டு சேர்க்கவேண்டும். இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதுதான் Alserv என்கிறார் ஜகதீஷ்.


கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக ஆன்லைன் சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஊரடங்கு சமயத்தில் இந்நிறுவனத்தின் சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது என்கிறார் இதன் இணை நிறுவனர். சமைக்கப்பட்ட உணவு, மளிகைப் பொருட்கள் மற்றும் மருத்துவச் சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது என்றார்.


அவர் மேலும் கூறும்போது தற்போதைய சூழல் சீரான பிறகும்கூட தங்களது சேவை தொடரும் என்றார். அதேபோல் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமின்றி பொழுதுபோக்கிற்காக அவர்கள் வெளியே செல்லவும் உதவுவதே இந்நிறுவனத்தின் நோக்கம் என்கிறார்.

வணிகம்

ஆரம்பகட்ட முதலீடாக 5 கோடி ரூபாயுடன் Alserv தொடங்கப்பட்டதாகவும் தற்போது சுயநிதியில் இயங்கி வருவதாகவும் ஜகதீஷ் குறிப்பிட்டார். தேவையெழும்போது நிதி திரட்டப்படும் என்றார். தற்சமயம் Alserv குழுவில் 15 பேர் உள்ளனர்.


Alserv சந்தா அடிப்படையில் செயல்படுகிறது. மாதாந்திர சந்தாவிற்கு பயனர்கள் 1,000 ரூபாய் செலுத்தி இணையலாம். அதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் இதில் பட்டியலிடப்பட்டுள்ள விற்பனையாளர் அல்லது சேவை வழங்குவோர்களிடமிருந்து வெவ்வேறு வகையான சேவைகளைப் பெறலாம். Alserv விற்பனையாளர்களுக்குப் போட்டியாளராக செயல்பட விரும்பவில்லை. இதனால் Alserv எந்தவித சேவைகளையும் தனிப்பட்ட முறையில் வழங்குவதில்லை. சேவை வழங்குவோர்களை முதியவர்கள் எளிதாகத் தொடர்புகொள்ள உதவும் வகையில் அவர்களது சேவைகளை Alserv தொகுத்து வழங்குகிறது.


சந்தா கட்டணம் தவிர விற்பனையாளர்கள் மற்றும் சேவை வழங்குவோரை பயனர்களுடன் இணைக்கும் சேவைக்காக விற்பனையாளர்களிடமிருந்து குறைந்தபட்ச கட்டணத்தை Alserv வசூலிக்கிறது.

இவர்கள் தற்சமயம் சென்னை முழுவதும் சுமார் 200 முதல் 300 பயனர்களைக் கொண்டுள்ளர். சென்னையில் இந்த சேவை மாதிரி வெற்றியடைவதைத் தொடர்ந்து மற்ற நகரங்களில் விரிவடைய திட்டமிடப்படும் என்றார் ஜகதீஷ்.

EMOHA Elder Care, ElderAid, Seniority, ElderEase, Life Circle Senior Services போன்றவை முதியோர் பராமரிப்பு பிரிவில் செயல்படும் மற்ற நிறுவனங்களாகும். குருகிராமைச் சேர்ந்த Emoha Elder Care நிறுவனமும் இந்த பெருந்தொற்று சமயத்தில் முதியோர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை டெலிவர் செய்து உதவி வருகிறது. #MissionEldersFirst என்கிற முயற்சியைத் தொடங்கி மக்களைத் தன்னார்வலர்களாக இணைத்துக்கொண்டு அந்தந்த பகுதிகளில் உள்ள முதியவர்களுக்கு உதவுகிறது.


ஆங்கில கட்டுரையாளர்: ஸ்ரேயா கங்குலி | தமிழில்: ஸ்ரீவித்யா

Get connected to Alservys-connect