கொரோனா தாக்கத்தால் உடல் ஆரோக்கிய பிரிவில் செயல்படத் தொடங்கிய தொழில்நுட்ப நிறுவனம்!
’Medikcare' என்ற செயலி அறிமுகப்படுத்தி, கொரோனா சூழலில் நோயாளிகள் டாக்டர்களுடன் உரையாடுவது, சந்தேகங்களை தீர்ப்பதும் என பல சேவைகளை வழங்கியது இந்த சென்னை நிறுவனம்.
கோவிட் பல தொழில்களை நசுக்கி இருக்கிறது. சில பிரிவுகளை உருவாக்கி இருக்கிறது. சென்னையைச் சேர்ந்த டெக்னாலஜி நிறுவனம் ‘ஆர்வி மேட்ரிக்ஸ்.’ இந்த நிறுவனம் டெக்னாலஜி சேவைகளில் ஈடுபட்டுவருகிறது. கோவிட் சமயத்தில் டேட்டாகளை கையாளுவதில் பிரச்சனை இருந்தது. அப்போது தமிழக அரசுடன் இணைந்து ஆர்.வி.மேட்ரிக்ஸ் பணியாற்றியது.
அதாவது, வெளிநாட்டில் இருந்து ஒரு பயணி வருகிறார் என்றால் அவர் ஏர்போர்டில் இருந்து எந்த ஊருக்கு செல்கிறார், அவருக்கு கோவிட் இருக்கிறதா இல்லையா, பயணிகள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது உள்ளிட்ட பல ரியல் டைம் டேட்டாகளை ஒரு ஆப் உருவாக்கி அதன் மூலம் எடுத்து அரசுக்கு வழங்கி இருக்கிறது இந்நிறுவனம்.
’Medikcare' என்ற அந்த செயலி மூலம், கொரோனா சூழலில் நோயாளிகள் டாக்டர்களுடன் உரையாடுவது, சந்தேகங்களை தீர்ப்பதும் என பல சேவைகள் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாம் அலையில் பெரும் சிக்கல்கள் உருவாகின. படுக்கைகள் கிடைப்பதில் தொடங்கி, ஆக்ஸிஜன் பற்றாக்குறை என பல தடுமாற்றங்கள் இருந்தன.
இந்த சமயத்தில் நோயாளிகளையும் மருத்துவச் சேவையில் இருக்கும் நிறுவனங்களையும் இணைக்கும் புள்ளியாக செயல்பட்டுள்ளனர் இவர்கள். இரண்டாம் அலையில் மருத்துவமனைகளில் படுக்கை இல்லை. ஆனால், சிகிச்சை எடுக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு (சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு) மருத்துவச் சிகிச்சைகளை வீட்டுக்கே கொண்டுவருவது, ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பணிககளை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ’கவசம்’ என்னும் பெயரில் மருத்துகள், மாத்திரைகள், மூலிகைகள் உள்ளிட்டவற்றை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள 5,000 குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கி இருக்கிறார்கள்.
இதன் அடுத்தகட்டமாக மெடிக்கேர் பெயரில் வெல்னஸ் மையத்தை தொடங்க நிறுவனம் திட்டமிட்டது. அனந்த கார்த்திக், டாக்டர் பிரபுதாஸ், மிதுன் தேவராஜுலு, சிவஷங்கர் மற்றும் ஜிஎஸ்.ராஜேஷ் ஆகியோர் இணைந்து வெல்னஸ் மையத்துக்கான வேலையை தொடங்கினார்கள்.
நீங்கள் இருப்பது டெக்னாலஜி பிரிவில் வெல்னஸ் என்பது வேறு துறை. ஏன் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்னும் கேள்வியுடன் அனந்த் கார்த்திக் மற்றும் சிவஷங்கருடன் கேட்டபோது,
”கோவிட் இரண்டாம் அலை முடிந்தாலும் கோவிட்டுக்கு பிந்தைய பாதிப்புகள் பெரும்பாலானவர்களுக்கு இருந்தது. எங்கள் குழுவில் டாக்டர் பிரபுதாஸ் இருக்கிறார். இது தொடர்பாக விவாதத்தில் வெல்னெஸ் மையங்கள் தொடங்கலாம் என முடிவெடுத்தோம்.”
உடல் சரியில்லை என்றால் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் உடல் தொடர்ந்து சீராக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் வெல்னெஸில் கவனம் செலுத்த வேண்டும் என முடிவெடுத்தோம், என்றனர்.
நமக்கு இன்று ஒரு நோய் உருவாகிறது என்றால் ஒரு நாளில் வராது. நீண்ட நாட்களாக நமக்கு இருக்கும் உணவுப்பழக்கம், மனநிலை ஆகியவற்றை பொறுத்தே நோய் வருகிறது. அதனை தற்போதே சோதனை மூலம் கண்டறியும்போது எந்தவிதமான நோயும் இல்லாமல் நீண்ட நாள் மகிழ்ச்சியாக இருக்கலாம். இதனை அடிப்படையாகக் கொண்டுதான் வெல்னெஸ் மையத்தை தொடங்கினோம்.
மனம், உடல் மற்றும் ஆன்மாவை ஒழுங்குபடுத்துவதற்காக மையத்தை உருவாக்க இருக்கிறோம்.
உங்கள் வாடிக்கையாளர் யார்?
நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் அனைவரும் எங்களிடம் வரலாம். ஒவ்வொருவரின் தேவையை பொறுத்து அவர்களுக்குத் தேவையான பயிற்சி வழங்கப்படும். இயல்பாக இருப்பவர்களுக்குத் தேவையான பயிற்சிகள். உடல் நிலை சரியில்லாதவர்களுக்கு வேறு பயிற்சிகள், உணவுப்பழக்கம் என அனைத்தையும் வடிவமைத்துக் கொடுப்பதுதான் எங்களது பணி, என்கிறார் அனந்த் கார்த்திக்.
இப்போதைக்கு சில வெல்னெஸ் மையங்களுடன் இணைந்து பயிற்சி வழங்குகிறோம். வேளச்சேரியில் சொந்தமான வெல்னெஸ் மையம் தொடங்கும் பணியில் இருக்கிறோம். இங்கு ஒருவருக்கு என்னப் பிரச்சினை அல்லது ஒருவருக்கு என்ன தேவை என பரிசோதனை செய்யும் மையம் மட்டுமே.
தேவையான சிகிச்சைக்கு மருத்துவமனைகள் மற்றும் வெல்னெஸ் மையங்களுடன் இணைந்து செயல்படுவோம். இன்னும் ஒரிரு ஆண்டுகளில் தமிழகத்தில் இருக்கும் மெட்ரோ நகரங்களில் கிளை இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது திட்டம், என்றனர்.
கோவிட்டுக்கு பிறகு உடல் ஆரோக்யத்துக்கு அனைவரும் கவனம் செலுத்துகிறார்கள். அதனால் நாங்களும் வெல்னெஸில் கவனம் செலுத்துகிறோம் எனத் தெரிவித்தனர்.