பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட இவர், இன்று ரூ.3கோடி ஈட்டும் வெற்றி தொழில் முனைவர் ஆன ரகசியம்!
இந்த லக்னோவைச் சேர்ந்த இளைஞர் கையிலெடுத்த பாரம்பரியத் தொழில் என்ன என்று தெரியுமா?
லக்னோவை பிறப்பிடமாகக் கொண்டது சிக்கன்காரி எம்பிராய்டரி, இது 17ம் நூற்றாண்டில் முகலாயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. முகலாய பேரரசர் ஜஹாங்கிர் மனைவி நூர்ஜஹான் அறிமுகத்தியதாகக் கூறப்படும் இந்த எம்பிராய்டரிக்கு தனி உத்திகளும், உருவாக்கமும், இணைப்பு முறைகளும் தேவை.
பழங்காலத்தில் மெல்லிய மஸ்லின் துணிகளில் வெள்ளை நூலால் எம்பிராய்ட்ரி செய்யப்பட்டதே சிக்கன்காரி, இந்நாளில் பலதரப்பட்ட துணிவகைகளில் பல்வேறு வண்ணங்களின் உதவியுடன் சிக்கன்காரி வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. வெள்ளை நிற நூலில் மட்டுமே செய்யப்பட்டு வந்த சிக்கன்காரி டிசைகன்கள் தற்போது வண்ண நூலின் உதவியால் அனார்கலி, குர்தா, குர்தீஸ், சேலைகள் போன்றவற்றில் கலர், கலராக ஜொலிக்கின்றன.
காலம் காலமாக நிலைத்து நிற்கும் இந்த சிக்கன்காரி எம்பிராய்டரிக்களை உருவாக்க 10 நாட்கள் தேவைப்படுகிறது. கடின உழைப்பும், கலை நுணுக்கமும் கொண்ட இந்த சேலைகள் அனைத்து தரப்பு மக்களின் விருப்பப் பட்டியலில் இடம் பெற்ற ஒன்றாக உள்ளது.
இந்த கலைநயமிக்க வேலைப்பாடே லக்னோவைச் சேர்ந்த நித்தேஷ் அகர்வாலை இளம் தொழிலதிபராக மாற்றியுள்ளது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நித்தேஷ், குடும்பத்தின் வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டார். தனது 19 வயதில் சிக்கன்காரி என்ற எம்பிராய்ட்ரி தொழிலை எடுத்து செய்ய ஆரம்பித்தார். முறையான முதலீடுகள் இன்றி, 2005ம் ஆண்டு இந்தத் தொழிலை தொடங்கிய இவர், முதலில் உள்ளூர் வியாபாரிகளிடம் கடனுக்கு சிக்கன்காரி வேலைப்பாடுடன் கூடிய உடைகளை வாங்கி, அதனை மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார்.
அதன் மூலம் தனக்குக் கிடைத்த அனுபவம் மற்றும் முதலீட்டைக் கொண்டு ’திரிவேணி சிக்கன்காரி ஆர்ட்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது அவரது சிக்கன்காரி எம்பிராய்டரி ஆடைகளுக்கு சிங்கப்பூரில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது, அங்கிருந்து நிறைய பேர் இவருக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு சிக்கன்காரி உடைகளைக் கேட்க ஆரம்பித்தனர். இதனை ஏன் ஏற்றுமதி தொழிலாக மாற்றிக் கொள்ளக் கூடாது என முடிவு செய்தார் நித்தேஷ்.
அதனை எவ்வாறு செய்வது என்று தெரியாமல் திகைத்த போது தான், அவருக்கு லக்னோவின் ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்பு உதவிக்கரம் நீட்டியது. ஏற்றுமதிக்கான விதிமுறைகள் மட்டுமல்லாது, சிக்கன்காரி எம்பிராய்டரி ஆடைகளை வெளிநாடுகளில் எவ்வாறு சந்தைப்படுத்துவது போன்ற தகவல்களை அவருக்கு கற்றுத்தந்தது.
