காபி வணிகத்தில் 8 கோடி ஆண்டு வருவாய்: ஆசிரியரின் அறிவுரையை பின்பற்றி அசத்தும் தொழில்முனைவர்!
நிஷாந்த் சின்ஹா தனது கல்லூரி பேராசிரியரின் அறிவுரையை ஏற்று காபி பிரிவில் செயல்படத் தீர்மானித்து ரோஸ்டரி காபி ஹவுஸ் நிறுவி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்.
காலை எழுந்த உடன் படிப்பு என்பது குழந்தைகளுக்கு எவ்வளவு பொருந்துமோ அந்த அளவிற்கு காலை எழுந்த உடன் காபி என்பது பலருக்கு ரத்தத்தில் கலந்த ஒன்று.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் மட்டும் கற்றுக்கொடுப்பதில்லை. மாணவர்களின் நிறை குறைகளைக் கண்டறிந்து சரியான பாதையில் வழிநடத்துவார்கள். அப்படித்தான் ஒரு ஆசிரியர் கொடுத்த வழிகாட்டலைப் பின்பற்றிய மாணவர் ஒருவர் வெற்றிகரமான தொழில்முனைவராக உருவெடுத்துள்ளார்.
அவர் பெயர் நிஷாந்த் சின்ஹா. ஜோத்பூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பட்டதாரி. நிஷாந்தின் தாத்தா இந்திய ரயில்வே துறையில் முதன்மை கேட்டரிங் இன்ஸ்பெக்டராக இருந்தார். அவரது அப்பா பாட்னாவில் கேட்டரிங் வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். இயல்பாகவே நிஷாந்திற்கும் தொழில்முனைவில் ஆர்வம் இருந்தது.
இந்த ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்கும் விதமாக நிஷாந்தின் கல்லூரி பேராசிரியர் இவருக்கு இரண்டு முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். இந்த இரண்டுமே இவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்துள்ளது.
அந்த அறிவுரைகளில் முதலாவது விரைவான சேவை வழங்கும் உணவகங்கள் (QSR) துறையில் வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்பதால் இந்தத் துறையில் செயல்படுமாறு அறிவுறுத்தினார். அடுத்ததாக காபி தொழிலில் ஈடுபட அறிவுறுத்தினார்.
“இந்தியாவில் சிறந்த தரமான காபி தயாரிப்பின் அளவு அதிகம் என்றும் நுகர்வு அளவு குறைவு என்றும் என் பேராசிரியர் கூறினார்,” என்கிறார் நிஷாந்த்.
நிஷாந்த் முதலில் டெல்லியில், 'கஃபே காஃபி டே’ நிறுவனத்தில் பணிபுரிந்தார். இங்குதான் விருந்தோம்பல் குறித்து தெரிந்துகொண்டார்.
அதன்பிறகு Hindustan Unilever, Metro Cash and Carry, இத்தாலியைச் சேர்ந்த Lavazza போன்ற இடங்களில் பணிபுரிந்துள்ளார். முதல் முதலாக காபி கொட்டைகளை வறுத்த அனுபவம் இவருக்கு Lavazza –வில் கிடைத்தது. இங்கு பணியாற்றியபோது 2008ம் ஆண்டு வேலை நிமித்தமாக ஹைதராபாத் சென்றார். அந்த சமயத்தில் இவரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.
Lavazza நிறுவனத்தின் பணியை விட்டு விலகினார். அதன் பின்னர் ஆலோசகராகப் பணியாற்றி பல தொழில்முனைவோர் கஃபே அமைக்க உதவினார்.
2017ம் ஆண்டு ஆரம்ப கட்டமாக 30 லட்ச ரூபாய் முதலீட்டுடன் ஹைதராபாத்தில் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில், 'ரோஸ்டரி காபி ஹவுஸ்’ (Roastery Coffee House) ஆரம்பித்தார். ஒரு பங்களா வாங்கி தரைதளத்தை கஃபேவாக மாற்றினார்.
மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. விரைவிலேயே கொல்கத்தாவில் மற்றுமொரு கஃபே தொடங்கினார். அகமதாபாத் உள்ளிட்ட மற்ற பகுதிகளிலும் விநியோக ஆரம்பித்தார்.
இவரது நிறுவனத்தின் மாத விற்பனை அளவு சுமார் 80 லட்ச ரூபாயாக உள்ளது. 2020 நிதியாண்டின் டர்ன்ஓவர் 8 கோடி ரூபாய்.
