கும்பகோணம் டூ சிலிக்கான் வேலி: தொழில்நுட்ப நிறுவனத்தை வழிநடத்தும் ராஜ் நீர்வண்ணன்!
சிலிக்கான் வேலியை மையமாக கொண்ட சாஸ் சேவை மேடையான ஆல்பாசென்ஸ் இணை நிறுவனர் ராஜ் நீர்வண்ணன் பற்றி ஒரு விரிவான அறிமுகம்.
அறிவுசார் மேடையான 'AlphaSense'-ன் இணை நிறுவனர், சி.டி.ஓ., என்ற முறையில், ராஜ் நீர்வண்ணன் தொழில்நுட்பம் சார்ந்த எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்றுக்கொள்கிறார்.
தொழில்நுட்பத்துறையில் அனுபவசாலியான இந்த தொடர் தொழில்முனைவோர், எப்போதுமே தயாரிப்புகளை (பிராடக்ட்) உருவாக்குவதன் ஆற்றலில் நம்பிக்கைக் கொண்டவராக இருக்கிறார். ’ஆல்பாசென்ஸ்’ சேவை மூலம், தேடியந்திரங்களுடன் செயல்பட்டு, மனிதர்கள் போலவே சிந்திக்கும் அல்கோரிதமை உருவாக்கியுள்ளார் இவர்.
இதற்கு உதாரணமாக,
“நான் ஒரு குறிச்சொல்லை டைப் செய்தால், அந்த வார்த்தைக்கு தொடர்புடைய வார்த்தைகளை எல்லாம் கண்டறிந்து, நீங்கள் தேடும் எந்த விஷயம் தொடர்பான பெரிய சித்திரத்தை தரும் வகையில் தேடியந்திரம் எப்படி மேலும் செயல்திறன் மிக்கதாக இருக்க முடியும்,” என்று அவர் விளக்கம் தருகிறார்.
தமிழகத்தின் கும்பகோணத்தில் உள்ள சிறிய நகரத்தைச் சேர்ந்த ராஜ், குடும்பத்தினர் எப்போதும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பில் வசித்தனர்.
“உங்களிடம் குறைவான வளங்களே இருக்கும் போது, சிறிய நண்பர்கள் வட்டம், உங்களிடம் உள்ள விஷயங்களைக் கொண்டு, உங்களுக்கான மகிழ்ச்சியை உருவாக்கிக் கொள்ள பழக்கப்படுகிறீர்கள். இதன் மூலம், உங்களிடம் இருப்பதைக் கொண்டு புதிய விஷயங்களை உருவாக்க, உங்களுக்குள் இருக்கும் வளத்தை அணுகக் கற்றுக்கொண்டேன்” என்கிறார் ராஜ்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு அவரது குடும்பம் சென்னைக்கு குடி பெயர்ந்தது. மேம்பட்ட வளங்கள் இருப்பதால் எல்லோரும் எப்படி வாழ்க்கையில் முன்னேறியிருக்கின்றனர் என்பதை ராஜ் இங்கு கற்றுக்கொண்டார். தானும் இதற்கேற்ப ஓட வேண்டும் என உணர்ந்தார்.
“எதையும் இல்லாமல் ஒன்றை செய்வது மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் எப்படி வலுவான தொழில்நுட்பவாதியாக உருவாவது என்பதை கற்றுக்கொடுத்தது,” என்கிறார் ராஜ்.
2008, 2009 மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் போது, குறைவான வளங்களுடன் உருவாக்கும் ஆற்றல் கை கொடுத்தது என்கிறார்.
BITS பிலானி பாடம்
சேவைகளை உருவாக்கும் ஆர்வம் மற்றும் தேவை தான் அவரை பொறியியல் படிப்பின் மீது ஆர்வம் கொள்ள வைத்து, 1980-களில் பிட்ஸ் பிலானியில் சேர்ந்து படிக்க வைத்தது.
கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கும், பின் சென்னையில் இருந்து பிட்ஸ் பிலானிக்குச் சென்றவர் பயணம் வேறு மட்டத்தில் அமைந்திருந்தது.
