மனிதநேய தொழிலதிபராக விளங்கிய ‘காஃபி அரசர்’ சித்தார்த்தா மறைவு!
பிரபல வர்த்தக நிறுவனமான ’கஃபே காஃபி டே’ உரிமையாளரும், கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்,கிருஷ்ணா மருமகனுமான வி.ஜி.சித்தார்த்தா காணாமல் போய் அவர் மங்களூர் நேத்ராவதி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகி இருந்தது. அவரின் உடலை ஆற்றில் தேடும் பணி நடைப்பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சித்தார்த்தாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
காஃபி டே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தாவின் மறைவுச் செய்தி தொழில் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் நிலையில், வர்த்தக உலகில் அவரது பயணமும், அதைவிட ஒரு தொழிலதிபராக அவர் வெளிப்படுத்திய மனிதநேய பண்புகளும் நெகிழ வைக்கிறது.
சித்தார்த்தாவை நன்கறிந்தவர்கள் அவை கடின உழைப்பாளியாகவும், நல்ல மனிதராகவும் நினைவு கூர்ந்துள்ளனர். இளம் தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிப்பவராகவும் அவர் இருந்திருக்கிறார்.
இந்தியாவின் ’ஸ்டார்ப்கஸ்’ என வர்ணிக்கப்படும் ’கஃபே காஃபி டே’ நிறுவனரான வி.ஜே.சித்தார்த்தா நேற்று முன் தினம் திடிரென மாயமானார். மங்களூருவில் நேத்ராவதி ஆறு அருகே அவர் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், தேடுதல் வேட்டையில் அவரது சடலம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.
சித்தார்த்தாவின் மறைவு அவரது குடும்பத்தினரை மட்டும் அல்லாது தொழில் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்களும், வர்த்தக பிரமுகர்களும் அவரைப்பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
தொழில் நெருக்கடியின் காரணமாக, சித்தார்த்தா சோக முடிவை தேடிக்கொண்டதாக சொல்லப்பட்டாலும், ஒரு தொழிலதிபராக அவரது பயணம் போற்றக்கூடியதாகவே இருக்கிறது. புகழ் பெற்ற ஸ்டார் பக்ஸ் மையங்களுக்கு நிகரான காஃபி மையங்களை இந்தியாவில் நிறுவிய சாதனை தொழிலதிபரான சித்தார்த்தா, மனிதநேயம் மிக்கவராகவும் செயல்பட்டு அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.
காஃபி குடும்பம்
கர்நாடாகவின் மங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் வி.ஜி.சித்தார்த்தா. மால்நாட் என அழைக்கப்படும் இப்பகுதியில், நூற்றூண்டுக்கும் மேலாக காஃபி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். துவக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த சித்தார்த்தா, ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பியதாகவும், எனினும் 1984ல் மங்களூரு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற பிறகு, மும்பையில் முதலீட்டு வங்கியில் பணியாற்றியதாகவும் பிடிஐ செய்தி தெரிவிக்கிறது. அதன் பிறகு அவர், பெங்களூருவில் சொந்தமாக முதலீட்டு நிறுவனத்தைத் துவக்கினார்.
நிறுவனத்தில் கிடைத்த லாபத்தை, சிக்மங்களூரு பகுதியில் காபி எஸ்டேட்டில் முதலீடு செய்து வந்தார். இந்நிலையில், தனது குடும்பத் தொழிலான காபி தொழிலில் ஆர்வம் உண்டாகி, 1993ல் ’அமால்கமேட்டட் பீன் கம்பெனி’ எனும் நிறுவனத்தை துவக்கி வெற்றிகரமாக நடத்தினார். இதன் விற்றுமுதல் 6 கோடி என்பதில் இருந்து, சில ஆயிரம் கோடியாக வளர்ந்தது.
Cafe Coffee Day உதயம் ஆன கதை
காபி வர்த்தகத்தில் வெற்றியை சுவைத்த சித்தார்த்தா, ஜெர்மனியின் சங்கிலித்தொடர் காபி மைய நிறுவன உரிமையாளர்களுடனான உரையாடலால் ஊக்கம் பெற்று, இந்தியாவில் சங்கிலித்தொடர் காபி மையங்களை துவக்க தீர்மானித்தார். இதன் பயனாக உண்டானது தான் காஃபி டே மையங்கள்.
1994 ல் பெங்களூருவில், ஒரு கோப்பை காபியில் நிறைய நிகழும் எனும் கோஷத்துடன் அவர் முதல் காஃபி டே மையத்தை துவக்கினார்.
பொதுவாக தேநீர் பிரியர்கள் நிறைந்த தேசமான இந்தியாவில் அவர், சிறந்த உள் அலங்கார அமைப்பைக் கொண்ட நேர்த்தியான காஃபி டே மையங்களை வளர்த்தெடுத்தார்.
அடுத்து வந்த ஆண்டுகளில் மேலும் பல நகரங்களில் கிளைகள் திறக்கப்பட்டு, நாடு முழுவதும் அறியப்பட்ட பிராண்டாக கஃபே காஃபி டே வளர்ந்தது. இந்தியா மற்றும் அல்லாமல் வெளிநாடுகளிலும் காஃபி டே மையங்களை அமைத்தார்.
2015ல் இந்நிறுவனம் பங்குகளை வெளியிட்டது. அதன் பிறகு அவர் வேறு வர்த்தகங்களுக்கும் விரிவாக்கம் செய்து கொண்டார். இதனிடையே தொழில்நுட்ப நிறுவனமான மைண்ட்டிரி நிறுவன துவக்கத்திலும் முக்கியப் பங்காற்றினார்.
