Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

பசி, பட்டினி, பஞ்சமென கழிந்த பால்யம் - ஆதரவற்றோரை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் அனுமுத்து!

6 வயதில் தந்தையின் மரணம், ஒரு நாள் சம்பளம் ரூ.4 என பால்ய காலத்தை பசி, பட்டினியுடன் கழித்த அனுமுத்து, உதவி பெற்று படித்து வளர்ந்தபின், வீதிகளில் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு நலவாழ்வு அளிக்கும் ''சினேகன்' எனும் தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.

பசி, பட்டினி, பஞ்சமென கழிந்த பால்யம் -  ஆதரவற்றோரை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் அனுமுத்து!

Saturday November 02, 2024 , 4 min Read

6 வயதில் தந்தையின் மரணம், ஒரு நாள் சம்பளம் ரூ.4 என பால்ய காலத்தை பசி, பட்டினியுடன் கழித்த அனுமுத்து, அவருக்கு கிடைத்த உதவிகளால் படித்தார். சமூகம் அவரை ஒரு மனிதராக்கியது. அப்போது அவரது முறை என்று உணர்ந்தவர், சமூகத்துக்கு திருப்பி செய்வதற்காக வீதிகளில் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு நலவாழ்வு அளிக்கும் 'சினேகன்' எனும் தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.

அனுமுத்து சின்னராஜூவின் பால்யகால நினைவுகளை பற்றி எண்ணி பார்கையில் அவர் நினைவுக்கு வருவது இரண்டே விஷயங்கள் தான். ஒன்று வறுமை, மற்றொன்று குழந்தைத் தொழிலாளர். திருப்பத்துாரைச் சேர்ந்த சின்னராஜின் தந்தை மரம் வெட்டும் தொழிலாளி. அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், குடும்பதை பசியுடன் தூங்கவிட்டதில்லை. ஆனால், அவரின் மறைவுக்கு பிறகு குடும்பம் வறுமையில் வாடியது.

அப்போது, சின்னராஜூக்கு வயது 6. அவரது தாயுடன் சேர்ந்து வயலில் வேலைக்கு சென்றார். அவரது ஒரு நாள் சம்பளம் ரூ.4. அவரது அம்மாவுக்கு ரூ.6. இந்த வருமானம் தான் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரம்.

"நாள் முழுக்க சாப்பாடே சாப்பிடாமல் பட்டினியுடன் பல நாட்கள் கழிந்துள்ளன. சில சமயங்களில் எங்களுக்கு கஞ்சியும் ஊறுகாயும் கிடைக்கும். நல்ல உணவுக்காக ஏங்கி தவித்துள்ளோம். ஆனால், அப்போது அது சாத்தியமற்ற கனவாகத் தோன்றியது," என்று சின்னராஜ் கண்கள் கலங்க, கடந்தகால நினைவுகளை சோஷியல் ஸ்டோரியிடம் பகிர்ந்தார்.

பசி, பட்டினி மற்றும் பணப்பஞ்சத்தை எதிர்கொண்டதிலிருந்து இன்று பல வீடற்றவர்களுக்கு உதவுவதற்காக ஒரு NGO தொடங்குவது வரை, சின்னராஜ் நெடுந்துாரம் கடந்து வந்துள்ளார்.

புதுச்சேரியில் வீடற்றவர்களை மேம்படுத்தும் நோக்கில் 2008ம் ஆண்டில் சினேகன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனம் வீடற்றவர்களுக்கு மருத்துவ பராமரிப்பு மற்றும் தங்குமிடம் வழங்குகிறது.

மேலும், மக்கள் பொருளாதார ரீதியாக தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் உதவுகிறது. தற்போது, தொண்டு நிறுவனத்தில் ​​16 குழு உறுப்பினர்கள் உள்ளனர். சிறுவயதிலிருந்து உழைத்தவர் என்பதால் அதன் வேதனை நன்கு அறிவார். அதனால், குழந்தை தொழிலாளர்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அத்துடன், இலவச உணவு விநியோகமும் செய்கிறது.

 Snehan NGO

வாழ்க்கை அளித்த இரண்டாம் வாய்ப்பு...