“இது முற்றிலும் புதிய உலகை திறந்துவிட்டது. சிறிய நகரங்கள் உங்களுக்கு வளத்தை பயன்படுத்திக்கொள்ளுதல், மற்றும் ஊக்கத்தை கற்றுத்தருகின்றன என்றால், வேறு மாநிலம், கல்லூரிக்குச்சென்றது நாட்டின் மற்ற பகுதிகளை திறந்து காட்டியது. பிட்ஸ் கல்வி நிறுவனம் தகுதிக்கு முன்னுரிமை அளிப்பது. நீங்கள் என்ன செய்திருந்தாலும் முக்கியமில்லை, நீங்கள் சிறந்தவராக இருக்க வேண்டும்,” என்கிறார் ராஜ்.
இந்த இடத்தில் தான், கல்வி அறிவு, கோடிங் திறன், அலசல் திறன் கைகொடுத்தன என்கிறார். எந்த விஷயத்தையும் ஆரம்பத்தில் இருந்து கற்றுக்கொள்வது மற்றும் ஒவ்வொரு அம்சத்திலும் தீர்வு காண்பதில் கவனம் செலுத்த வைத்தது, என்கிறார். பொறியியல் முடித்த பிறகு சென்னை சி.எஸ்.ஐ.ஆர்-ல் பயிற்சி வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், அவர் மேலும் கற்க விரும்பினார். கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆப்பரேஷன் ரிசர்ச் மேலும் கற்க விரும்பியவர் 1990 களில் அமெரிக்கா சென்று பவுளிங் கிரீன் மாநில பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
ஸ்டார்ட் அப்
“இதுவே என் முதல் விமானப் பயணம். 1995ல் என் படிப்பை முடித்த போது, இணையத்தின் ஆரம்ப காலத்தில் அமெரிக்காவில் இருந்தது என் அதிர்ஷ்டமாக அமைந்தது. இது மொஜில்லாவின் ஆண்டு. நான் மிகவும் உற்சாகம் அடைந்து, புதிய புரட்சிக்குள் நுழைவதாக உணர்ந்தேன்.
”மைக்ரோபிராசஸ்ர் மற்றும் பிசி புரட்சிகளை தவறவிட்டதாக உணர்ந்தேன். இவற்றில் அங்கம் வகிக்க விரும்பினேன். ஆனால், என்னால் வெளியேறி சொந்தமாக உருவாக்க முடியவில்லை. நானே சொந்தமாக உருவாக்க விரும்பினேன். படிப்பை முடித்து, கிரீன் கார்டு அனுமதி கிடைத்த போது இதில் தான் கவனம் செலுத்தினேன்,” என்கிறார்.
உலகம் முழுவதும் ஸ்டார்ட் அப் முயற்சிகள், புதிய உருவாக்கம் ஊக்குவிக்கப்படுவதை பார்த்தார் ராஜ். மக்கள் நிதி திரட்டுவதையும், புதிய எண்ணங்கள் மூலம் புதிய சேவைகளை உருவாக்குவதை முதல் முறையாகப் பார்த்தார். சொந்தமாக ஏதேனும் செய்யும் ஊக்கத்துடன் அவர் 1999ல் அமெரிக்காவில் Expeditrix Corp என்ற முதல் நிறுவனத்தை உருவாக்கினார்.
இப்போதைய 99acres தளம் போன்ற எண்ணமாக இது அமைந்திருந்தது.
“1999ல் மக்கள் இணையத்தில் வீடுகளை தேடி, இணையம் மூலம் வீடு வாங்குவார்கள் என நம்பினேன். இந்தப் பார்வை பெரிதாக இருந்தாலும், நம்மால் என்ன செய்ய முடியும், செய்ய முடியாதது என்றும் புரிய வைத்தது. கணிசமான மூலதனம் திரட்டி, 2001ல் நிறுவனத்தை விற்றுவிட்டோம். மற்றொரு சிறிய நிறுவனத்தை வளரச்செய்து அது கையகப்படுத்தப்பட உதவினேன். அது பாலிசிபஜார் போன்ற ஸ்டர்ட் அப்பாக இருந்தது,” என்கிறார்.
