கம்ப்யூட்டர் பெண்கள் 23 - முன்னோடி பிரவுசரை உருவாக்கிய ‘நிக்கோலா பெல்லோ’
இணையம் பொது பயன்பாட்டிற்கு வந்ததில் ’வெப்’ எனப்படும் ’வலை’யின் பங்கு முக்கியமானது எனில், வலையை எளிதாக அணுக வழி செய்த சாதனையாளர்களில் ஒருவராக நிக்கோலா பெல்லோ (Nicola Pellow ) கருதப்படுகிறார்.
கம்ப்யூட்டர் வளர்ச்சிலும், பின்னர் கம்ப்யூட்டர்களின் வலைப்பின்னலாக உருவான இணையத்தின் வளர்ச்சியிலும் தாக்கம் செலுத்திய சாதனைப் பெண்கள் வரிசையில் நிச்சயம் நிக்கோலா பெல்லோவை (Nicola Pellow) அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்.
இணையம் வலையாக விரியத்துவங்கியதில் Nicola Pellow முக்கியப் பங்காற்றியவர் என்பது மட்டும் அல்ல காரணம், பெரும்பாலான பெண் சாதனையாளர்களுக்கு நிகழ்வது போலவே, அவரைப்பற்றிய வரலாற்று பதிவுகளும் மிக சொற்பமாக இருப்பதும் இன்னொரு காரணம்.
கம்ப்யூட்டர் வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு மறைக்கப்பட்டத்தையும், மறக்கப்பட்டதையும் பல இடங்களில் பார்க்கலாம். ஆனால், சமகாலத்து சாதனையாளர்களில் ஒருவரான பெல்லோவுக்கும் இவ்வாறு நிகழ்ந்திருப்பது தான் புரியாத புதிர்.
வலை மூலம்
நிக்கோலா பெல்லோ வைய விரிவு வலையை உருவாக்கிய டிம் பெர்னர்ஸ் லீயின் மூலக்குழுவில் உறுப்பினராக இருந்தவர் என்பதோடு, அப்போது ஆய்வு மாணவியாக இருந்தவர் வலையின் இரண்டாவது பிரவுசரை உருவாக்கியவர். பெல்லோ உருவாக்கிய லைன் மோடு பிரவுசர் (Line Mode Browser) பிரவுசர் புகைப்படங்கள், வரைகலை போன்ற அம்சங்கள் எல்லாம் இல்லாத வெறும் எழுத்து வடிவிலான பிரவுசர் என்பதை மீறி, இணைய வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக திகழ்கிறது.
இணையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்ததில் வெப் என சுருக்கமாக குறிப்பிடப்படும் ’வேல்ர்டு வைடு வெப்’ (World Wide Web) முக்கியமானது எனில், இந்த வலை பரவலாக பயன்பாட்டிற்கு வருவதற்கான முக்கிய முன்னேற்றமாக பெல்லோ உருவாக்கிய லைன் மோடு பிரவுசர் அமைகிறது.
இருப்பினும், இணைய வரலாற்றில் பிரவுசர்கள் பற்றி பேசப்படும் போது, நெட்ஸ்கேப்பை உருவாக்கிய மார்க் ஆண்டர்சன் பற்றி பேசப்படும் அளவுக்கு பெல்லோ பேசப்படுவதில்லை. வரலாற்று நோக்கில் லைன் மோடு பிரவுசர் பற்றி குறிப்பிடப்படும் இடங்களில் கூட, அதன் உருவாக்கினரான பெல்லோர் அடிக்குறிப்பாகவே நின்று விடுகிறார்.
வலை புதிர்
இணைப்புகளின் வலையாக விரியும் இணையத்தில், பெல்லோ பற்றிய முழுக்கட்டுரைக்கான இணைப்புகள் அதிகம் இல்லை என்பதை புரியாத புதிர் என்றே சொல்ல வேண்டும். அங்கும் இங்குமாக கிடைக்கும் தகவல்கள் மூலம் பெல்லோ ஆங்கிலேயா கணிதவியலாளர் மற்றும் தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானி, ஸ்விட்சர்லாந்தில் உள்ள செர்ன் (CERN) ஆய்வகத்தில் வலையை உருவாக்கிய டிம் பெர்னர்ஸ் லீ (Tim Berners-Lee) குழுவில் பணியாற்றியவர் என்பது போன்ற விவரங்களை மட்டுமே அறிய முடிகிறது.