சின்னராஜ் அவரது வாழ்க்கையில் கிடைத்த இரண்டாவது வாய்ப்பை நழுவ விடாமல் இறுக்கி பற்றிக்கொண்டார். ஆம், அவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு, குழந்தைத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த சின்னராஜ்ஜை பாதிரியார் ஒருவர் மீட்டு அவருக்கு கல்வி வழங்கி உதவிட்டார். பள்ளியில் சேர்க்கப்பட்டார். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் சின்னராஜ் ஐதராபாத்தில் ஐடிஐ-ல்எலக்ட்ரிக்கல் பிரிவில் படிப்பதற்காக சென்றார்.

அங்கு நிகழ்ச்சிகள் நடக்கும்போதெல்லாம், சின்னராஜ் புகைப்படங்களை எடுத்து வந்துள்ளார். போட்டோகிராபி மீது அவருக்கு இருந்த ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரிக்க, திருச்சியில் உள்ள ஒரு கல்லுாரியில் மல்டிமீடியா பட்டம் முடித்து தொழில்முறை புகைப்படக் கலைஞர் மற்றும் வீடியோகிராஃபர் ஆனார். ஆனால், வாழ்க்கை எத்திசைக்கு மாறினாலும் அவர் நினைவில் எப்போதும் நிறுத்தி கொண்ட ஒன்று அவருக்கு கிடைத்த உதவிகள். அவரது வாழ்க்கையை மாற்றிய பல நல்ல உள்ளங்களின் உதவிகளை அவர் எப்போதும் நினைவு கூர்ந்தார். பள்ளியில் படிக்கும் போதே அவருக்கு கிடைத்த உதவியின் பலனின் மூலம், சமூகத்திற்கு திருப்பிக் கொடுக்க தீர்மானித்தார்.

வீடியோ எடிட்டராக, ​​பல்வேறு அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். ஐந்தாண்டுகள் வீடியோ எடிட்டராகப் பணியாற்றிய பிறகு, உள்ளுணர்வின் உத்தரவில் இயங்க பணியை விட்டுவிட்டு முழுநேர சமூகப் பணியில் ஈடுபட விரும்பினார். அவரது மனைவியின் சொந்த ஊரான புதுச்சேரிக்கு சென்று 'சிநேகன்' இல்லத்தை தொடங்கினார்.

"ஒரு திரைப்படத் தயாரிப்பாளராகவும், எடிட்டராகவும், பல அபூர்வமான காட்சிகளைக் காட்சிப்படுத்தியுள்ளேன். இருப்பினும், நிகழ்கால யதார்த்த வாழ்க்கை பெரியளவிலான எவ்வித மாற்றங்களுமின்றி அப்படியே தான் உள்ளது. எனவே, பாண்டிச்சேரியின் தெருக்களில் உள்ள வீடற்ற, தாழ்த்தப்பட்ட மக்களுடன் பணிபுரிந்து, அவர்களின் நிஜ வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக என் தொழிலை விட்டேன். வீடற்று கைவிடப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்து, அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளையும், சமூகத்தில் கண்ணியத்தையும் பெறுவதையும் உறுதிசெய்கிறோம்," என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Anumuthu Chinnaraj

74 வயதான ராமன் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரது 15 வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். பின்பு, ஒரு ஓட்டலில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இருப்பினும், நீண்ட நேரம் நின்றது அவரது முழங்கால்களை பலவீனப்படுத்தியது. வயதான காலத்தில் அவரது இயக்கத்தையே முடக்கியது. தொடர்ந்து வலி மற்றும் கால்கள் வீக்கத்தால் அவரது வேலை பறிபோனது. வாழ்க்கையில் வறுமை துரத்த பிச்சை எடுக்க ஆரம்பித்தார்.

அப்போதுதான் சிநேகன் அவரை மீட்டெடுத்தது. இன்று சின்னராஜ் துவங்கிய 'சினேகன் பேக்ஸ்' என்ற தனி நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பருத்தி பைகளை தள்ளு வண்டியில் விற்று, ஒரு நாளைக்கு சுமார் 400 ரூபாய் சம்பாதித்து பிழைப்புக்கு வழி கண்டுபிடித்துள்ளார் ராமன். சினேகன் உதவிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற மக்களில் ராமனும் ஒருவர். புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள், பைத் தயாரிப்புகள் மற்றும் அவற்றின் விற்பனை மூலம் வருமானம் ஈட்ட உதவுகிறார்கள்.

