சொந்த நிலத்தில் ‘பறவைகள் சரணாலயம்’ அமைத்துள்ள கோவை இயற்கை விவசாயி!
கோயமுத்தூரைச் சேர்ந்த இயற்கை விவசாயியான முத்து முருகன் தனது நிலத்தில் அரை ஏக்கர் நிலத்தை பறவைகள் உண்பதற்காக ஒதுக்கி சோளம் மற்றும் கம்பு பயிரிடுகிறார்.
பெரும்பாலான விவசாயிகளுக்கு பறவைகள் தொந்தரவாகவே தோன்றும். ஆனால் கோயமுத்தூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவருக்கு பறவைகள்தான் உற்ற நண்பர்கள்.
முத்து முருகனுக்கு 62 வயதாகிறது. இவர் கோவை தொண்டாமுத்தூர் கிராமத்தில் நான்கு ஏக்கர் நிலம் வைத்துள்ளார். இதில் அரை ஏக்கர் நிலத்தில் பிரத்யேகமாக பறவைகள் சாப்பிட சோளம் மற்றும் கம்பு பயிரிட்டுள்ளார்.
“இயற்கையுடன் ஒன்றியிருந்து காடுகளில் வளர்வது போன்றே உணவுப் பொருட்களை பயிரிடவேண்டும் என்று விரும்புகிறேன். காடுகளில் யாரும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதில்லை. காடுகளை பறவைகள் தங்கள் வசிப்பிடங்களாக மாற்றிக்கொள்வதை யாரும் தடுப்பதில்லை. பின் நாம் மட்டும் ஏன் அப்படிச் செய்யவேண்டும்? மேலும் ரசாயனங்கள் கொண்டு பூச்சிகளைக் கொல்வதால் பறவைகளின் உணவையும் நாம் பறித்து விடுகிறோம்,” என்று முத்து ‘தி பெட்டர் இந்தியா’ இடம் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் இயற்கை விவசாயியான முத்து முருகனுக்கு பறவைகள் என்றால் கொள்ளைப் பிரியம். இவர் தனது நிலத்தின் ஓரங்களில் விதைகள் தூவுவது வழக்கம். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒவ்வொரு கால் ஏக்கர் நிலத்திலும் சோளம் மற்றும் கம்பு பயிரிடத் தீர்மானித்தார்.
இவரது நிலத்திற்கு சென்றால் பறவைகள் சத்தம் ஓயாமல் கேட்டுக்கொண்டிருக்கின்றன.
“இந்த நிலம் பறவைகளின் வீடு போன்றது. நான் அவற்றை துரத்துவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் அறுவடையின் ஒரு பகுதியை பறவைகள் உண்பதற்காக விட்டு விடுவேன். இந்த ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதை உணர்ந்தேன். எனவே எந்தவித பயிர்களையும் பயிரிடவில்லை. பறவைகளுக்கு தானியங்களையும் மாடுகளுக்கான தீனியையும் மட்டுமே பயிரிட்டேன்,” என்று முத்து ‘தி நியூஸ் மினிட்’ இடம் தெரிவித்துள்ளார்.
பல விவசாயிகள் லாப நோக்குடன் மாற்று பயிர் வகைகளை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் கிராமத்திற்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. சில விவசாயிகள் பறவைகள் மீது கற்களை வீசி விரட்டுகின்றனர்.
இதற்கான தீர்வாக முத்து பறவைகள் வளர்க்க 3,000 ரூபாய் முதலீடு செய்துள்ளார். தற்போது கிளிகள், நீர்பறவைகள், மயில்கள், மரங்கொத்திகள், கிங்ஃபிஷர், புள்ளி ஆந்தைகள், குருவிகள், மைனாக்கள், ஆட்காட்டி பறவைகள், புறாக்கள், பார்ட்ரிட்ஜ்கள், தினைக்குருவிகள், முயல்கள், புழுக்கள், நத்தைகள், வண்டுகள், வெட்டுக்கிளிகள், தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் என எத்தனையோ அழகான உயிரினங்கள் இவரது நிலத்தில் வாழ்ந்ந்து வருகின்றன.