வலையின் முதல் பிரவுசரை டிம் பெர்னர்ஸ் லீயே உருவாக்கிய நிலையில், அதன் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக அமைந்த இரண்டாவது பிரவுசரான லைன் மோடு பிரவுசரை பெல்லோ உருவாக்கிய விதம், இதற்கான ஊக்கம், அவரது தொழில்நுட்ப தொலைநோக்கு போன்றவற்றை அறியக்கூடிய தகவல்கள் சொற்பமாகவே இருக்கிறது. அதைவிட முக்கியமாக, பிரவுசர் உருவாக்கத்திற்கு பிறகு பெல்லோவின் வாழ்க்கை பற்றியும் அதிக தகவல்கள் இல்லை.
பெல்லோ தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாததும் ஒரு காரணமாக இருக்கலாம். அவர் உருவாக்கிய பிரவுசரை மீட்டுருவாக்கம் செய்யும் வகையிலான இணையதளம் இருக்கிறது எனும் போது, பெல்லோவுக்கு என்று தனியே ஒரு இணையதளம் கூட இல்லை. சமூக ஊடகங்களிலும் அவரது சுவடு இல்லை.
”கெவின் பிளாக் எனும் மென்பொருள் ஆய்வாளர் பெல்லோ பற்றிய சுவடுகள் இல்லாதது குறித்து வேதனைப்பட்டிருக்கிறார். வலைக்கான முக்கியப் பங்களிப்பான அனைத்து மேடைகளுக்குமான முதல் பிரவுசரை நிக்கோலா பெல்லோ உருவாக்கினார். எனினும், வரலாற்றில் இருந்தும் இணையத்தில் இருந்தும் அவர் காணாமல் போய்விட்டார்,” என்று குறிப்பிட்டு மேலதிக விவரங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் கேட்டிருந்தார்.
ஆய்வு நோக்கில் அவர் முன்வைத்த இந்த கோரிக்கைக்கு எந்த பலன் கிடைத்ததாகவும் தெரியவில்லை.
நெட்ஸ்கேப்பிற்கும், எக்ஸ்பிளோரருக்கும் இடையே வெடித்த பிரவுசர் யுத்தம் பற்றி எல்லாம் எண்ணற்ற பதிவுகள் இருக்கும் நிலையில், முதல் பொது பயன்பாடு பிரவுசரை உருவாக்கிய பெல்லோ எனும் இணைய சாதனையாளர் பற்றிய முழுமையான சித்திரத்தை அறிய முடியாதததை என்னவென்று சொல்வது.
வலை முன்னோடி
பதிவுகள் அதிகம் இல்லை என்றாலும் கூட, பெல்லோ பற்றி அறிமுகம் செய்து கொள்வது அவசியம். ஏனெனில், வலையின் பிரவுசர் முன்னோடிகளில் பெல்லோ ஒருவராகத் திகழ்கிறார்.
பெல்லோவை அறிமுகம் செய்து கொள்வதற்கு முன், இணைய வளர்ச்சியில் வலையின் தோற்றத்தை சுருக்கமாக நினைவில் கொள்வது அவசியம்.
இணையம் மற்றும் வலை ஆகிய இரண்டு சொற்களும் ஒரே பொருள் தரும் வகையில் மாறி மாறி பயன்படுத்தப்பட்டாலும் இரண்டும் ஒன்றல்ல. இணையம் என்பது கம்ப்யூட்டர்களின் வலைப்பின்னலை குறிக்கிறது. வலை எனப்படும் வைய விரிவு வகை அந்த மாபெரும் கம்ப்யூட்டர்கள் வலைப்பின்னல் மீது உருவாக்கப்பட்டது.
இணையம் இல்லாமல் வலை இல்லை, ஆனால் வலை இல்லாமல் இணையம் உண்டு.
உண்மையில், 1991ல் வலை அறிமுகமாவதற்கு முன், இணையம் என்பது பெரும்பாலும் ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், தொழில்நுட்ப திறன் பெற்றவர்களால் மட்டுமே பயன்படுத்தப்படும் வலைப்பின்னலாக இருந்தது. வலையின் வருகையே, இணையத்தை பொதுமக்களின் எளிதான பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது.
இணையம் மீது உருவாக்கப்பட்ட மூல செயலி என வர்ணிக்கப்படும் வலையை டிம் பெர்னர்ஸ் லீ, செர்ன் ஆய்வுக்கூடத்தில் இருந்த போது உருவாக்கினார். இணையம் எனும் வலைப்பின்னல் வசதியை கொண்டு ஆய்வாளர்கள் தகவல் பகிர்வை எளிதாக்குவதற்கான வழியாக அவர் வலையை அறிமுகம் செய்தார்.
உலாவிகளின் கதை
இணையத்தில் தகவல்களை பிரவுசர் எனப்படும் உலாவி வாயிலாக அணுக வழி செய்வதே வலைக்கான விளக்கமாக சொல்லப்படுவதில் இருந்தே பிரவுசரின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம். பிரவுசர் மூலம் இணைய முகவரிகள் கொண்டு வலைத்தளங்களை அடையாளம் காண்கிறோம்.
