‘குழந்தைகளின் கற்றல் சிந்தனையை தூண்டுவதாக இருக்கவேண்டும்’ - கல்வி தொழில்நுட்ப நிறுவன சிஇஒ சித்ரா ரவி!
குழந்தைகளின் தனித்திறனை வெளிக்கொணர உதவும் வகையில் 2001-ம் ஆண்டு Chrysalis என்கிற நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார் சித்ரா ரவி.
கொரோனா பெருந்தொற்று பரவல் சமயத்தில் இந்தியாவின் கல்வி தொழில்நுட்பப் பிரிவு மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது. 2021ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அதிக நிதி திரட்டப்பட்ட துறையாக கல்வி தொழில்நுட்பத் துறை விளங்குவதாக யுவர்ஸ்டோர் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
கடந்த ஆண்டு இந்தத் துறை 50க்கும் மேற்பட்ட டீல்கள் மூலம் 1.4 பில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.
, , , , , என எத்தனையோ நிறுவனங்கள் இந்தப் பிரிவில் செயல்பட்டு வருகின்றன. பி2பி, பி2சி என இதில் வாய்ப்புகளும் ஏராளமான உள்ளன. ஆனால் இருபதாண்டுகளுக்கு முன்பு இந்த நிலை இல்லை.
2001ம் ஆண்டு சித்ரா ரவியின் மகள் மழலையர் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். அந்த நாட்களிலேயே கல்வி முறையில் மிகப்பெரிய இடைவெளி இருப்பதை அவர் புரிந்துகொண்டார். குழந்தைகளின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் கல்வி அமைப்பு இல்லை என்பது அவரது கருத்தாக இருந்தது.
சித்ரா, சென்னை பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்துள்ளார். கல்வித் துறையில் அனுபவம் இல்லை. இருந்தபோதும் 2001-ம் ஆண்டு
தொடங்கினார். இந்நிறுவனம் EZ Vidya என்கிற பெயரில் முன்னர் அழைக்கப்பட்டு வந்தது.இன்று இந்தக் கல்வி தொழில்நுட்ப நிறுவனம் இந்தியாவில் 1,800 பள்ளிகளில் இணைந்துள்ளது. ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் என எட்டு நாடுகளில் செயல்படுகிறது.
சென்னையைச் சேர்ந்த இந்நிறுவனத்தை 10 லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கியதாகத் தெரிவிக்கிறார் சித்ரா. சொந்த சேமிப்பு மட்டுமல்லாது குடும்பத்தினரிடமிருந்தும் நிதி திரட்டப்பட்டு முதலீடு செய்யப்பட்டுள்ளது.
நிறுவனம் தொடங்கிய முதல் ஆண்டு 36 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. 2020 நிதியாண்டில் Chrysalis வருவாய் 30 கோடி ரூபாய். 2021 நிதியாண்டில் 24 கோடி ரூபாயாக குறைந்தது. இருப்பினும் சித்ரா நம்பிக்கையிழக்கவில்லை. தற்போதைய நிதியாண்டில் 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.
கல்வித் துறையில் இந்நிறுவனம் வளர்ச்சியடைந்தது குறித்து சித்ரா எஸ்எம்பி ஸ்டோரி-யிடம் பகிர்ந்துகொண்டார்.
முன்னெடுப்பு மற்றும் எதிர்ப்புக் குரல்கள்
சித்ரா தனது மகளை பள்ளியில் சேர்க்க திட்டமிட்டிருந்தார். ஒவ்வொரு குழந்தைக்கு ஒரு தனித்திறன் இருக்கும். ஆனால் பள்ளிகளில் அவர்களது தனித்திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. ஒரே மாதிரியான கற்றல் முறையை அனைவரும் பின்பற்றுவதை சித்ரா கவனித்தார்.
இதுபற்றி மற்ற பெற்றோர்களுடனும் கலந்துரையாடினார். அவர்களுக்கு இதே உணர்வு இருந்தது தெரிய வந்தது.
“எப்போதும் சூழ்நிலையைக் குறைகூறிக்கொண்டே இருப்பது எனக்குப் பிடிக்காது. பாடதிட்டங்களையும் பள்ளிகளையும் குறைகூறிப் பயனில்லை என நினைத்தேன். எனவே ஒவ்வொரு குழந்தையின் தனித்திறனையும் வெளிக்கொணர உதவவேண்டும் என தீர்மானித்தேன்,” என்கிறார்.
இருப்பினும் முன்அனுபவமில்லாத ஒரு துறையில் செயல்படத் தொடங்குவது கடினமாகவே இருந்துள்ளது.
“நான் என் முயற்சியைத் தொடங்கிய காலகட்டத்தில் கல்வித் தொழில்நுட்பத் துறை இன்றிருப்பது போல் இல்லை,” என்கிறார்.
பாடதிட்டங்களை வடிவமைத்து பள்ளிகளைத் தொடர்பு கொண்ட சமயத்தில் ஏற்புடைய கருத்துகளைச் சிலர் முன்வைத்த நிலையில், மேலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். துறைசார் அனுபவமில்லாததால் அவர் மீது யாரும் நம்பிக்கை வைக்கவில்லை. இத்தனை காலமாக பின்பற்றி வந்த கற்றல் முறையில் எதற்காக மாற்றம் கொண்டு வரவேண்டும் என சிலர் கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
இருப்பினும் சோர்வளிக்கும் ஒரே மாதிரியான வகுப்பறைச் சூழலை ஆர்வம் நிறைந்த அமர்வுகளாக மாற்றும் வழிமுறைகளை அவர் தொடர்ந்து ஆராய்ந்து வந்தார்.
