கம்ப்யூட்டர் பெண்கள்- 5 : கணித எண்களை வழிநடத்திய மனித கம்ப்யூட்டர்!
ஜெர்ட்ரூட் பிளான்க் மனித கம்ப்யூட்டர்களில் மிகவும் முக்கியமானவராகவும், கடைசியாக வருபவராகவும் கருதப்படுகிறார்.
கம்ப்யூட்டர் எனும் வார்த்தை கணக்கிடும் இயந்திரத்தை குறிக்கிறது. தமிழிலும் இந்த பொருளிலேயே கணிணி என அழைக்கப்படுகிறது. பெரும்பாலான மொழிகளில் கம்ப்யூட்டருக்கான சொல் கணக்கிடும் இயந்திரம் எனும் அடிப்படையிலேயே அமைகிறது.
கையடக்க கம்ப்யூட்டரோ, சூப்பர் கம்ப்யூட்டரோ அதன் ஆதார பணி கணக்கிடுவதாகவே அமைவதால், கம்ப்யூட்டர்களை கணக்கிடும் இயந்திரங்களாக கொள்வதே சரியானது. நவீன உலகில் கம்ப்யூட்டர் இல்லாத துறையை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது அளவுக்கு மனித வாழ்க்கையில் கம்ப்யூட்டர்கள் இரண்டர கலந்து விட்டன.
கம்ப்யூட்டர்கள் செயற்கை நுண்ணறிவுக்கும் அடிப்படையாக அமைந்து எதிர்காலத்திலும் இன்னும் அதிக தாக்கத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த நூற்றாண்டிற்கும் முன்னர் வரை, கம்ப்யூட்டர் என்பது மனித கணக்கிடும் இயந்திரங்களை குறிப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது ஆச்சர்யத்தை அளிக்கலாம்.
கம்யூட்டருக்கு முன்!
அதாவது ஆய்வுப் பணிகளுக்கும், இன்னும் பிற கணிதவியல் செயல்பாடுகளுக்கும் தேவையான நுட்பமான கணக்குகளை மேற்கொள்பவர்களாக மனிதர்களே பணிக்கு அமர்த்தப்பட்டனர். நாள் கணக்கில் பக்கம் பக்கமாக கணக்குகளை போட்டு, அவற்றின் விடைகளை காகிதங்களில் குறித்து வைத்து, தேவைப்படும் போது சரி பார்த்துக் கொள்வதற்கான பதிவுகளை மனிதர்களே மேற்கொண்டனர்.
இயந்திரங்கள் போல இப்படி கணக்குகளை போட்டுத்தந்தவர்களே கம்ப்யூட்டர் என குறிப்பிடும் வழக்கம் இருந்திருக்கிறது. அந்த கால அறிவியல் இலக்கியங்களிலும் இதே பொருளில் தான் கம்ப்யூட்டர் எனும் சொல் குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்களில் கணக்கு போடுவதில் அபாரத்திறன் கொண்டவர்களை கம்ப்யூட்டர் எனக் குறிப்பிடும் வழக்கம் காரணமாகவே, கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்பட்ட போது அவை மின்னணு கம்ப்யூட்டர்கள் அல்லது டிஜிட்டல் கம்ப்யூட்டர்கள் என குறிப்பிடும் வழக்கம் இருந்தது.
இத்தகைய மனித கம்ப்யூட்டர்களுக்கு முக்கிய உதாரணமாக அமைந்த வானவியல் ஆய்வில் முக்கியப் பங்காற்றிய ஹார்வர்டு கம்ப்யூட்டர்கள் என வர்ணிக்கப்பட்ட பெண் ஆய்வாளர்கள் பற்றி கடந்த வாரம் விரிவாகப் பார்த்தோம்.
’ஹார்வர்டு கம்ப்யூட்டர்கள்’ போலவே, இன்னும் பல துறைகளில் மனித கம்ப்யூட்டர்கள் பங்காற்றியிருக்கின்றனர். அவர்களில் பெண்களே பிரதானமாகவும் இருந்திருக்கின்றனர்.
