லாக்டவுனில் ரூ.4.5 லட்சம் வருமானம்: டெரகோட்டா நகைத் தொழிலில் கலக்கும் கோவை மாணவி!
கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீட்டில் ஹாயாக செல்போன் மற்றும் டிவியில் பலரும் பொழுதை போக்கிக் கொண்டிருக்க, டெரகோட்டா எனப்படும் களிமண்ணில் அலங்கார நகைகள் செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்து மற்றவர்களுக்கும் முன்னுதாரணம் ஆகியிருக்கிறார் ஸ்மிருதி.
கல்வியின் மூலக்காரணமே மாணவர்களுக்கு அவர்களுக்கு எதிர்காலம் பற்றிய தெளிவை, நம்பிக்கையை விதைப்பது தான். ஆனால் பள்ளி, கல்லூரிப் படிப்போடு கைத்தொழில் ஒன்றையும் கற்றுக் கொண்டால் நிச்சயம் எதிர்காலம் பற்றிய கவலை இல்லாமல் வாழ முடியும். இதற்கு நல்லதொரு உதாரணம் கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்மிருதி.
கொரோனா ஊரடங்கு சமயத்தில் பலரும், நேரமே போகவில்லை என டிவியிலும், செல்போனில் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த வேளையில், டெரகோட்டா எனப்படும் களிமண்ணில் அலங்கார நகைகள் செய்து, அவற்றை ஆன்லைனில் விற்று லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார் இவர்.
கோவை துடியலுார் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்மிருதி. பி.டெக்., பேஷன் டிசைனிங் மூன்றாம் ஆண்டு படித்து வரும் இவர், கைவினைப் பொருட்கள் செய்வதில் இருந்த ஆர்வம் காரணமாக ஒன்பதாம் வகுப்பு படித்த போது டெரகோட்டா நகைகள் செய்யக் கற்றுக் கொண்டுள்ளார். இரண்டு பயிற்சி வகுப்பில் தான் கற்றுக் கொண்டவற்றை வைத்து, அவற்றில் தன் கற்பனைத் திறனையும் கலந்து புதுப்புது டிசைன்களில் நகைகள் செய்யத் தொடங்கியுள்ளார்.
ஸ்மிருதியின் ஆர்வத்தை அவரது பெற்றோரும் ஊக்குவித்துள்ளனர். அவர் செய்த நகைகளை அவரது அக்கா கல்லூரிக்கு அணிந்து சென்றுள்ளார். அப்போது அவரது தோழிகள் அந்த நகைகளின் டிசைன்களைப் பற்றி ஆர்வமாக விசாரித்தது ஸ்மிருதிக்கு ஊக்குவிப்பாக அமைந்தது. எனவே தான் செய்யும் டெரகோட்டா நகைகளை விற்பனை செய்வது என முடிவு செய்தார்.
வீட்டின் அருகில் உள்ள சிறிய கடைகளில் தன் நகைகளை விற்பனைக்கு வைத்துள்ளார். கூடவே சமூகவலைதளங்களிலும் ஷிகா கிரியேசன்ஸ் என்ற பெயரில் புதிய பக்கங்களைத் தொடங்கி அதில் தான் செய்த நகைகளை அவர் புகைப்படங்களாகப் பதிவேற்றம் செய்யத் தொடங்கினார். ஸ்மிருதியின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவருக்கு ஆர்டர்கள் வரத் தொடங்கின.
எனவே, பள்ளிப் படிப்பு ஒரு புறம் சென்று கொண்டிருக்க, மறுபுறம் வளரும் தொழில் முனைவோராக மாறினார் ஸ்மிருதி. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது ஆன்லைன் வகுப்புகள் மூலம் தான் கற்றுக் கொண்ட டெரகோட்டோ நகைகள் செய்வதை மற்றவர்களுக்கும் கற்றுத்தர ஆரம்பித்துள்ளார்.
“பள்ளி சென்று வந்தபிறகு, வீட்டுப்பாடங்களை முடித்து விட்டு இரவு நேரங்களில் இரண்டு மணி நேரம் ஒதுக்கி டெரகோட்டா நகைகளைச் செய்வேன். அதோடு வார இறுதி விடுமுறை நாட்களை இதற்கென பயன்படுத்திக் கொள்வேன். இதனால் எனது பள்ளிப் படிப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது பேஷன் டெக்னாலஜி படித்து வருகிறேன். எந்தவித தனிப்பட்ட விளம்பரமும் இல்லாமல், ஏற்கனவே என்னிடம் நகைகள் வாங்கியவர்களின் வாய் வழி விளம்பரம் மூலமாகவே பல புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்தது எனக்கு ஊக்குவிப்பாக அமைந்தது,” என்கிறார் ஸ்மிருதி.
