'சுடுமண்ணில்' சூப்பர் நகைகள்; மாதம் 40 ஆயிரம் ஈட்டும் ஓபு உஷா!
திருமணத்திற்குப் பிறகு டெரகோட்டா நகைகள் உருவாக்குவதில் பயிற்சி எடுத்து விற்பனையைத் தொடங்கிய ஓபு உஷா, இந்திய பாரம்பரியத்தை வெளிநாடுகளில் கொண்டு சேர்க்க விரும்புகிறார்.
“நான் எவ்ளோ நேரமா வெயிட் பண்றேன், எப்பவுமே உன்னாலதான் லேட். இந்தப் பொண்ணுங்க ரெடியாக ஏன் தான் இவ்ளோ நேரம் எடுக்கறாங்களோ?’
நிச்சயம் இந்த வாக்கியத்தின் முதல் மூன்று வார்த்தைகளை படிக்க ஆரம்பித்ததும் நீங்களே வாக்கியத்தை நிரப்பியிருப்பீர்கள். பெண்கள் அனைவருமே அப்பா, அண்ணன், தம்பி, கணவன் போன்றோர் ஒரு முறையாவது இதைச் சொல்லிக் கேட்டிருப்பார்கள்.
ஏன் இப்படி? ஏனெனில் பெண்களுக்குத் தானே விதவிதமான ஆடைகளும் அணிகலன்களும் அணிந்து அசத்தும் பாக்கியம் கிடைத்துள்ளது.
அதிலும் குறிப்பாக பெண்களுக்கு நகை என்றால் கொள்ளைப் பிரியம். தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களைக் கொண்டு நகைகள் தயாரிக்கப்படுவதே வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் மனிதர்களின் படைப்பாற்றல் திறன் சாதாரண பொருட்களையும் கலைப்படைப்புகளாக மாற்றுக்கூடியதாயிற்றே?
அதன் பலன் பேப்பர் கொண்டு க்வில்லிங் நகைகள், நூல் கொண்டு சில்க் த்ரெட் நகைகள் என பலவகைகள் உருவாக்கப்பட்டன. அதேபோல் ‘சுடுமண்’ எனப்படும் ‘டெரகோட்டா’ கொண்டும் அழகான விதவிதமான நகைகள் உருவாக்கப்படுகின்றன.
இந்த டெரகோட்டா நகைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது, சருமத்தில் அலர்ஜி ஏற்படுத்தாது. இதில் நமக்கு விருப்பமான வண்ணங்களை சேர்க்கமுடியும். இப்படி பல பிளஸ் பாயிண்ட் உள்ளது.
கண்கவர் வடிவமைப்புத் தயாரானால் விரைவிலேயே பிரபலமாகி லாபம் ஈட்டலாம். ஆனால் நகைகள் தயாரித்து வணிக ரீதியாக செயல்பட முக்கிய மூலப்பொருளான சுடுமண் மட்டும் போதாது. படைப்பாற்றல் திறனும், பொறுமையும் முக்கியம்.
இதுபோன்ற அழகான நகைகளைப் பணம் கொடுத்து வாங்கி அணிந்துகொள்வோர் மத்தியில் வெகு சிலரே இதை வணிக வாய்ப்பாக மாற்றி பணம் ஈட்டுகின்றனர். அப்படிப்பட்ட சிலரில் ஒருவர்தான் ஒபு உஷா.
குடும்பப் பின்னணி
ஓபு உஷாவின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் சிந்தாமணியூர் கிராமம். இவரது அப்பா கைத்தறி நெசவாளர். வெவ்வேறு நிறங்களில், விதவிதமான டிசைன்களில் பட்டுப்புடவைகள் உருவாக்குகிறார். ஓபு உஷா சிறு வயதிலேயே அப்பாவின் நெசவுக் கலையைப் பார்த்து வளர்ந்ததால் இயற்கையாகவே கைவினைப் பொருட்களில் ஈடுபாடு ஏற்பட்டது.
ஆனால் இவரது குடும்பத்தினர் கைவினைப் பொருட்கள் உருவாக்குவது தொடர்பான வகுப்புகளுக்குச் சென்று முறையாக கற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. இருப்பினும் இவருக்கு கைவினைப் பொருட்கள் உருவாக்குவதில் ஆர்வம் அதிகம் இருந்ததால் அது தற்காலிகத் தடையாகவே இருந்தது.
