ஏவுவாகனத் தயாரிப்பில் ISRO உடன் கைகோர்க்கும் சென்னை நிறுவனம் Agnikul
விண்வெளித்துறையுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி, சென்னை ஸ்டார்ட் அப்பான அக்னிகுல் ஏவுவாகன தயாரிப்பில் இஸ்ரோவுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பை பெறுகிறது.
சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ் (Agnikul), விண்வெளித் துறையுடன், இந்தியன் நேஷனல் ஸ்பேஸ் புரோமோஷன் அண்ட் ஆத்தரைசேஷன் செண்டர் (IN-SPACe) திட்டத்தின் கீழ், தகவல்களை வெளியிடாத ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி, ஐஐடி மெட்ராஸ் அடைக்காக்கும் மையத்தின் கீழ் செயல்படும் அக்னிகுல் நிறுவனம், ஏவுவாகனத்தை உருவாக்குவதில் இஸ்ரோவுடன் இணைந்து செயல்படும்.
இது தொடர்பாக அக்னிகுல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரோவின் பல்வேறு மையங்களுடன் நிறுவனம் இணைந்து செயல்படும் என்றும், ஏவுவாகனத்தை உருவாக்க தேவையான தொழில்நுட்பத் தகவல் மற்றும், வசதிகளை அணுகும் வாய்ப்பைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்புடன் இணைந்து செயல்படவும் இது ஊக்குவிப்பாக அமையும்.
ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் மற்றும் மொயின் எஸ்.பி.எம் ஆகியோரால் 2017ம் ஆண்டு துவக்கப்பட்ட ’அக்னிகுல்’ இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி ஏவுவாகனத்தை உருவாக்குவதில் ஈடுபட்டது. நிறுவனம் உருவாக்கிய அக்னிபான், 100 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை, 700 கிமீ புவிவட்ட பாதையில் செலுத்தும் திறன் கொண்டது.
“ஆரம்ப நிலையில் உள்ள ஸ்டார்ட் அப்’புக்கு இஸ்ரோ ஆதரவு அளிப்பது, இந்தியாவில் விண்வெளி தொழுல்நுட்பத்தை உருவாக்குவதில் விருப்பம் கொண்டவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாகும். 2020 ஜூலையில், IN-SPACe திட்டம் அதிகாரப்பூர்வமாக துவக்கப்படுவதற்கு முன்பாகவே, தனியார் நிறுவனங்கள் இஸ்ரோவால் ஊக்குவிக்கப்படும் என இஸ்ரோ தலைவர் கூறியிருந்தார். அது இப்போது செயலுக்கு வந்துள்ளது. இது போன்ற ஒப்பந்தத்தில் கையெடுத்திடும் முதல் நிறுவனமாக அக்னிகுல் இருப்பது எங்களுக்கு மறக்க முடியாத தருணமாக அமைவதாக, அக்னிகுல் காஸ்மோஸ் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஸ்ரீநாத் ரவிசந்திரன் கூறியுள்ளார்.
இஸ்ரோ தலைவர் மற்றும் விண்வெளித் துறையின் செயலாளர் கே.சிவன் பங்கேற்ற நிகழ்ச்சியில், மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஏவுவாகனங்களை உருவாக்க மரபு சாராத வழிகளை ஆராயுமாறு தனியார் ஸ்டார்ட் அப்களை கேட்டுக்கொண்டார்.
“இது நம் நாட்டிற்கு மகிழ்ச்சியான தருணம், இந்த பயணத்தில் அக்னிகுல் நிறுவனத்திற்குத் தேவையான ஆதரவை வழங்க ஆர்வமாக உள்ளோம்,” என்று, அறிவியல் செயலாளர் மற்றும் IN-SPACe அதிகாரமளிக்கப்பட்ட குழு தற்காலிக தலைவர் உமா மகேஸ்வரன் கூறினார்.
கடந்த ஜூன் மாதம், விண்வெளி ஆய்வு சார்ந்த துறைகளில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் வழிகாட்டுதல், ஆதரவு வழங்க இஸ்ரோவின் விரிவாக்கப்பட்ட அமைப்பாக IN-SPACe, உருவாக்கப்படுவதை மத்திய அமைச்சரவை அறிவித்தது.
முன்னதாக இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில் இந்த அமைப்பு, தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் மைய அமைப்பாக விளங்கும் மற்றும் செயற்கைக்கோள்கள், ஏவுவாகனங்களை உருவாக்குவது, இஸ்ரோ வசதிகளை பகிர்வது, விண்வெளித்துறை வளாகத்தில் ஏவுதளங்கள் அமைப்பது ஆகியவற்றில் நிறுவனங்களை ஊக்குவிப்பது மற்றும் வழிகாட்டுதலில் ஈடுபடும் எனத் தெரிவித்திருந்தது.
இந்த அமைப்பின் தலைவர் கீழ், கல்வியாளர்கள், வல்லுனர்கள் அடங்கிய இயக்குனர் குழு செயல்படும். இந்தியாவில் விண்வெளி ஆய்வை மேலும் மேம்படுத்த மற்றும் தனியார்- அரசு கூட்டு முயற்சியை ஊக்குவிப்பதை இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியில் இஸ்ரோவுடன் கைகோர்க்கும் முதல் ஸ்டார்ட் அப்பாக அக்னிகுல் விளங்குகிறது.
ஆங்கில கட்டுரையாளர்: ஸ்ரேயா கங்குலி | தமிழில்- சைபர்சிம்மன்