இதன் மூலம் சிறிய அளவில் இருந்த திரிவேணி சிக்கன்காரி ஆர்ட்ஸ் நிறுவனத்தை 2011ம் ஆண்டு விரிவாக்கம் செய்தார். 400 ஆண்டுகள் பழமையான சிக்கன்காரி எம்பிராய்டரி டிசைனை உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்திய பெருமை நித்தேஷையே சேரும்.
இவரது நிறுவனம் சிக்கன்காரி வேலைப்பாட்டுடன் கூடிய சேலைகள், சுடிதார், லேஹங்கா போன்ற உடைகளையும், ஆண்களுக்கான குர்தாவையும் அழகிய கலைநயத்துடன் நவீன ட்ரெண்டிற்கு ஏற்றப்படி உருவாக்குகிறது.
13 ஆயிரம் முதலீட்டில் தொடங்கப்பட்ட தனது நிறுவனம் தற்போது ஆண்டிற்கு 3 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டுவதாக பெருமிதத்துடன் கூறுகிறார் நித்தேஷ். மேலும் தனது குடும்ப உறுப்பினர்கள் 4 பேரைச் சேர்ந்து, தற்போது இந்த நிறுவனத்தில் 15 பேர் பணிபுரிவதாகவும், 200 பெண்கள் உட்பட பலர் இதன் மூலம் மறைமுக வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாகவும் கூறுகிறார்.
சிறிய அளவில் தொடங்கப்பட்டு, விஸ்வரூபம் எடுத்துள்ள திரிவேணி சிக்கன்காரி ஆர்ட்ஸ் நிறுவனம் தற்போது உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் தனக்கான பிரத்யேக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இவர்களது சிக்கன்காரி ஆடைகள் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, பர்மா, அமெரிக்கா மற்றும் லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பெரிய தொழில் நிறுவனங்கள் உத்தர பிரதேசத்தின் கிராமப்புறங்களை சென்றடையவில்லை எனக்கூறும் நித்தேஷ், தங்கள நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் தங்களது திறமைகளைப் பயன்படுத்தி அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தி வருவதாகவும். இது அவர்கள் தன்னிறைவு பெறுவதற்கான சிறிய படி என்றும் குறிப்பிடுகிறார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி.யும் தனது தொழிலை கடுமையாக பாதித்துள்ளதாக கூறும் அவர், ஏற்றுமதியாளர்களுக்கு திரும்ப வழங்கப்படும் ஜி.எஸ்.டி. வரித் தொகையை உடனடியாகத் தர வேண்டும் என்றும், தரமான சிக்கன்காரி பொருட்களை மானிய விலையில் தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அரசிற்கு கோரிக்கை வைக்கிறார்.
சீனாவின் பெரிய போட்டியை சமாளித்து, தங்களது நிறுவனத்தை நடத்துவது மிகுந்த சவாலாக உள்ளதாகக் கூறுகிறார்.
தனக்கு உள்நாட்டில் உள்ள சிக்கல்களை சமாளிக்கும் விதமாக, கலைநயத்துடன் கூடிய சிக்கன்காரி ஆடைகளை 15க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்காக தனது திரிவேணி சிக்கன்காரி ஆர்ட்ஸ் நிறுவனத்தை இண்டர்நேஷனல் பிராண்டாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
பழமையான சிக்கன்காரி எம்பிராய்டரியில் புதுமைகளை புகுத்திவரும் இவர், மேலும் பல்வேறு கலைநுணுக்கங்களை அதில் வடிவமைக்கக் காத்திருக்கிறார், அதற்காக புதுமையான யோசனைகளைக் கொண்ட, ஆக்கப்பூர்வமான நபர்களை தேடிவருகிறார்.
நேர்மையாகவும், தனது வேலைக்கு உண்மையாகவும் இருக்க வேண்டும் என்பதும், தொழிலில் கூட்டு உழைப்பிற்கு உரிய மதிப்பளிக்க வேண்டும் என்பதுமே புதிதாக தொழில் முனைவோருக்கு நித்தேஷ் கூறும் வெற்றி ரகசியங்கள் ஆகும்.
ஆங்கில கட்டுரையாளர்: வத்சலா ஸ்ரீவத்சவா | தமிழில்: கனிமொழி