கம்ப்யூட்டர் பெண்கள் 6: உலகம் மறந்த 'எனியாக் பெண்கள்'
கம்ப்யூட்டருக்கு மென்பொருள் தேவை என இன்னமும் உணரப்படாத காலத்தில், கம்ப்யூட்டர் புரோகிராம்களை எழுதுவதற்கான வழிகாட்டுதலோ, புரோகிராமிங் மொழியோ உருவாக்கப்பட்டாத காலத்தில் பெண்கள் அதன் செயலாக்கத்திற்கான புரோகிராமை அமைத்துக்கொடுத்தனர்.
கம்ப்யூட்டர் வரலாற்றை திரும்பிப் பார்க்கும் போது எனியாக் கம்ப்யூட்டர் கம்பீரமாக வீற்றிருப்பதை பார்க்கலாம். கொஞ்சம் உற்று கவனித்தால் எனியாக் கம்ப்யூட்டர் தனக்குள் புன்னகைத்துக் கொண்டிருப்பதையும் உணரலாம்.
எனியாக் புன்னகைக்குக் காரணம், அதன் தோற்றத்தை கவனிக்கும் நாம் வரலாற்றில் அதன் முக்கியத்துவத்தை அறிந்திருக்கிறோமா? எனும் கேள்வியாக இருக்கலாம். ஏனெனில், நவீன கம்ப்யூட்டருடன் ஒப்பிடும் போது அதன் தோற்றம் பெரிதாக இருக்கிறதே தவிர, அதன் ஆற்றல் அற்ப சொற்பமானதாக தோன்றலாம். இந்த தோற்றப்பிழையை மீறி, கம்ப்யூட்டர் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கலாகவும், கம்ப்யூட்டர் வளர்ச்சிக்கான படிக்கல்லாகவும் எனியாக் அமைகிறது.
எனியாக்கிற்கும் முன்னோடி உண்டென்றாலும், எனியாக்கில் இருந்தே நவீன கம்ப்ட்டர்கள் துவங்குவதாகவும் கொள்ளலாம். மின்னணு எண்ணியல் ஒருங்கிணைப்பு மற்றும் கணிணி (Electronic Numerical Integrator and Computer) என்பதன் சுருக்கமான எனியாக் (ENIAC) தான் உலகின் முதல் மின்னணு, பொது பயன்பாடு மற்றும் நிரலாக்க கம்ப்யூட்டராகும்.
அது மட்டும் அல்ல, கம்ப்யூட்டர் முன்னோடிகளில் ஒருவரான ஆலன் டூரிங் முன்வைத்த கம்ப்யூட்டர் இலக்கணத்திற்கு உட்பட்டு அமைந்த முதல் கம்ப்யூட்டரும் எனியாக் தான். மேலும், எனியாக மறு நிரலாக்க தன்மையும் கொண்டது.
போர் கணக்கு
அடிப்படையில் இரண்டாம் உலகப்போரின் போது, குண்டுகளின் பாதையை கணக்கிடுவதற்காக உருவாக்கப்பட்டது என்றாலும், எனியாக் தனக்கு அளிக்கப்படும் புரோகிராம் (நிரல்) அடிப்படையில் எந்த செயலையும் நிறைவேற்றித்தரும் ஆற்றல் பெற்றதாக அமைந்திருந்தது. இதுவே பொதுபயன்பாடு கம்ப்யூட்டர் என குறிப்பிடப்படுகிறது.
டூரிங் சொன்ன கம்ப்யூட்டர் இலக்கணத்திற்கான அடிப்படையும் இது தான். இத்தனை பெருமைகளைக் கொண்டிருப்பதால் மட்டும் எனியாக் தனக்குள் புன்னகைத்துக் கொண்டிருக்கவில்லை: தன் பின்னே மறைந்திருக்கும் இன்னொரு மாபெரும் உண்மையையும் எத்தனை பேர் அறிந்திருக்குகின்றனர் என்று எண்ணத்தாலும் தான் எனியாக் புன்னகைத்துக் கொண்டிருக்கிறது.
எனியாக் உண்மை
எனியாக்கின் பின்னே இருக்கும் அந்த உண்மை, அதன் உருவாக்கத்தில் பங்களித்த பெண்கள் பற்றியது. ஆம், பொறியியல் அதிசயம் என வர்ணிக்கப்பட்ட எனியாக் கம்ப்யூட்டரை வடிவமைத்து நிர்மானித்தது ஆண் பொறியாளர்கள் மட்டும் அல்ல, அதன் மூளையான மென்பொருள் நிரலை உருவாக்கித்தந்தது பெண்கள்.