ரோஸ்டரி காபி
ரோஸ்டரி காபி ஹவுஸ் காபி கொட்டைகள் இந்தியாவின் வெவ்வேறு பகுதியில் இருக்கும் காபி தோட்டங்களில் இருந்து வருகிறது. குறிப்பாக சிக்மங்களூரில் இருந்து பெறப்படுகிறது. ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்த இயந்திரம் கொண்டு காபி கொட்டைகள் வறுக்கப்படுகின்றன.
ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு காபி டெலிவர் செய்யும்போது காபி கொட்டைகள் வறுக்கப்பட்ட 20 நாட்களுக்குள் பயன்படுத்துவது நல்லது என்கிற குறிப்பையும் தவறாமல் வழங்குகிறார் நிஷாந்த்.
அளவுகளைப் பொருத்தவரை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப 250 கிராம் தொடங்கி ஒரு கிலோ வரை விற்பனை செய்யப்படுகிறது.
ரோஸ்டரி காபியின் சிறப்பம்சம் Cascara Coffee. Cascara காபி செர்ரியின் உலர்ந்த தோல். செர்ரியில் இருந்து விதைகள் நீக்கப்பட்ட பிறகு தோல் சேகரிக்கப்படும். அவை சுத்தம் செய்யப்பட்டு வெயிலில் உலர வைக்கப்பட்டு அனுப்பப்படும்.
“இந்தியாவில் காபி நுகர்வு, உற்பத்தி அளவைக் காட்டிலும் குறைவாக இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. தென்னிந்தியாவில் காபி மிகவும் பிரபலம். ஆனால் மக்கள் விரும்பும் காபி வகை மாறுபடும். ஃபில்டர் காபி விரும்புபவர்களை ஃப்ரெஷ்ஷாக கொதிக்கவைத்த காபியை குடிக்கச் செய்வது மிகவும் கடினம்,” என்று நிஷாந்த் விவரித்தார்.
மற்ற நாடுகளில் மக்கள் டீ அதிகம் விரும்பி எடுத்துக்கொள்கிறார்கள். இருப்பினும் பல பிரபல பிராண்டுகளின் வருகையால் இந்த போக்கு மாறி வருகிறது.
ரோஸ்டரி காபி நிறுவனம் காபி விற்பனையில் முக்கிய கவனம் செலுத்தினாலும் சாலட் மற்றும் இதர ஸ்நாக் வகைகளையும் வழங்கி வருகிறது. நிஷாந்த தனது மனைவி ஷீத்தல் சக்சேனா உடன் இணைந்து Colocal என்கிற மற்றொரு நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார்.
ஆன்லைன் செயல்பாடுகள்
மற்ற வணிகங்கள் போன்றே கொரோனா பெருந்தொற்று ரோஸ்டரி காபி ஹவுஸ் செயல்பாடுகளையும் பாதித்தது. பெரும்பாலும் ஆஃப்லைனில் செயல்பட்டு வந்த இந்நிறுவனம் வேறு வழியின்றி ஆன்லைனிற்கு மாறியது.
”பல வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் விற்பனை செய்ய கோரிக்கை வைத்தனர். ஆனால் கஃபே போன்ற அனுபவத்தை வழங்க விரும்பியதால் அதில் ஈடுபடவில்லை. ஆனால் கொரோனா அதை மாற்றிவிட்டது,” என்கிறார் நிஷாந்த்.
லாக்டவுன் சமயத்தில் நிஷாந்த் வலைதளத்தை உருவாக்கி அமேசான், 16 கிராம் காபி போன்ற சந்தைப்பகுதிகளில் செயல்பட ஆயத்தமானார்.
ஆன்லைன் வணிகம் எளிதாக இருந்துவிடவில்லை. சரியான நேரத்தில் டெலிவர் செய்வது, ஹைதராபாத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது டெலிவரி சில நாட்கள் வரை தடைபட்டது என ஏராளமான சிக்கல்களை சந்தித்துள்ளார்.
“மக்களின் மனநிலை மாறவேண்டும். காபி நமக்கு புத்துணர்ச்சி கொடுக்கக்கூடியது என்கிற கண்ணோட்டத்துடன் அதை அணுகவேண்டிய அவசியமில்லை. காபியை அப்படியே ரசிக்கலாமே?” என்கிறார் நிஷாந்த்.
பன்னாட்டு நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கின்றன. எனவே ஆன்லைன் விற்பனை அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
ஆன்லைன் மாடல் மட்டுமின்றி இந்தியாவின் ஒவ்வொரு மெட்ரோ பொலிடன் நகரங்களிலும் ஒரு ரோஸ்டரி காபி ஹவுஸ் நிறுவவேண்டும் என்பதே நிஷாந்தின் விருப்பம்.
ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கௌஷல் | தமிழில்: ஸ்ரீவித்யா