பிரேம்சாப்ட், ஜெட்டாவொர்க்ஸ், இ-பாலிசி சொல்யூஷன்ஸ், சாய்ஸ் பாயிண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் அடங்கும். இந்த நிறுவனங்களில் ராஜ், ஓராண்டு காலம் வரை பணிபுரிந்து, பல்வேறு சேவைகள் உருவாக்கப்பட வழிகாட்டினார். பல்வேறு நிறுவனங்களில் ஆறு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு அவர் எம்பிஏ படிக்க விரும்பினார்.
எம்.பி.ஏ மற்றும் ஸ்டார்ட் அப்
பலரும் வர்த்தகத்தை நடத்த எம்பிஏ தேவையில்லை என்கின்றனர். இது கட்டாயம் இல்லை என்றாலும், கற்றுக்கொள்ள இருப்பதாகவே நினைத்தேன். உங்களால் பரிசோதனையில் ஈடுபட முடியும், மற்றவர்கள் அனுபவத்தில் இருந்து கற்க முடியும்.
“நான் வார்ட்டனில் இணைந்தேன். இங்கு தான் என்னுடைய இப்போதைய இணை நிறுவனர் ஜேக் கோக்கோவை சந்தித்தேன். வார்ட்டபில் ஸ்டடி குரூப்பில் அறிமுகமானோம். அவரும் கடினமான சந்தையில் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை உருவாக்கியிருந்தார்,” என்கிறார் ராஜ்.
இருவரும் தங்கள் திறன்கள் பரஸ்பரம் உதவக்கூடியவை என நினைத்தனர். 2008ல் அவர்கள் ’ஆல்பாசென்சை’ துவக்கினர்.
“நாங்கள் 30-களில் இருந்தோம். மற்ற தொழில்கள் போலவே, தொழில்முனைவிலும், ஊழியர்கள் நிர்வாகம், மற்ற பங்குதாரர்களை கையாள்வது போன்ற திறன்களை கற்றுக்கொள்ள சில காலம் ஆகலாம். சில நேரங்களில் சில ஸ்டார்ட் அப்களுக்கு துவக்கத்திலேயே சிறந்த பங்குதாரர்கள் கிடைப்பதுண்டு. ஆனால், நிர்வாகப் பொறுப்புகளை விரைவிலேயே வேறு ஒருவரிடம் ஒப்படைக்காமல், தொடர்ந்து நிலைத்து நின்று, தங்கள் பார்வையை செயல்படுத்துபவர்களே சிறந்த நிறுவனர்கள்,” என்கிறார்.
இரண்டு நிறுவனர்களுக்குமே ஸ்டார்ட் அப் முன் அனுபவம் இருந்ததால் இதில் உள்ள சிக்கல்களை அறிந்திருந்தனர். பெரும்பாலான நிறுவனங்கள் ரொக்கம் இல்லாமல் போவதாலேயே தோல்வி அடைகின்றன.
“30’களில் நாங்கள் உருவாக்கிய இந்த ஸ்டார்ட் அப் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டது. விரைவாக நிதி திரட்டுவதற்கு பதிலாக சேவை மற்றும் வாடிக்கையாளர்கள் மீது கவனம் செலுத்தினோம். இந்த சேவையில் நம்பிக்கை கொண்டிருந்த ஆரம்ப வாடிக்கையாளர்கள் மீது கவனம் செலுத்தினோம்,” என்கிறார் ராஜ்.
வார்ட்டனில் கற்றுக்கொண்ட அனுபவம் மற்றும் இருவரின் பின்னணி சார்ந்து ஆல்பாசென்ஸ் சேவை அமைந்திருந்தது. எம்பிஏ காலத்தில், தகவல்களைத் தேட முயற்சிக்கும் போது பல்வேறு சாதனங்களை மீறி போதாமை இருப்பதை உணர்ந்தனர்.
