11 மில்லியன் டாலர் சீரிஸ் ஏ நிதி திரட்டிய சென்னை நிறுவனம் ‘அக்னிகுல்’
சென்னை விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனமான அக்னிகுல், ஏ சுற்று நிதியாக 11 மில்லியன் டாலர் திரட்டியுள்ளது.
சென்னையைச்சேர்ந்த விண்வெளித்துறை ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘அக்னிகுல்’ ‘Agnikul' மேபீல்டு இந்தியா நிறுவன தலைமையிலான ஏ சுற்று மூலம் 11 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. இந்தியாவில் தனியார் விண்வெளி நிறுவனத்திற்கு அளிக்கப்படும் மிக அதிகமான நிதிச்சுற்றாக இது அமைகிறது.
பீநெக்ஸ்ட், குலோப் இன்வெஸ்டர், லயன்ராக் கேபிடல் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்ற இந்த நிதிச்சுற்றில் முன்னணி ஏஞ்சல் முதலீட்டாளர்கள் ஆன்ந்த் மகிந்திரா, நவல் ரவிகாந்த், பாலாஜி ஸ்ரீனிவாசன், நிதின் காமத், ஆர்த்தி ராமமூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களான பை வென்சர்ஸ், ஸ்பெஷலே இன்வெஸ்ட் மற்றும் அர்த்தா வென்சர் பண்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் பங்கேற்றன.
வலுவான தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதியை உருவாக்குவது, சோதனை வசதியை விரிவாக்குவது மற்றும் இந்தியாவில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் முதல் நிறுவனமான அக்னிகுல் நிறுவனத்தை உருவாக்கத் தேவையான குழுவை அமைப்பது ஆகியவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிதிச்சுற்றை அடுத்து மேபீல்டு இந்தியா மேனேஜிங் பார்ட்னர் விக்ரம் கோட்சே நிறுவன இயக்குனர் குழுவில் இணைந்துள்ளார்.
இதற்கு முன், இந்நிறுவனம் ஏ சுற்றுக்கு முந்தைய நிதியாக 3.1 மில்லியன் டாலர் நிதி திரட்டியது. பை வென்சர்ஸ், ஹரி குமார் (லயன்ராக் கேபிடல்), ஆர்த்தா வென்சர் பண்ட், லெட்ஸ் வென்சர், குலோப் இன்வெஸ்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் பங்கேற்றன.
”கடந்த சுற்று நிதியை, தள சோதனை, பேப்ரிகேஷன் மற்றும் அணி உருவாக்கத்திற்கு பயன்படுத்திக்கொண்டதாக,” நிறுவன இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஸ்ரீநாத் ரவிசந்திரன் கூறியுள்ளார்.
2017ல், ஸ்ரீநாத் ரவிசந்திரன், மோயின், சக்ரவர்த்தி ஆகிய ஐஐடி சென்னை பட்டதாரிகளால் துவக்கப்பட்ட அக்னிகுல் நிறுவனம், இந்தியாவின் முதல் தனியார் செயற்கைகோள் ஏவுவாகனமான அக்னிபானை உருவாக்கி வருகிறது.
100 கிலோ பேலோடைக் கொண்டு செல்லக்கூடிய இந்த ஏவுவாகனத்தை வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கேற்ப அமைத்துக்கொள்ளலாம். இந்த ஸ்டார்ட் அப் அடுத்த ஆண்டு வாக்கில் தனது முதல் மிஷனை (ஏவுதல்) நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.
“நிறைய சோதனைகளை மேற்கொண்டுள்ளோம். வன்பொருள் தகுதி மற்றும் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என ஸ்ரீநாத் ரவிசந்திரன் கூறியுள்ளார்.
“நீள் வட்டப்பாதைக்குச் செல்ல அடுத்த இரண்டு ஆண்டுகள் மிகவும் ஏற்றவை. இதுவே மிகப்பெரிய செயலாகும். இந்த செயலில் எங்கள் கவனத்தை குவித்துள்ளோம்,” என்று இணை நிறுவனர் மற்றும் சி.ஓ.ஓ மோயின் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோவுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட முதல் ஸ்டார்ட் அப்பாக அக்னிகுல் விளங்கியது. IN-SPACe திட்டம் கீழ், அக்னிபான் ஏவு வாகனத்தை உருவாக்குவதற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொகுப்பு: சைபர்சிம்மன்