3000 ரூபாயில் துவங்கி, இன்று 5 லட்சம் வாடிக்கையாளர்கள், 4.5 கோடி டர்ன் ஓவர், செய்த தொழில் முனைவர்!
வணிகப் பின்னணி இல்லாமல் தொழில் தொடங்கி வெற்றிக் கண்ட ஆடிட்டர் ராகுல் கோயல்.
வணிகப் பின்னணியில் இருந்து வருபவர்களை மட்டுமே, தொழில் முனைவில் வெற்றி அடையமுடியும் என்று பல காலமாக இருந்த நம்பிக்கை தற்போது மாறி வருகிறது. இன்று நாம் பார்க்கப்போகும் மனிதரும், வணிகக் குடும்பத்தைச் சேராது, தன் சொந்த உழைப்பினால் வெற்றி கண்டவரது கதை ஆகும்.
டெல்லியில் வசிக்கும் இளம் பட்டயக் கணக்காளர் ஆன ராகுல் கோயல், வெறும் மூவாயிரம் ரூபாய் தொடங்கிய வணிகம் இன்று 4.70 கோடி ரூபாய் வணிகமாக உயர்ந்திருக்கிறது என்றால் அது அவரது கடின உழைப்பினால் மட்டுமே தான்.
ராகுல் ஒரு சி.ஏ. (பட்டயக் கணக்காளர்) ஆவார், ஆனால் அவர் ஆடிட்டராக தொடராமல், வியாபாரம் செய்ய வேறு வழியைத் தேர்ந்தெடுத்தார். ராகுல் தனது சொந்த பேஷன் லிஸ்டிங் பிராண்டான ‘TrendyFrog' எனும் நிறுவனத்தை 2017ல் தொடங்கினார்.
ராகுல் தனது கதையை பகிரும்போது,
"நான் 1982 ஆம் ஆண்டு ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தேன். எனக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். என் தந்தை ஒரு ஆடை ஏற்றுமதியாளர் வீட்டில் பணிபுரிந்தார், அம்மா ஒரு இல்லத்தரசி. பள்ளிப்படிப்பை முடித்ததும் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.காம் முடித்தேன். பின்னர் சி.ஏ. படித்தேன்," என்றார்.
ராகுலின் தந்தை அவரது வீட்டருகே கடை ஒன்றை திறந்தார். அதில் அப்பாவுக்கு ஆதரவாக ராகுல் கடையில் இருப்பது வழக்கம். படித்துக் கொண்டிருந்தபோதே அப்பாவுக்கு உதவியதால் வணிகம் பற்றி புரிதல் ஏற்பட்டது.
“இந்த நாட்களில் பணத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை நான் கற்றுக்கொண்டேன். உங்களின் தொழில் என்ன? அனுபவம் ஏன் முக்கியமானது? - இந்த அடிப்படை விஷயங்கள் அனைத்தையும் நான் கற்றுக்கொண்டேன். இவை என்னை முன்னோக்கிக் கொண்டு செல்ல உதவியது.”
கடன் அளித்தபோது கற்றுக்கொண்ட வணிகப் பண்புகள்
சி.ஏ. முடித்த பிறகு, ராகுல் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் கடன் பிரிவில் பணிக்குச் சேர்ந்தார். கடனை வழங்க பெரிய தொழில்துறை நிறுவனர்களைச் சந்திக்க களத்திற்குச் செல்ல வேண்டிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. பின்னர் DHFL நிறுவனத்தில் இணைந்து கடன் பிரிவில் மேலும் அனுபவம் பெற்றார்.
“கடன் கொடுப்பதற்காக பல தொழிலதிபர்களைச் சந்தித்தேன். அப்படியே அவர்களிடம் இருந்து வணிகப் பண்புகளைக் கற்றுக்கொண்டேன். அப்போதுதான் Trendyfrog தொடங்கும் ஐடியா என் மனதில் உதித்தது. என் குடும்ப பொறுப்புகளும் அப்போது எனக்கு குறைவாக இருந்ததால், தைரியமாக பிசினஸ் தொடங்க முடிவெடுத்தேன்,” என்றார் ராகுல்.
தொடர் ஆராய்ச்சி, சந்தை ஆய்வு, இ-காமர்ஸ் தளங்கள் பற்றிய புரிதல் இவையெல்லாம் தெரிந்து கொண்டபின், ராகுல் ஃபேஷன் மார்க்கெட்டில் தொழில் தொடங்க திட்டமிட்டார்.