“ஆனால் ஒரு நிறுவனத்தை அதன் செயல்பாட்டை புரிந்து கொள்ள விரும்பினால் தகவல்கள் குறைவாக இருந்தன. பெரும்பாலான தகவல்கள் நிறுவன பார்வையில் அமைந்திருந்ததோடு, அனைத்து தகவல்களையும் ஓரிடத்தில் பெற வழியில்லை. சந்தை இயக்கம், மக்களின் கருத்து, செயல்பாடு குறித்து அறிய வழியில்லை. அதாவது ஆய்வு அறிக்கைகள் மற்றும் கட்டுரைகள். இங்கு தான் அறிவுசார் தேவையை உணர்ந்து முறையான தேடியந்திரம் அவசியம் என உணர்ந்தோம்,” என்கிறார்.
தேடலில் புத்திசாலித்தனம்
கூகுள் ஒரு தேடியந்திரம். ஒரு வர்த்தகத்தை ஆய்வு செய்ய ஆழமான தகவல்கள் தேவை என்கிறார் ராஜ். ஒரு குறிப்பிட்ட நிறுவனம் ஒரு சந்தை அல்லது விலைப்பிரிவில் நுழையலாமா என்பதை தீர்மானிக்க ஆய்வு அவசியம்.
“இந்தத் தகவல்கள் பேலன்ஸ் ஷீட்டில் இருப்பதில்லை. இது வெவ்வேறு கட்டுரைகளில் பிரிந்து கிடக்கிறது. மக்கள் ஒரு குறிச்சொல் சார்ந்து தேடுகின்றனர் எனப் புரிந்து கொண்டோம். மேலும் தேடல் முடிவுகளும் இந்த வார்த்தை சார்ந்தே அமைகின்றன. நீங்கள் தகவல்களை தேடும் போது குறிச்சொல்லை தாண்டி, அதன் நோக்கம், பொருள் சார்ந்து அமைய வேண்டும்,” என்கிறார் ராஜ்.
இதற்கு உதாரணமாக, புற்றுநோய் சிகிச்சைக்கான சோதனைகள் பற்றிய அறிய விரும்பும் மருந்தக நிறுவனத்திற்கு மேலோட்டமான தகவல்கள் போதுமானவை அல்ல என்கிறார். மேலும், ஆழமான தகவல்களுக்கு மனித அறிவு உதவி வேண்டும்.
இதன் அடிப்படையில் தான், சந்தை அறிவை புரிந்து கொள்ளக்கூடிய தேடியந்திரத்தை உருவாக்கத் தீர்மானித்தனர். முதல் 10 முடிவுகள் கருத்தில் இருந்து விடுபட்டு, தேடலுக்கான புதிய இடைமுகத்தை குழு உருவாக்கியது.
“ஒரு பொருத்தமான தகவலுக்காக, 100 பக்கங்களை படிக்க யாருக்கும் நேரம் இல்லை. உங்கள் தேடலின் நோக்கத்தை புரிந்து கொள்ளும் தேடியந்திரத்தை உருவாக்குவது இலக்காக அமைந்தது,” என்கிறார்.
இன்று நிறுவனத்தில் ஊழியர்களை நியமிக்கும் போது, நம்பிக்கை மற்றும் தொடர்பு திறனை அவர் எதிர்பார்க்கிறார்.
“இன்று பொறியாளர்கள் மிகவும் ஸ்மார்ட்டாக இருக்கின்றனர். நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. எனவே தங்கள் திறனில் மட்டும் அல்லாமல், அலசல் மற்றும் தீர்வு காணும் திறன் கொண்டவர்களைக் கண்டறிவது முக்கியம்,” என்கிறார்.
இல்லை என்பதை பதிலாக ஏற்காதீர்கள், உங்களுக்கு தான் உங்கள் திறமை தெரியும்,. மற்றவர்கள் இதை தீர்மானிக்க அனுமதிக்காதீர்கள், என்று தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அறிவுரையாக கூறுகிறார்.
ஆங்கிலத்தில்: சிந்து கஷ்யப் | தமிழில்: சைபர் சிம்மன்