வலை மூலம் இணையத்தை அணுகுவதற்கான முதல் பிரவுசரை வைய விரிவு வலையை உருவாக்கிய போது டிம் பெர்னர்ஸ் லீ உருவாக்கினார். துவக்கத்தில் இந்த பிரவுசரின் பெயரும் ’வேர்ல்டு வைடு வெப்’ ஆகவே இருந்தது. அதன் பிறகு நெக்ஸ்ட் என மாற்றப்பட்டது.
லீ உருவாக்கிய முதல் பிரவுசரில் என்ன பிரச்சனை என்றால், அது நெக்ஸ்ட் கம்ப்யூட்டர்களில் மட்டுமே செயல்படக்கூடியதாக இருந்தது. நெக்ஸ்ட் என்பது ஆப்பிள் நிறுவனர் ஸ்டீப் ஜாப்ஸ் அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறி தனி நிறுவனம் துவங்கிய போது உருவாக்கிய கம்ப்யூட்டர். இந்த கம்ப்யூட்டரை சர்வராக கொண்டே லீ, வலையை உருவாக்கியிருந்தார். எனவே, வலைக்கான பிரவுசரும் இந்த கம்ப்யூட்டரில் மட்டுமே இயங்கியது.
குறிப்பிட்ட வகை கம்ப்யூட்டர்களில் மட்டுமே இயங்கக் கூடிய வரம்பு ஆரம்ப கால மென்பொருள்கள் பலவற்றின் தன்மையாக இருந்தது. எனவே, அவற்றை மற்ற கம்ப்யூட்டர்களில் பயன்படுத்துவது சிக்கலாகவும் அமைந்தது. முதல் பிரவுசரும் இத்தகைய வரம்பு கொண்டிருந்தது அதன் வளர்ச்சிக்கு தடையாக அமையும் என லீ உணர்ந்திருந்தார். எனவே, எல்லா வகையான கம்ப்யூட்டர்களிலும் செயல்படக்கூடிய இன்னொரு பிரவுசரை உருவாக்க விரும்பினார்.
முன்னோடி உலாவி
தொழில்நுட்ப உலகில், இந்த வகை மென்பொருள்கள் பல்வேறு மேடைகளுக்கு இடையே (cross-platform) என சொல்லப்படுகின்றன. இந்த வகை பிரவுசரே வலையை அனைவரும் பயன்படுத்தும் வகையில் மாற்றும் என லீ நம்பினார். இந்த பிரவுசரை உருவாக்கும் பொறுப்பை அவர் நிக்கோலா பெல்லோவிடம் ஒப்படைத்தார்.
கணித பட்ட மாணவியான பெல்லோ அந்த காலகட்டத்தில் தான் லீயின் குழுவில் இணைந்திருந்தார். கணித பாடம் தவிர அவருக்கு புரோகிராமிங் மொழியொலும் ஒரளவு இருந்தது. இந்நிலையில், சி மொழியில் புதிய பிரவுசரை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
அடுத்த சில மாதங்களில் பெல்லோ, லைன் மோடு பிரவுசரை உருவாக்கினார். இந்த பிரவுசரை நவீன பிரவுசர்களுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில், இது வரி வடிவில் மட்டுமே இருந்தது. இதில் புகைப்படங்கள், வரைகலை அம்சங்கள் ஆதரவு இல்லை. மேலும், புரோகிராம் செய்வதற்கு வடி வடிவில் கட்டளையிடுவது போலவே இதை இயக்க வேண்டியிருந்தது.
ஆனால், லைன் மோடு பிரவுசர் எல்லா வகை கம்ப்யூட்டர்களிலும் இயங்கியது. இதன் காரணமாக, இணையத்தை அணுக விரும்பும் எவரும் இந்த பிரவுசரை பயன்படுத்துவது சாத்தியமானது. இதுவே, நெக்ஸ்ட் கம்ப்யுட்டர் அமைப்பில் சிக்கியிருந்த வலையை மீட்டு பரவலான பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது.
இதன் பிறகு, அடுத்தடுத்து பிரவுசர்கள் உருவாக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக நெட்ஸ்கேப் பிரவுசரின் மூல வடிவமான மொசை பிரவுசர் அறிமுகமாகி இணையத்தின் வளர்ச்சிக்கு உதவின.
பின்னர், இணைய வளர்ச்சியில் பெரும் பாய்ச்சல் உண்டாகத் துவங்கியது என்றாலும், இதற்கான அடிப்படையாக பெல்லோவின் பிரவுசர் அமைகிறது. இந்த ஒரு காரணத்திற்காகவே பெல்லோ கொண்டாடப்பட வேண்டியவராகிறார்.