டெல்லியில் உள்ள மொத்த வியாபாரிகளை ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தித்தார் ராகுல். பெண்கள் ஆடையில் எதற்கு டிமாண்ட் அதிகம், எது வேகமாக விற்பனை ஆகிறது என்று தெரிந்து கொண்டார். அதன் முடிவாக ‘TrendyFrog’ என்ற ப்ராண்ட் பெயரில் மேற்கத்திய ஆடைப் பிரிவில் செயல்படத்தொடங்கினார்.
அப்போது வங்கிப் பணியில் முழு நேரமாக இருந்த ராகுல் கோயல், பணியை விட மனமில்லாமல், தனது தந்தை பி.கோயலை இணை நிறுவனராக்கி புதிய பிசினசை பார்த்துக் கொள்ள வைத்தார்.
”முதல் முதலீடாக 3000 ரூபாய் போட்டு துணிகள் வாங்கினார், இந்த சிறிய தொகை நாளை பெரிய ப்ராண்டாக மாறும் என்று அவர் அன்று நினைத்திருக்கவில்லை.”
இ-காமர்ஸ் தளங்களான அமேசான், பேடிம், ஃப்ளிப்கார்ட் என அனைத்திலும் ராகுல் ஆடைகளை விற்கத்தொடங்கினார். 3ஆயிரம் ரூபாய் மதிப்பு துணிகள் 3 நாளில் விற்றுப் போயின. இது அவரின் நம்பிக்கைக்கு பெரிய டானிக்காக அமைந்தது. தான் பார்த்துக் கொண்டிருந்த வேலைக்கு நடுவே தொழிலுக்கும் நேரம் ஒதுக்கி தன் முழு உழைப்பையும் தந்தார் ராகுல்.
சிறந்த விற்பனையாளர் பட்டியல்
கடின உழைப்பின் பலனாக, பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்கள் ராகுலின் பிராண்ட் மற்றும் ஆடைகளை, சிறப்பு விற்பனையாளராக பதிவு செய்தது. 2018 ஆம் ஆண்டில், பி-2-பி மாடலில் இயங்கி வந்த ‘TrendyFrog' ஃபிளிப்கார்ட்டில் பி -2 சி மாதிரியில் விற்பனை செய்ய முடிவு செய்தது. இது நிறுவனத்தின் முக்கியமான புள்ளியாகும்.
இன்று TrendyFrog அனைத்து முக்கிய இ-காமர்ஸ் இணையதளங்களிலும், பெண்கள் ஆடைப் பிரிவில் முன்னணி பிராண்ட் ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அமேசான், ஃப்ளிப்கார்ட், Meeshow, Paytm என அனைத்திலும் சக்கைப் போடு போகுகிறது இந்த ப்ராண்ட்.
TrendyFrog 2018 நிதியாண்டில் ரூ.50 லட்சம் வரை வருவாய் ஈட்டியது. இது 2019 நிதியாண்டில் ரூ.2.78 கோடியாக உயர்ந்தது. 2 ஆண்டு காலப்பகுதியில் 450% உயர்வை பெற்றது. 2020 நிதியாண்டில், இந்த பிராண்டின் வருவாய் ரூ.4.78 கோடியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கின்றனர். இதன் மூலம், இதுவரை அவர்கள் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை தங்கள் ப்ராண்டுக்கு பெற்றுள்ளனர்.
எதிர்காலத் திட்டங்கள்
தற்போது டெல்லியில் தலைமை அலுவலகம் கொண்டுள்ள இவர், மொத்தம் 10 பேருடன் ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கிளை அலுவலகங்களைத் தொடங்கியுள்ளார். தனது எதிர்காலத் திட்டங்களைப் பற்றி பேசுகையில்,
“அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.100 கோடி வர்த்தகம் செய்யத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக, டிஜிட்டல் இயங்குதளம் மற்றும் விநியோகஸ்தர் மாதிரி மூலம் நேரடி விற்பனையை நோக்கி நகர்கிறோம்," என்றார் ராகுல்.
இந்தியா முழுவதும் உள்ள 28 மாநிலங்களையும் 8 யூனியன் பிரதேசங்களையும் நேரடி விற்பனை மூலம் உள்ளடக்குவதே எங்களின் குறிக்கோள் என்கிறார். இறுதியாக,
"எங்கள் குறிக்கோள்," அனைவருக்கும் ஆடை..." என்று முடிக்கிறார் ராகுல் கோயல்.