பள்ளிப்படிப்பு முடித்து பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கும்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு செந்தில் என்பவருடன் திருமணம் நடந்தது. செந்தில் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர். திருமணம் என்பது அனைத்து பெண்களுக்குமே வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு சேர்க்கும். ஆனால் ஓபு உஷாவின் வாழ்க்கையில் திருமணம் முற்றிலுமாக புரட்டிப் போட்டு புதிய அவதாரத்தை எடுக்க வைத்துள்ளது.
தொடக்கப்புள்ளி
ஒருமுறை ஓபு உஷா கணவருடன் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு டெரகோட்டா ஜிமிக்கியைப் பார்த்துள்ளார்.
“டெரகோட்டா ஜிமிக்கியின் விலை 400 ரூபாயாக இருந்தது. விலையைப் பார்த்து அதிர்த்துபோனேன். அழகிய வேலைப்பாடுகளுடன் இருக்கும் இத்தகைய ஜிமிக்கி உருவாக்கும் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டால் வணிகமாக மாற்றலாம் என்று தோன்றியது,” என்றார் ஓபு உஷா.
பயிற்சியளிக்கும் இடம் பற்றி தெரிந்துகொள்வதில் நாட்கள் நகர்ந்தன. ஒரு வருட காத்திருப்பிற்குப் பின்னரே டெரகோட்டா நகை தயாரிப்பிற்கான பயிற்சி வகுப்பு குறித்து தெரிந்துகொண்டு சேர்ந்துள்ளார்.
ஆனால் இந்த வகுப்பில் குழந்தைகள் பயன்படுத்தும் க்ளே கொண்டே நகை தயாரிப்பு கற்றுக்கொடுக்கப்பட்டது. எவ்வளவோ மெனக்கெட்டு நகைகளை அழகாக வடிவமைத்தாலும் பார்ப்பதற்கு கடைகளில் விற்கப்படும் நகைகள் போல் வரவில்லை.
மூலப்பொருட்களுக்கான தேடல்...
கடைகளில் விற்பனை செய்யப்பட்டும் டெரகோட்டா நகைகளைப் போன்றே உருவாக்க, சரியான மூலப்பொருட்கள் தேவை என்பதை தெரிந்துகொண்டார். அடுத்து மூலப்பொருளுக்கான தேடல் வேட்டைத் தொடங்கியது. நீண்ட தேடலுக்குப் பின்னர் அதற்கான களிமண்ணைக் கண்டறிந்தார்.
“சரியான மண் வெச்சு செஞ்சாதான் நகைகள் பார்க்க அழகா வரும்,” என்றார் ஓபு உஷா.
இதைத் தயாரிப்பது அத்தனை சுலபமல்ல. சரியான நேரத்தில் அடுத்தடுத்த செயல்முறைகள் ஒன்றன்பின் ஒன்றாக மேற்கொள்ளப்படவேண்டும். சிறு தவறும் ஒட்டுமொத்த நகையின் அழகையும் குலைத்துவிடும்.
ஒரு நகையைத் தயாரிக்க 6 நாட்கள் ஆகும். நமக்குத் தேவையான டிசைன்ல அதை செதுக்கி முதலில் நிழலிலும் பின்னர் வெயிலிலும் உலர வைக்கவேண்டும். அதைத் தொடர்ந்து தீயில் சுடவேண்டும். பிறகு நமக்குத் தேவையான வண்ணங்களைத் தீட்டலாம்.
குடும்பத்தின் ஆதரவு
ஒருவர் தொழில் புரிந்து அதில் சிறப்பிக்க வணிக ரீதியான அம்சங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு, அல்லது அதைக்காட்டிலும் கூடுதலாக குடும்பத்தின் தரப்பில் கொடுக்கப்படும் ஆதரவும் தொழில்முனைவோர்களுக்கு முக்கியம். குறிப்பாக பெண்களுக்கு குடும்பத்தின் ஆதரவின்றி பணி வாழ்க்கையிலோ, தொழில் முயற்சியிலோ சிறப்பிப்பது கடினம்.