முதல் ஆண்டில் எட்டு நபர்களுடன் தொடங்கப்பட்ட EZ Vidya வெற்றிகரமாக 350 மாணவர்களை இணைத்துக்கொண்டது. முதல் ஆண்டில் லாபம் ஈட்டப்படவில்லை என்றாலும் இரண்டாம் ஆண்டிலிருந்து லாபகரமாக செயல்படத் தொடங்கியது.
மாணவர்களை எப்படி ஆழமாக சிந்திக்கவைப்பது? எல்லைதாண்டி அவர்களது சிந்தனையை எப்படி தூண்டுவது? 2010-ம் ஆண்டு வரை இதுபோன்ற நடவடிக்கைகளில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் போன்றோருக்கு பயிற்சிளித்து வந்தது EZ Vidya.
சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளுக்காக DELL, Mirosoft, Wipro, Nokia போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கைகோர்த்துக்கொண்டது.
ஆழமான சிந்தனை
சித்ராவும் அவரது குழுவினரும் உருவாக்கிய பாடதிட்டங்கள் ஆழமான சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன.
“நாங்கள் கற்பிக்கும் முறை கேள்விகள் சார்ந்தது. உண்மைகளை மாணவர்களுக்குத் தெரியப்படுத்தும்போது அது வெறும் தகவல்களைத் தெரிவிப்பது போல் ஆகிவிடுகிறது. ஆனால் கேள்விகளே மாணவர்களின் சிந்திக்கும் திறனை மேம்படுத்தும்,” என்கிறார் சித்ரா.
கேள்விகள் கேட்கப்படும்போது சிந்தனை விரிவடைகிறது, ஆழமாகிறது, பதில் கிடைக்கிறது என விவரிக்கிறார் சித்ரா,
இவரது பாடத்திட்டங்கள் ஆழமாக சிந்திக்கும் திறன் சார்ந்தது. இது குழந்தைகளை உள்ளார்ந்து சிந்திக்க வைக்கும்.
“உதாரணத்திற்கு குழந்தைகளிடம் ‘நீ பள்ளிக்கு சென்று திரும்பும்போது ஒரு செடியைப் பார்க்கிறாய். அது மிகவும் வாடிப் போயிருக்கிறது. நீ என்ன செய்வாய்?’ என்று கேட்போம். அதற்கு, ’நான் எதுவும் செய்யாமல் கடந்து சென்றுவிடுவேன்’ என ஒரு சில குழந்தைகள் பதிலளிப்பார்கள். மேலும், சில குழந்தைகள் ’அந்தச் செடிக்கு தண்ணீர் பாய்ச்ச அருகில் எங்காவது தண்ணீர் கிடைக்கிறதா என பார்ப்பேன்’ என பதிலளிப்பார்கள். இப்படி மாணவர்களை சிந்திக்கத் தூண்டுகிறோம்,” என்கிறார்.
2011-ம் ஆண்டு இந்நிறுவனம் அதன் முக்கிய பிராடக்டான Thinkroom அறிமுகப்படுத்தியது. இது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அதனையடுத்து Chrysalis என இந்த பிராண்ட் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. Thinkroom பள்ளிகளுக்கு ஒரு பிரத்யேக தளத்தை வழங்கிவிடும். Chrysalis முக்கிய கற்பித்தல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட இதை, பள்ளிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தற்சமயம் நர்சரி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளன. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பாடதிட்டங்களை விரைவில் அறிமுகப்படுத்த சித்ரா திட்டமிட்டிருக்கிறார்.
ஒவ்வொரு பாடதிட்டத்திற்கும் 1,500 ரூபாய் முதல் 3,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். தற்போதைய நிலவரப்படி 1,800 பள்ளிகளும் 25,000 வகுப்பறைகளும் ஒன்பது லட்சம் மாணவர்களும் இந்நிறுவனத்துடன் இணைந்திருக்கின்றனர்.
தொழில்நுட்பம், பார்ட்னர்ஷிப் மற்றும் பெருந்தொற்று
இந்திய கல்விச் சூழலில் தொழில்நுட்பம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிக முக்கியம் பெற்றுள்ளது. இதற்கு பெருந்தொற்றுச் சூழலும் ஒரு முக்கிய காரணம்.
கல்வி சார்ந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் இதர தொழில்நுட்பங்களை இந்திய வகுப்பறைகளில் கொண்டு சேர்க்க Chrysalis உலகளாவிய கல்வி தொழில்நுட்ப நிறுவனமான Kidsloop உடன் கைகோர்த்துள்ளது.
மூன்று வயது முதல் 13 வயது வரையிலான குழந்தையின் கற்றல் அனுபவத்தில் காணப்படும் வளர்ச்சி பற்றிய தரவுகளை ஒன்றுதிரட்ட இந்த பார்ட்னர்ஷிப் உதவும் என்கிறார்.
தரவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் என சம்பந்தப்பட்ட நான்கு பங்குதாரர்களுக்கும் தரவுகள் முக்கியமானது என்கிறார் சித்ரா.
வரும் ஆண்டுகளில் இந்த பார்ட்னர்ஷிப் மூலம் இலங்களை, மலேசியா போன்ற நாடுகளில் விரிவடையவும் திட்டமிட்டுள்ளார்.
ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கௌஷல் | தமிழில்: ஸ்ரீவித்யா