முத்து முருகன் தனது நிலத்தில் பறவைகள் சுதந்திரமாக சுற்றித்திரிந்து வாழ பிரத்யேகமாக இடம் ஒதுக்கிக் கொடுத்திருப்பதால் இந்தப் பகுதி பறவைகள் சரணாலயம் போன்றே காட்சியளிக்கின்றன.
பத்தாண்டுகளாக இவர் பறவைகளைக் கூர்ந்து கவனித்ததில் அவற்றிற்கு உணவு கிடைப்பதில்லை என்பதைப் புரிந்திகொண்டார். இதற்கு முக்கியக் காரணம் பலர் மாற்றுப் பயிர்களைத் தேடி சென்றதுதான் என்கிறார். இந்த காரணத்திற்காகவே இந்த இயற்கை விவசாயி கம்பு, சோளம் ஆகியவற்றைப் பயிரிட்டுள்ளார்.
“என்னுடைய நான்கு ஏக்கர் நிலத்தில் பல வகையான உயிரினங்கள் வசிக்கின்றன. ஒவ்வொருவரும் உயிரினங்கள் மீது அக்கறை காட்டினால் உலகம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இவ்வாறு அனைவரும் உயிரினங்களைப் பராமரிக்க ஊக்குவிக்கவேண்டும் என்று விரும்புகிறேன்,” என்று தெரிவிக்கிறார்.
மாற்று பயிர் வகைகளைப் பயன்படுத்தத் தொடங்கியதால் பறவைகள் அழிந்து விடுகின்றன. இதன் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்கிறார்.
“காடுகள் குறைய நாம்தான் காரணம். புவி வெப்பமயமாவதில் கார்பன் வெளியேற்றம் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெட்ரோல், டீசல் பொன்றவற்றின் பயன்பாடே இதற்குக் காரணம். டிராக்டர் அறிமுகமானதும் உழவிற்கு மாடுகள் பயன்படுத்த மறந்துவிட்டோம். இதனால் அவை காணாமல் போயின. தற்போது அதை மீட்டெடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது,” என்றார் முத்து முருகன்.
அவர் மேலும் கூறும்போது, “ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் நாட்டு மாடுகளே இல்லாமல் போனது. தற்போது கிட்டத்தட்ட 50-60 மாடுகள் இங்கு உள்ளன. இதுவே சூழலை மேம்படுத்துவதற்கான அடிப்படை என்று கருதுகிறேன். ஏனெனில் மாடு இருந்தால் அதன் சானத்தைப் பயன்படுத்தமுடியும். அதில் ஏராளமான நுண்ணுயிரிகள் உள்ளன. அவை பல்கிப் பெருகுகின்றன. அவற்றை சாப்பிட பறவைகள் வருகின்றன.
இந்தப் பறவைகள் எத்தனையோ மரங்களின் விதைகளைக் கொண்டு சேர்க்கின்றன. எனவே சூழலை நாம் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே சூழல் நன்றாக இருக்கும்,” என்றார்.
“நாம் விவசாயத்தில் ஈடுபடும்போது மற்ற உயிரினங்களின் வாழ்க்கையில் தலையிடுகிறோம். நாம் இது நம்முடைய இடம் என்று சொந்தம் கொண்டாடுவதை அவை அறிவதில்லை. சொல்லப்போனால் அவற்றின் இடங்களை நாம் ஆக்கிரமித்துவிடுகிறோம் என்பதே உண்மை,” என்றார்.
இத்தனை ஆண்டுகளில் முத்து வளர்த்த விலங்குகளும் பறவைகளும் அவரிடம் நன்கு பரிச்சயமாகி உள்ளன. அவரைக் கண்டு அஞ்சி விலகிச் செல்வதில்லை. எனினும் மற்ற மனிதர்களைக் கண்டால் அவை வேறு மாதிரியாக நடந்துகொள்கின்றன.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உண்டு என்பதை வலியுறுத்தும் விதமாக,
“அனைத்தும் நமக்காக உருவாக்கப்பட்டது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அவற்றை பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் நமக்கு உண்டு,” என்று குறிப்பிடுகிறார் முத்து முருகன்.
படங்கள் உதவி: வருண் அழகர் | பெட்டர் இந்தியா