அதிலும் குறிப்பாக, கம்ப்யூட்டருக்கு மென்பொருள் தேவை என இன்னமும் உணரப்படாத காலத்தில், கம்ப்யூட்டர் புரோகிராம்களை எழுதுவதற்கான வழிகாட்டுதலோ, புரோகிராமிங் மொழியோ உருவாக்கப்பட்டாத காலத்தில் பெண்கள் அதன் செயலாக்கத்திற்கான புரோகிராமை அமைத்துக்கொடுத்தனர்.
எனியாக் உருவாக்கத்திலும், செயல்பாட்டிலும் பெண்கள் முக்கிய பங்காற்றியதை மீறி, எனியாக் கம்ப்யூட்டர் பற்றி பேசப்பட்ட போதெல்லாம் இந்த முன்னோடி பெண்களை யாருமே குறிப்பிடவில்லை என்பது தான் வரலாற்று சோகம். கம்ப்யூட்டர் வரலாற்றில் ஆரம்பம் முதல் பெண்கள் முக்கியப் பங்காற்றி வந்துள்ளனர் என்றாலும், அவர்கள் பங்களிப்பை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அலட்சியம் செய்யும் போக்கும் இயல்பாக இருந்ததால், எனியாக் பெண்களும் காலத்தால் மறக்கப்பட்டனர்.
நவீன கம்ப்யூட்டர் வருகைக்கு முன், சிக்கலான கணக்குகளை போட்டுத்தரும் பணியை செய்து கொடுத்தவர்கள் மனித கம்ப்யூட்டர் என அழைக்கப்பட்டதையும், மனித கம்ப்யூட்டர்கள் பெரும்பாலும் பெண்களாக இருந்ததையும் இங்கு நினைவில் கொள்வது நல்லது.
அறிவியல் மற்றும் ஆய்வு திட்டங்களுக்கு தேவைப்பட்ட சிக்கலான கணக்குகளை மணிக்கணக்கில் போட்டுத்தரும் திறனும், பொறுமையும் பெற்றிருந்ததோடு, ஆண்களை விட குறைந்த ஊதியத்தில் இந்த வேலையை செய்யக்கூடியவர்கள் என்பதாலும், பெண்கள் கம்ப்யூட்டர்களாக பணிக்கு அமர்த்தப்பட்டனர்.
சாதனை பெண்கள்
இந்த கம்ப்யூட்டர் பெண்கள் பங்கேற்ற ஆய்வுத் திட்டங்கள் பெரிதாக பேசப்பட்டனவேத்தவிர, அவர்கள் கண்டு கொள்ளப்படவில்லை. இதுவே எனியாக் பெண்களுக்கும் நிகழ்ந்தது. எனியாக்கிற்கான நிரலை உருவாக்கித்தந்த போதும், அதற்கு மூலக்காரணமாக அமைந்த ஆறு பெண்கள் அங்கீகரிக்கப்படவில்லை. எனியாக் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட போது, அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தி, எனியாக்கின் தொழில்நுட்ப ஆற்றலை கச்சிதமாக வர்ணித்திருந்ததேத்தவிர, இந்த திட்டத்தில் பங்காற்றிய பெண்கள் பற்றி எந்த குறிப்பையும் கொண்டிருக்கவில்லை.
ஆனால், இந்த வரலாற்று விடுபடலுக்கு செய்தியாளரை குறை சொல்வதற்கில்லை. எனியாக் நிர்வாகிகளும், விஞ்ஞானிகளுமே இந்த பெண்கள் பற்றி எந்த குறிப்பையும் அளிக்காத போது, செய்தி சேகரித்த இதழாளர், இந்த முதல் கம்ப்யூட்டரின் ஆற்றலை மட்டுமே பார்த்தனரே தவிர, அதன் பின் இருந்த பெண்களை அறியும் வாய்ப்பை பெற்றிருக்கவில்லை.
மேலும், இரண்டாம் உலகப்போரின் போது மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டம் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்து, பின்னர், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதாலும், அதன் பின்னணி விவரங்களை யாரும் அறிந்திருக்கவில்லை.