கம்ப்யூட்டர் முன்னோடி
இந்த வரிசையில் வரும் ’ஜெர்ட்ரூட் பிளான்க்’ (Gertrude Blanch) மனித கம்ப்யூட்டர்களில் மிகவும் முக்கியமானவராகவும், கடைசியாக வருபவராகவும் கருதப்படுகிறார். அமெரிக்காவில் மாபெரும் பொருளாதார தேக்கம் நிலவிய காலத்தில், சிக்கலான கணக்குகளுக்கு எல்லாம் எளிதாக விடை காண உதவும் கணித வாய்ப்பாடு புத்தகங்களை உருவாக்கியதோடு, கம்ப்யூட்டர் அல்கோரிதம் செயல்பாட்டிலும் இவர் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.
நவீன கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு வந்த காலத்திலும், அதன் வளர்ச்சியில் பங்காற்றிய பிளான்கிற்கு கணிதத்தில் இருந்த ஆர்வமே இதற்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது.
பிளான்கின் வாழ்க்கை கதை திரைப்படக் கதை போல திருப்பங்கள் கொண்டதாக இருக்கிறது.
பிளான்க் கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் போலந்தின் வார்சாவில் பிறந்து வளர்ந்தார். பெற்றோர்கள் அவருக்கு வைத்த பெயர் ’கிட்டல் கைமோவிட்ஸ்’ (Gittel Kaimowitz). ஏழு பிள்ளைகளில் கடைசியாக அவர் அமைந்தார். கிட்டலின் தந்தை கைமோவிட்ஸ், வேலைவாய்ப்பை தேடி அமெரிக்கா குடிபெயர்ந்தார். 1907ல் அவரது மனைவி, கிட்டல் மற்றும் இன்னொரு பெண்ணை அழைத்துக்கொண்டு அமெரிக்கா சென்றார்.
அமெரிக்காவின் நியூயார்க் – புருக்ளின் நகரில் இருந்த பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்ற கிட்டல் 1914ல் தனது பெயரை ஜெர்ட்ருட் பிளான்க் என மாற்றிக்கொண்டார். அதே காலத்தில் அவரது தந்தை இறந்துவிட்டதால் தாய்க்கு உதவ அவர் குமாஸ்தாவாக வேலை பார்க்கத் துவங்கினார். அடுத்த 13 ஆண்டுகளுக்கு அவர் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டாலும், உயர் கல்வியை தொடர வேண்டும் எனும் ஆர்வம் அவரிடம் இருந்தது.
கணித ஆர்வம்
1927ல் அவரது தாயும் இயற்கை எய்தியது இன்னும் சோதனையாக அமைந்தாலும், பிளான்க் மனம் தளர்ந்துவிடாமல் மேற்படிப்பை தொடர தீர்மானித்தார். காலையில் வேலை செய்தபடி, வாஷிங்டன் ஸ்கொயர் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து படிக்கத்துவங்கினார். அப்போது அவருக்கு 30 வயது. படிப்பில் கவனம் செலுத்துவதற்காக அவர் வேலையை விட்டுவிட தீர்மானித்தார். ஆனால், அவர் வேலை பார்த்த கடையின் உரிமையாளர் திறமைசாலியான பிளான்க் வேலையில் தொடர்வதை விரும்பினார்.
வேலையில் தொடர்ந்தால் கல்விக்கட்டணத்தை ஏற்பதாக உரிமையாளர் கூறியதை பிளான்க் ஏற்றுக்கொண்டார். வேலை பார்த்துக்கொண்டே படிப்பை தொடர்ந்தவர் 1932ல் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் முதுகலை பட்டமும் பெற்றவர் கார்னல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திலும் பதிவு செய்து கொண்டார்.
அவரது முனைவர் பட்ட கட்டுரை கணித சஞ்சிகை ஒன்றில் வெளியாகி கவனத்தை பெற்றுத்தந்தது. ஆனால், அவரது வாழ்க்கை தடுமாற்றமாகவே இருந்தது. விடுப்பில் சென்றிருந்த பேராசிரியர் ஒருவருக்கு பதிலாக வேலை கிடைத்தது. மேலும், புக் கீப்பராகவும் பகுதி நேர வேலை பார்த்து வந்தார்.