“என் புகுந்த வீட்டினர் உதவாமல் இருந்திருந்தால் என்னால் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்க முடியாது. குழந்தையை பார்த்துக்கறது, சமையல், வீட்டு வேலை எல்லாத்தையும் எங்க மாமியார் பார்த்துக்க, என் நாத்தனார் பயிற்சி நடக்கற இடம் பத்தியும் டெரகோட்டா நகைகள் சம்பந்தபட்ட தகவல்களையும் எனக்கு அப்பப்ப ஷேர் பண்ணுவாங்க. கணவரும், மாமனாரும் ரொம்ப சப்போர்டிவா இருக்காங்க,” என்று புகுந்த வீட்டினரின் ஒத்துழைப்பை மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார் ஓபு உஷா.
வாடிக்கையாளர்கள்
ஆரம்பத்தில் இவரின் டெரகோட்டா நகைகளை உறவினர்களும் நண்பர்களும் வாங்கிய பிறகு மற்றவர்களுக்கு விற்பனை செய்துள்ளார். இவரது கணவர் D Terracotta என்கிற ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கினார். Obu’s Creations என்கிற பெயரில் சில்க் த்ரெட் நகைகளும் விற்பனை செய்யத் தொடங்கினார். சமீபத்தில் www.nethrashoppie.com என்கிற வலைதளத்தை தொடங்கியுள்ளனர்.
இதன் மூலம் இவரது வணிகம் பலரை சென்றடைந்துள்ளது. பலர் டீலர்ஷிப் முறையில் செயல்பட ஓபு உஷாவைத் தொடர்பு கொண்டுள்ளனர். சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கர்நாடகா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆர்டர்கள் வருகின்றன. வெளிநாட்டுகளைச் சேர்ந்தவர்களும் ஆர்டர் செய்கின்றனர்.
தேவயாணி, ரக்ஷிகா, ஸ்டெஃப்பி போன்ற பல்வேறு சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு பிரத்யேகமாக நகைகள் உருவாக்கிக் கொடுத்து வருகிறார் ஓபு உஷா.
ஊழியர்கள் மற்றும் வருவாய்
தனியாக வணிக முயற்சியைத் தொடங்கிய ஓபு உஷா நல்ல வரவேற்பு கிடைத்ததும் நான்கு பெண்களைப் பணியமர்த்தினார். இவர்களுக்கு முறையாக பயிற்சி அளித்துள்ளார். ஆர்டர் அதிகரித்து வரும் நிலையில் தற்போது ஆறு பேர் பணிபுரிகின்றனர்.
ஆரம்பத்தில் 10,000 ரூபாய் முதலீடு செய்து வணிக முயற்சியைத் தொடங்கிய இவர் இன்று 35,000 முதல் 40,000 வரை மாத வருவாய் ஈட்டி வருகிறார்.
இதுதவிர டெரகோட்டா நகைகள் தயாரிப்பில் ஆர்வமுள்ள பெண்கள் இவரைத் தொடர்பு கொண்டால் அதில் பயிற்சியும் அளிக்கிறார்.
பாரம்பரியத்தை போற்றுவதே நோக்கம்
டெரகோட்டா நகைகள் புதிதாக அறிமுகமாகியிருப்பினும் சுடுமண் மிகவும் பழமையான கலை என சமீபத்திய கீழடி அகழ்வாய்வில் தெரிய வந்துள்ளது.
“நம் இந்திய பாரம்பரியத்தை வெளிநாடுகளில் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதே என்னுடைய கனவு,” என்கிறார் ஓபு உஷா.
ஓபு உஷா India Business Awards 2018, International SPT Peace Award 2019, South India Women Achievers Awards 2019, Young Woman Entrepreneur Award 2019 ஆகிய பல விருதுகளை வென்றுள்ளார்.
எதிர்காலத் திட்டங்கள்
வீட்டின் மேல்பகுதியில் கடையை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருவதாக ஓபு உஷா தெரிவித்தார். இங்கு கைத்தறி பட்டு உள்ளிட்ட பாரம்பரிய கைவினைப் பொருட்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஏற்றுமதியிலும் கவனம் செலுத்த உள்ளார்.
புதிதாக ஒரு கலையைக் கற்றுக்கொண்டு அதன் நுணுக்கங்களையும் கற்றறிந்து வணிகமாக மாற்றி வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஓபு உஷா மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
கட்டுரையாளர்: ஸ்ரீவித்யா