எனவே, எனியாக் கம்ப்யூட்டர் தொடர்பான எல்லா வரலாற்று பதிவுகளில் இருந்தும் பெண்கள் விடுபட்டே இருந்தனர். அப்படியே பெண்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், கூட அவர்களின் பங்களிப்பு உணரப்படாமல் இருந்தது. 1980 களில் இளம்பெண் ஒருவர் கம்ப்யூட்டர் துறையின் முன்னோடி பெண்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபடாமல் இருந்திருந்தால், இந்த வரலாற்று பிழை இன்று வரை தொடர்ந்திருக்கும்.
மீட்பர் வந்தார்
ஆனால், கேத்ரின் கிளின்மன் (Kathryn Kleiman) எனும் இளம் ஆய்வாளர் முயற்சியால் ’எனியாக் பெண்கள்’ உரிய வெளிச்சத்துடன் உலகின் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டனர். ஹார்வர்டு பட்டதாரியான கிளின்மன், 1986ல் கம்ப்யூட்டர் துறையில் பெண்களின் பங்களிப்பு தொடர்பான ஆய்வின் போது, எனியாக் கம்ப்யூட்டர் திட்டத்தில் பங்காற்றிய பெண் புரோகிராமர்கள் பற்றி அறிந்திருந்தார்.
அதன் பிறகு, 1996ல் எனியாக் கம்ப்யூட்டரின் பொன்விழா கொண்டாடப்பட்ட போது, அதில் பெண் புரோகிராமர்கள் எவ்வாறு கவுரவிக்கப்பட இருக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள விரும்பி விழா நிர்வாகிகளை கிளின்மன் தொடர்பு கொண்டார்.
புரோகிராம் புலிகள்
’எந்த புரோகிராமர்கள்?’ எனும் கேள்வியே தனது கேள்விக்கு பதிலாக வந்ததால் திகைத்துப்போன கிளின்மென், வரலாற்றில் அறியப்படாமல் இருக்கும் எனியாக் பெண் புரோகிராமர்கள் கவனம் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளத்துவங்கினார். (மேலும், எனியாக் கம்ப்யூட்டருடன் பெண் புரோகிராமர்கள் இருக்கும் புகைப்படத்தை காண்பித்து விசாரித்த போது கூட, அவர்கள் மாடல் அழகிகள் என பதில் அளிக்கப்பட்டது).
இதன் பயனாக எனியாக் பெண் புரோகிராமர்கள் குறித்த செய்திகளும், கட்டுரைகளும் வெளியாகத்துவங்கின. இந்த பெண்களின் சாதனைகளை எடுத்துச்சொல்லும் ’தி கம்ப்யூட்டர்ஸ்’ (“The Computers”) எனும் ஆவணப்படத்தையும் கிளின்மன் உருவாக்கியதோடு, எனியாக் புரோகிராமர்ஸ் (ENIAC Programmers) எனும் இணையதளம் வாயிலாகவும் அவர்கள் சாதனையை ஆவணப்படுத்தி வருகிறார்.
இனி, எனியாக் பெண்களின் சாதனைக்கு வருவோம்...
இரண்டாம் உலகப்போருக்கு மத்தியில், அமெரிக்க ராணுவம் ஏவுகனைகள் பாதையை கணக்கிட்டு கண்டறிவதற்கான தேவையை உணர்ந்தது. அந்த காலகட்டத்தில் இத்தகைய கணக்குகளை மனித கம்ப்யூட்டர்களே மேற்கொள்ளும் வழக்கம் இருந்ததால், இந்த பணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். கணிதப்புலிகளாக இருந்த பெண்கள், பெனிசில்வேனியாவில் அமைந்திருந்த ’பாலிஸ்டிக் ரிசர்ச் லேப்’ ஆய்வுக்கூடத்தில் இருந்த டிபரன்ஷிடல் இஞ்சின் எனும் கணக்கீட்டு இயந்திரம் மூலம் ஏவுகனை பாதைக்கான கணக்குகளை மேற்கொண்டனர்.
ஆனால், மனித முயற்சியால் சிக்கலான ஆயுத கணக்குகளை போடுவதற்கு அதிக நேரம் தேவைப்பட்ட நிலையில், ஜான் மவுச்லி (John Mauchly) எனும் பொறியாளர், பிரஸ்பர் எகெர்ட் (Presper Eckert) என்பவருடன் இணைந்து, இந்த பணிக்காக என்று பிரிம்மாண்டமான கணக்கிடும் இயந்திரத்தை உருவாக்கும் யோசனையை முன்வைத்தார். இந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு, நொடிப்பொழுதியில் சிக்கலான கணக்குகளை போட்டு விடை காணக்கூடிய புதிய இயந்திரத்தை உருவாக்கும் திட்டம் 1942ல் துவங்கி, 1945ல் முடிக்கப்பட்டது.