"எனக்கு மருத்துவ உதவி அளித்தனர். சில மாத சிகிச்சைக்குப் பிறகு, நடக்க ஆரம்பித்தேன். அவர்கள் தங்குமிடம் மற்றும் ஆரோக்கியமான உணவையும் வழங்கினர். இங்கிருப்பது என் வீட்டில் இருக்கும் உணர்வை தருகிறது. எனது செலவுகளுக்கு வருமானம் தரும் வேலையும் எனக்குக் கிடைத்தது," என்று கூறினார்.

ஆதரவற்றோர்களுக்கென ஒரு கிராமம்..!

ஒவ்வொரு வாரமும், சினேகன் தொண்டு நிறுவனத்தின் குழுவினர் வீடற்ற நபர்களை நகரத்தில் தேடுகின்றனர். அப்படியான நிலையில் யவரேனும் ஒருவரைக் கண்டால், அவர்களுக்கு ஏதேனும் காயங்கள் இருப்பின் காயங்களுக்கு அடிப்படை மருத்துவ சிகிச்சையை வழங்குகிறார்கள். பக்கவாதம், இயலாமை அல்லது கல்லீரல் பிரச்சனைகள் போன்ற தீவிரமான பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் எனில், அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கின்றனர்.

சிகிச்சைக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் சினேகன் இல்லத்திற்கு அழைத்து வரப்படுகிறார்கள். அங்கு அவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் குணமடையும் வரை பராமரிப்பும் வழங்கப்படுகிறது.

சிலர் சில மாதங்கள் தங்கியிருந்தாலும், அதிகபட்சமாக ஒரு வருடம் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், ஊனமுற்றவர்கள் அல்லது குடும்பம் இல்லாதவர்கள் நீண்ட காலம் தங்கலாம். புனரமைக்கப்பட்டவர்களில் பலர் நல்ல உடல் திறன் கொண்டவர்கள் மற்றும் குடும்பங்களைக் கொண்டிருப்பதால் அவர்கள் இல்லத்தில் தங்குவதற்கு வரம்புக்குட்பட்டுள்ளதாக சின்னராஜ் விளக்குகிறார்.

தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை தொடங்கியபோது, ​​நிலையான வருமானம் இல்லாததால் அதை நடத்த முடியவில்லை. அதை மூடிவிட்டு அவரது வேலைக்குத் திரும்ப நினைத்துள்ளார். ஆனால், சமூகத்திற்கு உதவவேண்டும் என்ற அவரது எண்ணமும், அர்ப்பணிப்பும் அவரை விடவில்லை. வருமானத்திற்கு வழி செய்வதற்காக பருத்தி சார்ந்த பைகள், ஏப்ரான்கள் மற்றும் பல தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்யும் 'சினேகன் பேக்ஸ்' என்ற பிராண்டை அறிமுகப்படுத்தினார்.

Snehan

விரைவில், பல பெண்களும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் மறுவாழ்வு பெற்ற பல நபர்களும் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினர். சிலர் பொருட்களை தயாரிப்பதில் பணிபுரிய, மற்றவர்கள் விற்பனைக்கு உதவினார்கள். விற்பனையில் இருந்து கிடைக்கும் வருமானம், இப்பெண்களுக்கும், மறுவாழ்வு பெற்ற நபர்களுக்கும் சம்பளம் கொடுப்பதற்குச் செல்கிறது.

மீதமுள்ள நிதி தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தக்கவைக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதுமட்டுமின்றி, இந்த அமைப்பை தொடர்ந்து நடத்த நண்பர்களும் உதவி செய்து வருகின்றனர். இந்த பயணம் நிறைவாக இருப்பதாக சின்னராஜ் பகிர்ந்தாலும், சவால்கள் இல்லாமல் இல்லை. நிதியுதவி மிகப்பெரிய தடைகளில் ஒன்றாக இருப்பதாக தெரிவித்தார்.

நிதிப் பிரச்சனைகள் இருந்தபோதிலும் சின்னராஜ், அனைத்து ஆதரவற்றவர்களும் ஒன்றாக ஒரு கண்ணியமான வாழ்க்கையை வாழ இடமளிக்கும் 'சினேகன் கிராமத்தை' உருவாக்க வேண்டும் என்ற கனவை கொண்டு அதற்காக உழைத்து வருகிறார்.

தமிழில்: ஜெயஸ்ரீ