கோவை கொடீசியா வளாகத்தில் நடந்த கண்காட்சியில் தனது நகைகளைக் கொண்டு ஸ்டால் அமைத்துள்ளார் ஸ்மிருதி. அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் நகைகள் செய்வதில் ஆர்வம் அதிகமாகி, பெரிய கடைகளுக்கும் சப்ளை செய்யத் தொடங்கியுள்ளார்.
ஒன்பதாம் வகுப்பு மாணவியாக இருந்த போது பொழுதுபோக்காக டெரகோட்டா நகைகள் செய்ய ஆரம்பித்த ஸ்மிருதி, தற்போது தொழில்முனைவோராக உயர்ந்துள்ளார்.
நான் உருவாக்கிய கம்மலை முதன்முதலில் ரூ.70க்கு ஒருவர் வாங்கினார். அதுதான் டெரகோட்டா நகைகள் மூலம் நான் சம்பாதித்த முதல் பணம். அப்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இதனால் மேலும் ஆர்வம் அதிகமாகி, அதிக நகைகள் செய்யத் தொடங்கினேன்.
“மாதம் ரூ. 10 ஆயிரம் வரை டெரகோட்டா நகைகள் மூலம் சம்பாதித்து வருகிறேன். லாக்டவுன் அறிவிக்கப்பட்ட உடன் வீட்டில் இருக்க அதிக நேரம் கிடைத்தது. ஆரம்பத்தில் ஆன்லைன் வகுப்புகளும் இல்லாததால், அந்த மாதங்களை அதிக டெரகோட்டா நகைகள் செய்யப் பயன்படுத்திக் கொண்டேன். இதனால் ஒரு மாதத்திலேயே என்னால் நான்கரை லட்சம் ரூபாய் அளவிற்கு நகைகளை விற்க முடிந்தது.”
புதுப்புது ஆர்டர்கள் அப்போது நிறைய வரத் தொடங்கின. கொரோனா பிரச்சினையால் செய்த நகைகளை உடனடியாக யாருக்கும் அனுப்ப இயலவில்லை. ஆனாலும் கிடைத்த ஆர்டர்களை எல்லாம் செய்து கொடுத்தேன், என்கிறார் ஸ்மிருதி.
பிறகு ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பமாகி, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் கிடைத்த ஓய்வு நேரங்களில் டெரகோட்டா நகைகள் செய்வது, அதனை விற்பனை செய்வது போன்றவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு, டெரகோட்டா நகைகளில் எப்படியெல்லாம் புதுமைகளைப் புகுத்த முடியும் என சிந்தித்து, அதனை செயலில் கொண்டு வருவதே ஸ்மிருதியின் இந்த வெற்றிக்குக் காரணமாக உள்ளது. இதனாலேயே அவரது கற்பனையில் உருவான நகைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
“கெம்புக் கற்கள் பதித்த கலைநயம் மிக்க பாரம்பரிய நகைகளை நான் டெரகோட்டாவில் புதுமையாக செய்து வருகிறேன். இந்த யோசனைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. நான் உருவாக்கும் நகைகள் மட்டுமின்றி, சிலர் ஆடைகளை அனுப்பி அதில் உள்ள வண்ணத்தில் நகைகளை டிசைன் செய்து தரச் சொல்வார்கள்.
கல்லூரி மாணவிகள் மற்றும் அலுவலகம் செல்லுவோர் மட்டுமின்றி திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வோரும் பயன்படுத்தும் படியான நகைகளை டெரகோட்டாவில் செய்து வருகிறேன். அதனால் வித்தியாசமாக ஆபரணங்கள் அணிய விரும்புவர்கள் என்னிடம் விரும்பி வாங்கிச் செல்கின்றனர், என்கிறார் ஸ்மிருதி.
ரூ.20ல் இருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமான விலை கொண்ட நகைகள் வரை செய்து விற்பனைச் செய்து வருகிறார் ஸ்மிருதி. இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டிலும் ஸ்மிருதிக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர். இன்ஸ்டா பக்கத்தில் ஸ்மிருதி வெளியிடும் புகைப்படங்களைப் பார்த்து நகைகளை ஆர்டர் தருகிறார்கள்.
நகைகள் மட்டுமின்றி குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் பீரோக்களில் ஒட்டிக் கொள்வது போன்ற காந்தம் பொருத்திய பொம்மைகளையும் செய்கிறார் ஸ்மிருதி. இதில் என்ன புதுமை என்கிறீர்களா? இருக்கிறது.