ஆரம்ப கம்ப்யூட்டர்
நாம் ஏற்கனவே பார்த்த எனியாக் தான் அந்த இயந்திரம். அந்த காலகட்டத்தில் உருவாக்க முயற்சிக்கப்பட்ட கம்ப்யூட்டர் இயந்திரங்களில் எனியாக் பெரும் பாய்ச்சலாக இருந்தாலும், நவீன கம்ப்யூட்டர்கள் போல அதில் நினைவுத்திறன் இருக்கவில்லை.
எனவே, இந்த கம்ப்யூட்டரை கணக்கு போட வைக்க, கைகளால் அதற்கான கணிதவியல் சமன்பாடுகளை உருவாக்கி அளிக்க வேண்டியிருந்தது. இந்தப் பணிக்கு பிரத்யேகமான ஆற்றல் கொண்டவர்கள் தேவைப்படவே, ஏற்கனவே பணியாற்றிக்கொண்டிருந்த கம்ப்யூட்டர் பெண்களில் இருந்து ஆறு இளம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பெட்டி ஹால்பர்டன், கேத்லீன் மெக்நல்டி, மர்லின் வெஸ்காப், ரூத் லிட்சர்மன், பிரான்சஸ் ஸ்பென்ஸ் மற்றும் ஜீன் ஜென்னிங்ஸ் (Frances “Betty” Holberton, Kathleen “Kay” McNulty, Marlyn Wescoff, Ruth Lichterman, Frances Spence, Jean Jennings) ஆகிய அந்த ஆறு பெண்கள் தான் பின்னர் வரலாற்றில் எனியாக் பெண்களாக அறியப்பட்டனர்.
இப்போதைய மொழியில் சொல்வதாக இருந்தால் எனியாக் கம்ப்யூட்டரை புரோகிராம் செய்வது இவர்களது வேலையாக இருந்தது. ஆனால், அப்போது புரோகிராம் செய்வது எனும் கருத்தாக்கமும் அறிமுகம் ஆகியிருக்கவில்லை. அதற்கான வழிகாட்டுதல்களும் இருக்கவில்லை. எனவே இந்த பெண்கள் எல்லாவற்றையும் தாங்களே சுயமாக உருவாக்கி கொள்ள வேண்டியிருந்தது.
30 டன் எடை
இந்த இடத்தில் எனியாக் கம்ப்யூட்டரின் கட்டுமானத்தை கொஞ்சம் நினைவில் கொள்வது அவசியம். 80 அடி நீளத்தில், 30 டன் எடை கொண்டிருந்த அந்த இயந்திரம், 18 ஆயிரம் வாக்குவம் டியூப்களையும், 70 ஆயிரம் ரெசிஸ்டர்கள், 10 ஆயிரம் கப்பாசிட்டர்கள் உள்ளிட்ட பாகங்களை கொண்டிருந்தது. இவை அனைத்தும், சிக்கலான முறையில் கேபில்களாலும், கம்பிகளாலும் இணைக்கப்பட்டிருந்தன.
இந்த கம்ப்யூட்டர் சிக்கலான கணக்குகளை போடும் ஆற்றல் கொண்டதாக அமைந்திருந்தாலும் அதற்கேற்ப அவற்றின் கேபில்களையும், கம்பிகளையும் மாற்றி அமைக்க வேண்டும். இவை கணிதவியல் சமன்பாடுகள் அடிப்படையில் அமைய வேண்டும். எனியாக் பெண்கள், ஏவுகனை பாதைக்கான கணக்குகளை அட்டவணையாக்கம் மூலம் சிறு சிறு கணக்கு பகுதிகளாக பிரித்து, அதற்கேற்ப கைகளால் இயந்திரத்தை செயல்படுத்தினார். இதன் பயனாக மணிக்கணக்கில் போட வேண்டிய கணக்குகளை எல்லாம் இந்த இயந்திரம் நொடிப்பொழுதில் போட்டுத்தந்தது.
