காடுகள் வளர்ப்பில் கலக்கும் கணிப்பொறி பொறியாளர்கள்...
கிராமங்களே இந்தியாவின் முதுகெலும்பு. அந்த கிராமங்களின் முதுகெலும்பு விவசாயம். இன்று கிராமங்களின் முதுகெலும்பு முறிக்கப்பட்டு கட்டிடங்கள் ஆக்கப்பட்டுள்ளன. காடுகள் அழிக்கப்பட்டு காலனிகள் உருவாக்கப்படுகின்றன. இதனால் மழை குறைந்து தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கப்பட்டு விரைவில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் கூட உள்ளது.
பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற காடுகள் வளர்ப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கில் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகள் அதில் பங்கேற்ற இரு கணிப்பொறி பொறியியல் மாணவர்களின் இதயத்தை தைத்தது. அனைத்து பிரச்னைகளுக்கும் மரம் வளர்ப்பது, காடுகளை உருவாக்குவது மட்டுமே தீர்வு என அவர்கள் இருவரும் அன்று முடிவு செய்தனர்.
ஆனால் தீடீரென பெருமளவில் காடுகளை உருவாக்குவது எப்படி என ஆய்வில் ஈடுபட்டனர். அதன் விளைவே ’குறுங்காடுகள்’ எனும் திட்டம். ராமச்சந்திரன் மற்றும் கார்வேந்தன் ஆகியோர்தான் இந்த விரைவாக வளரும் குறுங்காடுகள் திட்டத்தின் காரணகர்த்தா.
இது குறித்து அவரிகளிடம் கேட்டபோது,
“குறுங்காடுகள் என்பது ஜப்பானைச் சேர்ந்த தாவரவியலாளர் டாக்டர் அகிரா மியாவிக்கி அவர்களின் கண்டுபிடிப்பாகும். இத்திட்டத்தை, நமது இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், சுபாஸ் பல்லேக்கர் போன்றவர்களின் இயற்கை வேளாண்மை, 5 அடுக்கு விவசாயம், காடு வளர்ப்பு போன்ற பல்வேறு தாவரவியல் மற்றும் இயற்கை விஞ்ஞானிகளின் கருத்துகளோடு இணைத்து, இவர்களின் வழிமுறைகளை வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு குறுங்காடுகள் திட்டத்தைச் செயயல்படுத்தத் தொடங்கினோம்,” என விளக்கினார்கள்.
இதற்கு முதலில் ஆதரவளித்தது எங்களின் கல்லூரி நிர்வாகனத்தினர்தான். முதலில் எங்கள் கல்லூரியில் ஓர் சிறு பகுதியில் எங்களின் காடு வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்தி பெரும்வெற்றி பெற்றோம்.
இத்திட்டத்தின் மூலம் பண்ணை வீடுகள் மற்றும் கார்பரேட் நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த செலவில் சிறிய அளிவிலான காடுகளை அமைத்துக் கொடுத்து இயற்கையான சூழலில் அவர்கள் பணிபுரியும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம். மேலும்,
“இந்தகைய சிறிய காடுகளை நிறுவனங்களில் அமைப்பதன் மூலம் காற்று மாசு, ஓலி மாசு போன்ற பல்வேறு மாசுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். மேலும், வளாகத்தில் தூய்மையான காற்றை சுவாசிப்பதன் மூலம் ஆரோக்கியமான சூழல் நிலவுகிறது.
பொதுவாக நாம் செடி, மரம் நடும்போது கரையான் அரிக்காமல் தடுக்க வேதி மருந்துகளைப் பயன்படுத்தவேண்டும் அல்லது தொடர்ந்து நிறைய தண்ணீர் விடவேண்டும். இந்த செயல்களை நாம் செய்யாதபோதுதான் அந்த செடி, மரம் பட்டுவிடுகிறது. ஆனால் இவர்கள் சொல்லும் வழிமுறையைப் பின்பற்றி மரம் நட்டால், முதல் 3 வருடங்கள் மட்டுமே நாம் தண்ணீர் விட்டு பராமரித்தால்போதும். பின் அந்த மரமே தன்னை அந்த இயற்கைச் சூழலுக்கு தகுந்தாற்போல் மாற்றிக் கொண்டு தொடர்ந்து ஆண்டாண்டு காலத்துக்கு உயிர் வாழுமாம்.