மாபெரும் வர்த்தக சாம்ப்ராஜ்யத்தை உருவாக்கினாலும், அவர் தொழில் நெருக்கடி மற்றும் கடன் சிக்கலால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மறைவதற்கு முன் எழுதிய கடிதத்தில் அவர் தனது தொழில் மற்றும் கடன் நெருக்கடி பற்றி உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தில் அவர், ’ஒரு தொழிலதிபராக தோல்வி அடைந்துவிட்டதாக’ குறிப்பிட்டிருந்தாலும், வர்த்தக உலகில் அவர் ஊக்கம் அளிக்கும் நபராகவே போற்றப்படுகிறார். மேலும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியவராகவும் அறியப்படுகிறார்.
வர்த்தகச் சாதனை
மால்நாட் பகுதியைச்சேர்ந்த வர்த்தகரான, ஜெயராம் கிமானே சித்தார்த்தா பற்றி நினைவுக்கூறுகையில்,
”நாங்கள் அவருக்கு தூரத்துச் சொந்தம். 1985 முதல் அவரை தெரியும். அவர் வர்த்தக உலகில் பெரிய அளவில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். இந்தப் பகுதியில் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளார்,” என்று அவரைப்பற்றி நெகிழ்ச்சியுடன் கூறியதாக நியூஸ் மினிட் கட்டுரை தெரிவிக்கிறது.
”அவர் ஒரு அருமையான மனிதர், நட்பானவர், எங்களிடம் மென்மையாக நடந்து கொண்டார்,” என்று இதேப் பகுதியைச் சேர்ந்த ஹலப்பா கவுடா நினைவு கூர்ந்துள்ளார்.
”அவரைப்போல யாரும் கனவு கண்டதில்லை. காபி அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்த காலத்தில், காபியை வைத்து ஒரு பிராண்டை உருவாக்க அவர் முற்பட்டார்,” என்று உள்ளூர் வர்த்தகச் சபை தலைவர் அருண் கூறியுள்ளார்.
தி திக்ஷேக் பேக்டரியின் நிறுவனரான யஷ்வந்த் நாக்,
”எனக்கும், என்னைப்போன்ற தொழில் முனைவோருக்கும் அவர் ஊக்கம் அளித்தவர். அவர் இந்தியாவின் ஸ்டார்ப்க்சை உருவாக்க விரும்பினார், சாதித்தும் காட்டினார். ஸ்டார்ப்க்ஸே இப்போது இந்தியாவில் நுழைந்த நிலையில், அவர் இழப்பு ஈடானதாக இல்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மனித நேய சி.இ.ஓ
சித்தார்த்தாவின் வர்த்தக உலகச் சாதனைகள் ஒரு பக்கம் இருக்க, அவரது மனிதநேய பண்புகளை பிஸ்னஸ் ஸ்டாண்டர்டு கட்டுரை படம்பிடித்து காட்டியுள்ளது. சித்தார்த்தா, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மூத்த மகள் மாளவிகாவை திருமணம் செய்து கொண்டார். எனினும் இந்த உறவை அவர் வர்த்த நோக்கில் பயன்படுத்திக் கொண்டது இல்லை.
நிறுவன பிராண்டை முன்னிறுத்தும் போது, இந்தத் தொடர்பை குறிப்பிடுவதை தவிர்க்குமாறு அவர் விளம்பர குழுவிற்கு உத்தரவிடும் வழக்கம் கொண்டிருந்ததாக அந்த கட்டுரை தெரிவிக்கிறது.
அவர் கடினமாக உழைக்கும் தன்மை கொண்டவராகவும், அதே நேரத்தில் சிக்கன குணம் கொண்டவராகவும் இருந்திருக்கிறார். பல நேரங்களில் இரவில் ஓட்டலில் தங்கும் செலவை மிச்சமாக்க, காலை முதல் விமானத்தில் பறந்து, இரவு கடைசி விமானத்தில் திரும்பி வரும் பழக்கம் கொண்டிருந்தார். மேலும் வர்த்தக சந்திப்புகளை அவர் காஃபி டே மையங்களில் வைத்துக்கொள்வதை விரும்பியிருக்கிறார்.
‘நான் உருவாக்கியது குறித்து பெருமிதம் கொள்கிறேன்...” என்று அவர் கூறுவது வழக்கம்.
அவருடன் நெருங்கிப் பழகியவர்கள், அவரைப்போல கடின உழைப்பாளியை பார்க்க முடியாது என்று கூறுகின்றனர். மேலும் மனசாட்சி மிக்க மனிதர் அவர் என்றும், வாங்கிய கடனை கொடுக்கவில்லை என்றால் தூங்க முடியாமல் தவிப்பவர் என்றும் அவரை நினைவு கூர்ந்துள்ளனர்.
இரண்டு மகன்களுக்குத் தந்தையான சித்தார்த்தா குடும்ப நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்ளும் பாசமான மனிதராகவும் இருந்திருக்கிறார். தொழில் போட்டி மிக்க வர்த்தக உலகில் அவர் நல்ல மனிதர் சி.இ.ஓவாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மென்மையான மனம் கொண்டவராக அறியப்படும் சித்தார்த்தா, தொழில் நெருக்கடியால் சோக முடிவை தேடிக்கொண்டது வேதனை அளித்தாலும், வர்த்தக உலகின் அவர் என்றென்றும் ஊக்கமிக்க தொழில்முனைவோராக நினைவில் நிற்பார்.
கட்டுரையாளர்: சைபர்சிம்மன்