பொது பயன்பாடு
இதனிடையே, உலகப்போர் முடிவுக்கு வந்துவிட்டதால், போரில் எனியாக் கம்ப்யூட்டருக்கு தேவை இருக்கவில்லை. ஆனால், எனியாக் கம்ப்யூட்டர் அந்த கால மற்ற கம்ப்யூட்டர்கள் போல குறிப்பிட்ட பணிக்காக என்று உருவாக்கப்படாமல், பொதுவான பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டிருந்ததால் அதன் அபிரிமிதமான கணக்கிடும் ஆற்றலை, வானிலை கணிப்பு போன்ற பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில் தான் எனியாக் கம்ப்யூட்டர் அதன் ரகசியம் நீங்கி பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. காட்சி விளக்கத்தின் போது அதன் பட்டன்களை அழுத்தினால் நொடியில் பெரும் கணக்குகளுக்கு விடை அளித்த அதன் ஆற்றல் செய்தியாளர்களை வியக்க வைத்தது.
எனியாக் காட்சி விளக்கம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு எனியாக் பெண்களே முக்கியக் காரணமாக இருந்தனர். பொறியாளர்கள் பட்டனை அழுத்தினால் அது இயங்கியதேத்தவிர அதன் பின்னே தேவையான கணிதவியல் சமன்பாடுகளை பெண் புரோகிராமர்களே மேற்கொண்டிருந்தனர்.
காட்சி விளக்கத்தின் முந்தைய இரவு கூட எனியாக் இயந்திரத்தில் ஏற்பட்டிருந்த ஒரு பழுதிற்கு அவர்கள் சரியான நேரத்தில் தீர்வு கண்டிருந்தனர். கணக்குகளை போடத்துவங்கினால், முடிக்க வேண்டிய இடத்தில் நிறுத்தாமல் இயந்திரம் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருப்பதாக அந்த பழுது அமைந்திருந்தது. இந்த பிரச்சனையுடன் தூங்கப்போயிருந்த புரோகிராமர் பெட்டி அதிகாலை 2 மணிக்கு எழுந்து வந்து, குறிப்பிட்ட ஒரு ஸ்விட்சை மாற்றி அமைத்து பிரச்சனைக்கு தீர்வு கண்டனர்.
சாதனை மகளிர்
எனியாக் இயந்திரத்தை பெட்டியும், சக புரோகிராமர்களும் அந்த அளவு அறிந்திருந்தனர். இயந்திரத்தின் 18 ஆயிரம் வாக்குவம் டியூப்களும் எங்கிருந்தன, எப்படி செயல்பட்டன என்பதை அறியும் அளவுக்கு அவர்களுக்கு இயந்திரம் பரிட்சியம் ஆகியிருந்தது. இயந்திர அமைப்பை விளக்கும் சிக்கலான வரைபடங்களை ஒப்பிட்டுப்பார்த்து அதன் செயல்பாடுகளை அவர்கள் மனக்கண்ணில் கொண்டு வந்திருந்தனர்.
இதன் பயனாகவே எனியாக்கை இயக்கும் சமன்பாடுகளை அவர்களால் உருவாக்க முடிந்தது.
உண்மையில் இயந்திரத்தின் பொறியியல் அமைப்பு போலவே, அதை இயக்க தேவைப்படும் ஆணைகளும் முக்கியம் என்பதை அந்த பெண்கள் உணர்த்தியிருந்தனர். அதுவரை வன்பொருள் மட்டுமே சார்ந்ததாக கருதப்பட்ட கம்ப்யூட்டர் இயந்திரத்தில் மென்பொருள் அமைப்பும் முக்கியமானது என்பதை முதல் முறையாக உணர்த்தியிருந்தனர்.
இதற்காகவே அவர்கள் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும் என்றாலும், எனியாக் அறிமுக நிகழ்வில், அதை உருவாக்கிய பொறியாளர்களே முன்னின்று விளக்கம் அளித்து அனைத்து பெருமையையும் ஏற்றுக்கொண்டனர். இந்த சாதனையின் பின் இருந்த பெண்களை ஒருவரும் குறிப்பிடவும் இல்லை, யாரும் அறியவும் இல்லை. எனினும், காலம் செய்த நியாயமாக, கேத்ரின் கிளின்மன் ஆய்வால் எனியாக் பெண்களின் சாதனை அங்கீகரீக்கப்பட்டு, முன்னோடி புரோகிராமர்களாக அறியப்படுகின்றனர்.
எனியாக் பெண்கள் மட்டும் அல்ல, அவர்களின் தொடர்சியாக கம்ப்யூட்டர் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய சாதனை பெண்களை தொடர்ந்து பார்க்கலாம்...