படித்த படிப்பிற்கு ஏற்ற ஆங்கீகாரமும் வேலையும் கிடைக்கவில்லை என்ற கவலையை விட ஆர்வத்துடன் கற்றுக்கொண்ட கணித பாடத்தை பயன்படுத்த முடியவில்லை என்ற கவலையே அவருக்கும் அதிகம் இருந்தது. கணித ஆற்றலை கைவிடாமல் இருக்கும் நோக்கத்துடன் ஆர்னால்டு லோவன் எனும் பேராசிரியரின் மாலை நேர வகுப்பில் சேர்ந்தார். இதுவே அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
மாபெரும் திட்டம்
பேராசிரியர் லோவன் அப்போது பணிகள் முன்னேற்ற திட்டம் (Works Progress Administration) எனும் திட்டத்திற்கு தலைமை ஏற்றிருந்தார். அமெரிக்காவில் மாபெரும் பொருளாதார தேக்கநிலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த சூழலில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வேலைகளை அளிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, வேலையில்லாமல் இருந்த கணித பட்டதாரிகளுக்கு உதவுவதற்காக கணித வாய்ப்பாடு பட்டியல் திட்டமும் (Mathematical Tables Project) கொண்டு வரப்பட்டிருந்தது. பிளான்க் கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பதை அறிந்த லோவன், இந்த கணித திட்டத்தில் இணையுமாறு கேட்டுக்கொண்டார்.
பணிகள் நிர்வாகத் திட்டம் வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பல்வேறு பயன்பாடுகளையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. அரசு பணத்தை விரையமாக்குவதாக இந்தத் திட்டம் சர்ச்சைக்கு உள்ளாகிய நிலையில், கணித வாய்ப்பாடு திட்டமும் விமர்சனத்திற்கு இலக்கானது.
விமர்சனத்தை மீறி கணித வாய்ப்பாடு பட்டியல் திட்டம் முன்னோடி திட்டமாக அமைந்தது. அதற்கு பிளான்கின் பங்களிப்பே மூலக்காரணமாக அமைந்தது. இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தையும், அதில் பிளான்கின் பங்கையும் புரிந்து கொள்ள திட்டம் செயல்படுத்தப்பட்ட காலகட்டத்தை நினைவில் கொள்ள வேண்டும். இந்த திட்டம் 1938ல் துவங்கிய போது, கம்ப்யூட்டர் எனும் இயந்திரம் பெரும்பாலும் ஆய்வு நிலையிலேயே இருந்தது.
ஆய்வுக்கு துணை
இந்த காலகட்டத்தில் முக்கியப் பணிகளுக்குத் தேவையான கணக்குகளை போடும் பொறுப்பை மனிதர்களே மேற்கொண்டனர். அதிலும் குறிப்பாக கணித திறன் கொண்ட பெண்களே அதிகம் மேற்கொண்டனர். சிக்கலான கணக்குகளை பயன்படுத்த வேண்டிய துறைகளில் அவற்றுக்கு விடை காணும் தேவை பரவலாக இருந்தது. ராணுவம், கடற்படை, மக்கள்தொகை கணக்கெடுப்பு என பல்வேறு துறைகளில் கணக்குகளை கையாள வேண்டிய தேவை இருந்தது.
இவற்றை எல்லாம் இயந்திரங்கள் வசம் ஒப்படைத்துவிடலாம் எனும் நிலை இன்னமும் உருவாகாத நிலையில், கணிதவியல் சமன்பாடுகளை கையாளும் இடங்களில் அவற்றுக்கு எளிதாக விடை காண்பதற்கான வாய்ப்பாடு வடிவங்களை உருவாக்கித்தருவதை கணித வாய்ப்பாடு பட்டியல் திட்டம் நோக்கமாகக் கொண்டிருந்தது. இதை நிறைவேற்றித் தருவதற்காக தான் 450 பெண்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களை வழிநடத்தும் பொறுப்பை பிளான்க் ஏற்றுக்கொண்டிருந்தார்.
