‘2 மாதங்களாக ஆளையே காணோம்’ - அலிபாபா நிறுவனர் ஜாக் மா-வுக்கு என்ன ஆனது!?
2 மாதங்களாக ஜாக் மா வெளியே எங்கேயும் வரவில்லை!
உலகின் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றைக்கட்டி எழுப்பிய ஜாக் மா, சீன அரசை எதிர்த்து பேசிய ஒரே காரணத்தால் 2 மாதமாக தலைமறைவாக இருக்கிறார். சீன அரசின் நெருக்கடிக்கு ஏன் ஆளானார் ஜாக்மா என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
அலிபாபா! உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனம். இந்த மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கும் ஜாக்மா, கடந்த அக்டோபர் 24ம் தேதி சீன வங்கியாளர்கள் கலந்துகொண்ட பொதுச்சபையில் பங்கேற்றார். அப்போது, அரசின் வங்கித்துறை குறித்து கடுமையான விமர்சனத்தை பொதுவெளியில் முன்வைத்தார். அது அரசை நேரடியாக குற்றம்சாட்டும் வகையில் இருந்தது. அவர் அந்த நிகழ்ச்சியில்,
“சீன நிதித்துறை காலத்துக்கேற்ப புதுமைகளை புகுத்தவில்லை. வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் போதுமான நிறுவனங்கள் இல்லை,” என்று காரசாரமாகப் பேசியிருந்தார்.
அதுமட்டுமின்றி,
”சர்வதேச வங்கிக் கட்டுப்பாடுகள் குழு வயதானவர்களின் கூடாரமாக இருக்கிறது. காலத்துக்கு ஏற்ப அவர்கள் மாறவேண்டும்,” என்றும் கடுமையாக விமர்சித்தார்.
அப்போது விழுந்தது விரிசல். அங்கிருந்துதான், சீன அரசுக்கும், ஜாக் மாவுக்குமான பிரச்னை ஆரம்பமானது. பொதுவாக ஜாக்மாவை பொறுத்தவரை விமர்சனங்களை முன்வைக்க தயங்காதவர். ஆனால் அவர் இதற்கான எதிர்வினைகள் குறித்து அப்போது பயப்படவில்லை.

இந்த பேச்சுக்கு பிறகு சீன அரசு ஜாக்மாவுக்கு செக் வைக்க ஆரம்பித்தது. அலிபாபா நிறுவனத்தின் தலைமையில் இயங்கும் ‘ஆன்ட்’ (Ant) நிறுவனம் பொதுப் பங்குகளை (ஐ.பிஓ) வெளியிட தீர்மானித்திருந்தது. இதுதான் சமயம் என்று, விதிமுறைகள் முறையாக பூர்த்தி செய்யப்படவில்லை எனக் கூறி ஐ.பி.ஓ-வை வெளியிட சீன அரசு தடுத்தது.
ஆன்ட் (Ant) வெளியிட இருந்த ஐ.பி.ஓ-வின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ.3,700 கோடி டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,73,800 கோடி. இவ்வளவு மதிப்புள்ள ஐ.பி.ஓ மட்டும் வெளியாகியிருந்தால், இது உலக அளவில் மிகப்பெரிய ஐபிஓ-வாக இருந்திருக்கும்.
பொதுப்பங்குகளை வெளியிட முடியாதது, அலிபாபா நிறுவனத்துக்கு இது பெரும் அடியாக விழுந்தது. அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு இந்த ஆண்டு 30 பில்லியன் டாலர் அளவுக்கு சரிவை சந்தித்தது. இதனால் ஜாக்மாவின் சொத்து மதிப்பு 11 பில்லியன் டாலாராக சரிந்தது. தொடர்ந்து அடுத்த அடியை அடிக்க ரெடியானது ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு.

அடுத்ததாக அலிபாபா நிறுவனத்தின் மோனோபொலி கொள்கையை நொறுக்கியது. முன்னதாக Monopoly கொள்கை குறித்து தெரிந்துகொள்வோம். மோனோபோலி என்பது, அலிபாபா நிறுவனத்துக்கு பொருள்கள் விற்கும் ஒரு நிறுவனம் அதேபொருளை வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்க முடியாது. வேறு நிறுவனங்களில் விற்பனை செய்யும் பொருளையும் அலிபாபாவில் விற்க முடியாது. இது தான் இக்கொள்கை.
நீண்ட காலமாக இருக்கும் இந்த கொள்கை அரசின் விதிமுறைக்கு எதிராக இருக்கிறது என்று கூறி அலிபாபா நிறுவனத்துக்கு அரசு சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இதனால், 9 சதவிகித அளவுக்கு அலிபாபா நிறுவன பங்குகள் சரிந்தன.
இந்த சம்பவங்கள் நடக்க, கடந்த நவம்பர் மாதம், தொழில்முனைவோர்களைக் கண்டறியும் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்க இருந்த ஜாக்மா அதில் பங்கேற்வில்லை. அதன் பிறகு வெளியே தலைகாட்டவில்லை. 2 மாதங்களாக ஜாக்மா வெளியே எங்கேயும் வரவில்லை.
அலிபாபா நிறுவனத்தின் பொறுப்புகளைக் கவனிக்க வேறொரு அதிகாரியை நியமித்துவிட்டு, வெளியே வருவதை நிறுத்திக்கொண்டார். இது சீனா மற்றும் தொழிலதிபர்கள், அவருடைய நலம் விரும்பிகளிடையே வருத்ததையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஆங்கிலத்தில்: த்ரிஷா | தமிழில்: மலையரசு