ராமச்சந்திரன் மற்றும் கார்வேந்தனின் கல்லூரியில் பணிபுரிந்த சுவாமிநாதன்தான் தங்களுக்கு இப்பணிகளில் ஆசான் எனப் பெருமையோடு கூறும் இவர்கள் விவசாயத்தின் நுணுக்கங்களை அவரிடம்தான் கற்றுக் கொண்டுள்ளனர்.
முதலில் மண்ணின் தரத்தைப் பரிசோதித்தே, அம்மண்ணில் எந்த வகையான மரம் அல்லது செடியை நடவேண்டும் என முடிவு செய்வோம். எந்த நிலத்தில் மண்புழுக்கள் அதிகம் உள்ளனவோ, அதுவே செழிப்பான நிலமாகும்,” என்கிறார் ராமசந்திரன்.
குறிப்பாக மரம் நடுவதற்கு முன் இரு விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். அது மண்ணுக்கு மேலே உள்ளச் சூழல், மண்ணுக்கு கீழே உள்ளச் சூழல். மண்ணுக்கு மேலே சூரிய ஓளி, காற்றோட்டம். அதிகமான சூரியவெளிச்சம் செடிகளை கருக்கிவிடும். அதேபோல மரக்கன்றுகளை போதுமான இடைவெளி விட்டு காற்றோட்டமாக வளர்க்கவேண்டும். நெருக்கமாக நட்டால் அவை முழு வளர்ச்சி அடையாது.
இரண்டாவதாக மண்ணுக்குக் கீழே உள்ள மண்ணின் ஊட்டச்சத்துக்கள், அதில் உள்ள தாதுஉப்புகள் போன்றவை எந்தளவுக்கு உள்ளன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். பொதுவாக இலைதழைகள், காய்கனிக் கழிவுகள் மற்றும் மக்கும் பொருள்கள் போன்றவையே மிகச்சிறந்த உரமாக ஆர்கானிக் கார்பன் சத்துகளாக அந்த தாவரங்களுக்குக் கிடைத்து அவை செழித்து வளர வழிவகை செய்துவிடுகிறது.
நாங்கள் எப்போதுமே இரண்டு முதல் இரண்டரை அடி உயரமுள்ள மரக்கன்றுகளைத்தான் குறுங்காடுகள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்துகிறோம்.
முதலில் 4 அடிக்கு குழி தோண்டி அதில் 3 அடிக்கு ஆர்கானிக் கார்பன் சத்துக்களான மக்கும் பொருள்களை போட்டுவிடுவோம். பின் 1 அடிக்கு மாட்டுச்சாணம் போன்றவற்றை போட்டுவிட்டு, சரியான அளவில் தண்ணீர் விட்டு வளர்த்தால் 3 ஆண்டுகளில் மரம் அசுர வளர்ச்சி பெறும். அதற்குப் பிறகு நீங்கள் பராமரித்தாலும், பராமரிக்காவிட்டாலும், அந்த மரம் இயற்கையோடு இணைந்து வளரத் தொடங்கிவிடும் என்கின்றனர்.
எதற்காக இரண்டரை அடி வரை வளர்ந்த மரக்கன்றுகளை தேர்ந்தெடுக்கிறீர்கள். சிறு செடிகளைப் பயன்படுத்தக்கூடாதா |என்ற நமது கேள்விக்கு, சிறு மரக்கன்றுகள் புதிய சூழலில் தங்களை நிலைப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் விரைவில் அழிந்துவிடுகின்றன, என்றனர்.
வேகமாக விரைவில் காடுகளை உருவாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் 4 அல்லது 5 அடி வளர்ந்த மரக்கன்றுகளை நட்டால் 100க்கு 40 சதவீதம் மரங்கள் அழிந்து விடுகின்றன. எனவே, இரண்டரை அடி என்பதே சரியான அளவாகும் என்கின்றனர்.
குறுங்காடுகள் உருவாக்கத்தில் நாங்கள் 5 அடுக்கு முறையை கடைப்பிடித்து வருகிறோம். காடுகள் உருவாக்கத்துக்கான இட அளவு, அங்குள்ள மண்ணின் தன்மை, தண்ணீர் வசதி போன்றவற்றை கவனத்தில் கொண்டே செயல்படுகிறோம்.