அல்கோரிதம் வழி
மனித கம்ப்யூட்டர்கள் என வர்ணிக்கப்படும் இந்த பெண்களில் பலர் அடிப்படை கணிதம் மட்டுமே அறிந்தவர்களாக இருந்தனர். பலருக்கு கணித பயன்பாட்டில் முறைப்படியான பயிற்சியும் இல்லாமல் இருந்தது.
எனவே, அவர்களைக் கொண்டு மாபெரும் சிக்கலான பிரச்சனைகளுக்கு விடை அளிக்கும் மாபெரும் கணித வாய்ப்பாடுகளை உருவாக்குவது என்பது பெரும் சவாலாக இருந்தது. பிளான்க் இந்த சவாலை வெகு நேர்த்தியாக கையாண்டார்.
கணிதவியல் சமன்பாடுகளை அவர் சிறு சிறு பகுதிகளாக பிரித்தளித்து அவற்றை தனித்தனியாக பெண்கள் கையாள வைத்தார். இந்த கணக்குகளை போடுவதற்கான முறையை உருவாக்கிக் கொடுத்து அவற்றை சுயமாக சரி பார்க்கும் வழியையும் முன்வைத்தார். இதன் மூலம் பெண்கள் கணக்குகளின் சிறு பகுதியை முடித்துக்கொடுத்தனர்.
அவை சரி பார்க்கப்பட்டு மொத்தமாக இணைக்கப்பட்டு தீர்வுகளாக உருவாக்கப்பட்டன.
இப்படி பெரிய கணக்குகளை சின்ன சின்ன பணிகளாக பிரித்துக்கொடுத்து அவற்றை ஒவ்வொரு கட்டமாக கையாளும் உத்தி பின்னர் கம்ப்யூட்டர் செயல்பாட்டிலும் அடிப்படையாக அமைந்தது.
கணித வாய்ப்பாட்டிற்குத் தேவையான கணக்கு விடைகள் பற்றி பிளான்கிற்கு தெளிவான புரிதல் இருந்ததால், தனக்கு கீழ் பணியாற்றிய பெண்களைக் கொண்டு அவற்றுக்கான துணை கணக்குகளை அவரால் எளிதாக பெற முடிந்தது. இந்த கணித வாய்ப்பாடுகள் பட்டியல் நடைமுறையில் பல துறைகளில் பயன்பட்டது. சில ஆண்டுகளில் மொத்தம் 28 பகுதிகள் கொண்ட தொகுப்பாக இவை வெளியிடப்பட்டன. இந்த புத்தகங்கள் எந்தவித பிழையும் இல்லாமல் இருந்தன.
சிக்கலான கணக்கீடுகளுக்கு எல்லாம் இவற்றின் பக்கங்களை புரட்டி விடை காண முடிந்தது. பிளான்க் கணக்குகளை வேகமாக போடுவதற்காக உருவாக்கிக் கொடுத்த வழிமுறைகள் இன்றும் பின்பற்றப்படுவதோடு அல்கோரிதம்களுக்கான அடிப்படை அம்சங்களில் ஒன்றாகவும் அமைகின்றன.
1943ல் நிர்வாக திட்டம் கைவிடப்பட்ட நிலையிலும் கணித வாய்ப்பாடு திட்டம் தடையில்லாமல் தொடர்ந்தது. பின்னர், தேசிய தர நிர்ணய அமைப்பில் கணக்கிடுதல் துறையின் கீழ் இணைக்கப்பட்டது. இதனிடைய மின்னணு கம்ப்யூட்டர்கள் தொடர்பான ஆய்வு முயற்சிகளும் தீவிரம் அடைந்திருந்தன.
அமெரிக்காவில் மின்னணு கம்ப்யூட்டரை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்த குழுவில் பிளான்கும் இணைந்து கொண்டார். இந்த குழுவே பின்னர் கம்ப்யூட்டர் இயந்திரங்களுக்கான சங்கமானது. பின்னர் நியுமரிகல் அனாலசிஸ் கழகத்தின் இயக்குனராக பொறுப்பெற்றார். 70 வயதை நெருங்கும் போது ஓய்வு பெற்றவர், 1996ல் இயற்கை எய்தும் வரை கம்ப்யூட்டர் துறையுடன் ஏதேனும் ஒரு விதத்தில் தொடர்பில் இருந்தார்.