வாடிக்கையாளர்கள் அனுப்பும் புகைப்படத்தை அப்படியே களிமண்ணில் பொம்மைகளாகச் செய்து காந்தம் பொருத்தி தருகிறார். தத்ரூபமாக ஆனால் பார்ப்பதற்கு கார்ட்டூன் கேரக்டர்கள் போல் இருப்பதால், ஸ்மிருதியின் இந்த புதுமையான முயற்சிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
“வழக்கமான நகைகளாக மட்டும் செய்து கொண்டிருக்காமல், டெரகோட்டாவிலும் ஏதாவது புதுமையை புகுத்த வேண்டும் என விரும்பினேன். அதன் தொடர்ச்சியாகத் தான் கெம்பு கற்கள் பதித்து பாரம்பரிய நகைகள் செய்யும் யோசனை உதித்தது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மணமகளுக்குத் தேவையான அனைத்து ஆபரணங்களையும் டெரகோட்டாவில் செய்து தருகிறேன்.
“டெரகோட்டாவை நகைகள் என்ற வட்டத்திற்குள் மட்டும் அடக்கி விடக்கூடாது என யோசித்த போது தான், பிரிட்ஜ் மேக்னட் செய்யும் யோசனை தோன்றியது. பிறந்தநாள், திருமணம் போன்றவற்றிற்கு அன்பளிப்பாக தர பலர் இதனை ஆர்டர் செய்கிறார்கள். ஒரு சிலர் புகைப்படங்களை அனுப்பி, அதனை தங்களுக்குப் பிடித்தமான மாதிரி பொம்மைகளாகச் செய்து தரச் சொல்கிறார்கள். வாடிக்கையாளர்களின் தேவை எதுவோ அப்படியே அதனைச் செய்து தருகிறேன்,” என்கிறார்.
தான் கற்றுக் கொண்ட இந்தக் கலையை மற்றவர்களுக்கும் கற்றுத் தருகிறார் ஸ்மிருதி. வயது வித்தியாசமின்றி இவரிடம் ஆர்வமாகப் பெண்கள் கற்றுக் கொள்கிறார்கள். 2019ம் ஆண்டு மாணவ தொழில்முனைவோர் என்ற பிரிவில் சுயசக்தி விருது பெற்றுள்ளார் ஸ்மிருதி, தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து, கிராமப்புற பெண்கள் 20 பேருக்கு, களிமண்ணில் நகைகள் செய்யும் பயிற்சியும் அளித்துள்ளார்.
'Shika creations' என இன்ஸ்டாவில் தேடினால், ஸ்மிருதியின் கலைப்படைப்புகள் கண்களைக் கவருகிறது. களிமண்ணில் இப்படியெல்லாம்கூட ஆபரணங்கள் செய்ய முடியுமா என ஆச்சர்யப்பட வைக்கிறார் ஸ்மிருதி. சில நகைகள் நிஜமாகவே இவை களிமண் தானா என வியப்பை ஏற்படுத்துகிறது. அந்தளவிற்கு நேர்த்தியாக உள்ளன ஸ்மிருதி உருவாக்கிய படைப்புகள்.
பெரும்பாலும் தன்னிடம் ஆர்டர் தரப்படும் நகைகளைத் தானே செய்து விடுகிறார் ஸ்மிருதி. தான் செய்த நகைகள் மட்டுமின்றி, தன்னிடம் கற்றுக் கொண்டவர்களின் நகைகளையும் விற்பனை செய்ய உதவுகிறார்.
“டெரகோட்டா நகைகள் செய்து பழக ஆரம்ப முதலீடு ரூ.3000 இருந்தாலே போதும். அதன் பிறகும் அவ்வளவாக செலவு இருக்காது. ஆனால் நாம் செய்யும் நகைகள் மக்களுக்குப் பிடித்து விட்டால் நிச்சயம் நிறைய வருமானம் ஈட்ட முடியும். எதிர்காலத்தில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பெண்களுக்கு, குறிப்பாக மணமகளுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் உள்ளது போன்ற பொட்டிக் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.”
ஆரம்பத்தில் மற்றவர்கள் முன் பேசுவதற்குக் கூட எனக்கு தயக்கமாக இருக்கும். அந்தளவிற்கு கூச்ச சுபாவமாக இருந்த என்னை மாற்றியது இந்த டெரகோட்டா நகைகள் தொழில் தான். இப்போது மார்க்கெட்டிங் செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளேன்.
”வருமானத்தோடு தன்னம்பிக்கையும் தந்துள்ளது இந்தத் தொழில். எதையுமே தள்ளிப் போடக்கூடாது. ஒரு செயலைச் செய்ய வேண்டும் என முடிவு செய்து விட்டால் அதனை அன்றே ஆரம்பித்துவிட வேண்டும். இதுதான் தொழில் தொடங்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நான் கூறும் அறிவுரை,” என்கிறார் ஸ்மிருதி.