பறவைகளுக்கு தண்ணீர் வைக்க மண் பானைகளை இலவசமாக வழங்கும் கேரள முதியவர்!
கோடையில் பறவைகளின் தாகத்தைத் தணிக்க சுற்றுச்சூழல் பாதுகாவலர் மற்றும் எழுத்தாளரான ஸ்ரீமான் நாராயணன் இதுவரை 10,000 மண் பானைகளை அருகாமையில் உள்ள மக்களுக்கு இலவசமாக விநியோகித்துள்ளார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் மிகவும் அதிகமாக உள்ளது. மனிதர்களான நமக்கு வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அடிப்படைத் தேவையான இருப்பிடமும் சுத்தமான குடிநீரும் கிடைக்கிறது. ஆனால் கடுமையான வெயிலில் சுற்றித்திரியும் பறவைகள் மற்றும் விலங்குகளின் நிலையை கற்பனை செய்து பாருங்கள்.
கேரளாவின் எர்னாகுளத்தில் உள்ள முப்பத்தாடம் பகுதியில் வசிக்கும் 70 வயது ஸ்ரீமான் நாராயணன் இது குறித்து சிந்தித்தார். கோடையில் இருந்து பறவைகளைப் பாதுகாக்கவேண்டும் என்பதே இவருடைய குறிக்கோள். சுற்றுச்சூழல் பாதுகாவலர் மற்றும் எழுத்தாளரான நாராயணன் அவரது பகுதியைச் சுற்றியுள்ளவர்கள் பறவைகளுக்கு தண்ணீர் வழங்க உதவும் வகையில் 10,000 மண் பானைகளை விநியோகித்துள்ளார்.
இவர் 2018-ம் ஆண்டு ’உயிர்காக்கும் தண்ணீருக்காக ஒரு மண்பானை’ என்கிற பெயரில் ஒரு திட்டத்தைத் துவங்கினார். இது வெற்றிகரமாக செயல்பட்டதை அடுத்து கோடைக்காலத்திலும் இந்தத் திட்டத்தைத் தொடரத் தீர்மானித்தார். கொச்சி நகராட்சி நிறுவனம் இந்தத் திட்டத்திற்கு விருதும் ஆதரவும் வழங்குகிறது.அவர் ’தி நியூஸ் மினிட்’ உடனான உரையாடலில் கூறும்போது,
”கோடைவெயில் மிகவும் மோசமாக இருப்பதால் பறவைகளுக்கான பெரும்பாலான நீர் ஆதாரங்கள் வற்றிவிட்டது. வெப்பநிலை அதிகமாக இருப்பதால் மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகளுக்கும் உடல் வறட்சி ஏற்படுகின்றன. ஒரு மண் பானையில் நீர் நிரப்பி வைத்தால் குறைந்தபட்சம் 100 பறவைகள் தண்ணீர் குடிக்கலாம்," என்றார்.
நாராயணன் மண் பானைகள் வாங்க இதுவரை தனது சொந்த சேமிப்பில் இருந்து கிட்டத்தட்ட 6 லட்ச ரூபாய் செலவழித்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் மேலும் 12,000 முதல் 15,000 மண் பானைகளை விநியோகிக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த முயற்சி குறித்து அவர் கூறுகையில்,
”நான் ஒரு அப்பாவாக என் மூன்று குழந்தைகளையும் பராமரித்து வருகிறேன். அவர்கள் இன்று நிம்மதியான வாழ்க்கை வாழ்கின்றனர். தற்போது நிலவி வரும் பிரச்சனைகளை ஒதுக்கிவிட்டு எதிர்காலத்திற்காக பணம் சேமித்து வைப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. என்னுடைய லாட்டரி வணிகத்தின் மூலமும் கிராமத்தில் நான் நடத்தி வரும் சிறிய உணவகத்தின் மூலமும் கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்திக் கொள்கிறேன்,” என்றார்.
நாராயணன் இதற்கு முன்பே தனது மாவட்டத்தில் 15 லட்ச ரூபாய் மதிப்பிலான மரக்கன்றுகளை இலவசமாக விநியோகித்துள்ளார். மரக்கன்றுகள் நடும் முயற்சி குறித்து அவர் Efforts For Good உடன் பகிர்ந்துகொள்கையில்,
”முப்பதாடத்தில் உள்ள வீடுகளில் 10,000-க்கும் அதிகமான மா மற்றும் பலா மரங்களை நடும் பணிகளை நான் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டுள்ளேன். மூன்று நபர்கள் அடங்கிய என்னுடைய குழுவுடன் ஒவ்வொரு குடும்பத்தையும் சந்தித்து அவர்களது வீட்டில் பறவைகளும் குரங்குகளும் பசியாறும் வகையில் பழவகை மரங்களை நடுமாறு எடுத்துரைப்பேன்,” என்றார்.
கட்டுரை : THINK CHANGE INDIA