முதல் அடுக்கில் கேன்பீ ட்ரீஸ் என்றழைக்கப்படும் பிரம்மாண்டமாக வளரும் ஆல மரம், அரச மரம் போன்றவற்றை நட்டு வளர்க்கலாம். இரண்டாவது அடுக்கில் முருங்கை, வேம்பு போன்றவற்றையும், மூன்றாவது அடுக்கில் பவளமல்லி போன்ற புஸ்டியான செடிகளையும், நான்காவது அடுக்கில் ரோஜா, செம்பருத்தி போன்ற செடிகளையும், ஐந்தாவது அடுக்கில் வெத்தலை, பூசணி போன்ற கொடி வகைகளையும் நட்டு வைத்து குறுங்காடுகளை உருவாக்கலாம்.
இதில், காடு வளர்ப்பு என்ற சமுதாய சிந்தனையோடு, வளர்ப்பவருக்கு வருமானம் வரும் வகையிலான மரம், செடி, கொடிகளையும் வளர்த்துப் பயன்பெறலாம் என்கின்றனர்.
எவ்வித லாப நோக்கமும் இல்லாமல் காடு வளர்ப்பை மட்டுமே குறிக்கோளாக செயல்படும் இவர்கள் இருவரும் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும் பல நல்ல வழிமுறைகளைக் கூறுகின்றனர்.
ஓர் தென்னை தோப்பில் 1 ஏக்கரில் 80 தென்னைகள் நடப்படுகின்றன. இவை வளர்ந்து ஆண்டுக்கு 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை வருமானம் அளிக்கும். அதே நேரத்தில்80 தென்னைகளை நடுவதற்குப் பதிலாக 50 தென்னைகளை மட்டுமே நடவேண்டும். எஞ்சிய இடத்தில் வாழை, கொய்யா, சப்போட்டா, மிளகு போன்றவற்றைப் பயிரிட்டால் விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் ஏதாவது ஓர் பயிரின் மூலம் தொடர்ந்து வருமானம் கிடைத்துக் கொண்டே இருக்கும் என்பதே எங்களின் வழிமுறையாகும்.
மேலும், எந்த மரத்தின் அருகே எந்த மரத்தை நடவேண்டும். எந்த மரத்தை நடக்கூடாது என்பதையும் தெரிந்துவைத்துக் கொள்ளவேண்டும். குறிப்பாக மரங்கள் ஓரளவுக்கு வளர்ந்து பலன் கொடுக்கத் தொடங்கியவுடன் அடிக்கடி சென்று அவற்றைத் தொந்தரவு செய்யக்கூடாது, என்று அறிவுரை தருகின்றனர்.
உதாரணமாக ஓர் பப்பாளி மரத்தில் 10 பழங்கள் கனிந்திருந்தால், நமது தேவைக்கு 3 பழங்களை மட்டும் பறித்துக் கொண்டு எஞ்சியவற்றை அப்படியே மரத்திலேயே விட்டுவிடவேண்டும். அப்போதுதான், அவற்றை வந்து உண்ணும் பறவைகள், அவை வலசை போகும் பகுதிகளில் எச்சங்களாக்கி காடுகளின் பெருக்கத்துக்கு அவை தம் பங்குக்கு பணியாற்றும் என்கின்றனர் இந்த காடுகளின் கா(த)வலர்கள்.
எவ்வித லாப நோக்கமும் இன்றி நாட்டை பசுமையாக்குவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் இவர்களுக்கு இவர்களின் குறுங்காடுகள் திட்டத்தைச் செயல்படுத்த அண்டை மாநிலங்களில் இருந்தெல்லாம் அழைப்பு வந்துள்ளது. ஆனாலும் தமிழக அரசின் உதவியோடு ஓவ்வொரு ஆண்டும் 1 லட்சம் ஏக்கர்களை காடுகளாக்கவேண்டும் என்பதே எங்களின் லட்சியம் என்கின்றனர் கோரஸாக.
இவர்களின் லட்சியம் மட்டும் ஈடேறினால் தமிழகம் பசுமையாக மாறி, மழை வளம் மிகுந்து, விவசாயம் சுபீட்சம் பெறும். இவை எல்லாம் நடைபெறவேண்டும் என்பதே அனைவரின் அவாவாகும்.
தொடர்புக்கு: 8754303296/ 8056714520